வெண்பா மேடை - 81
சீர் முரண் தொடை வெண்பா!
இன்பக் குறணெறியால் துன்ப நிலைநீங்கும்!
குன்றும் மனமோங்கும்! சீர்..கூடும்! - இன்றமிழின்
மென்மையை வன்மையை மீட்டும்!நீ கற்றுணர்வாய்
நன்மையைத் தீமையை நன்கு!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
வெண்மை x கருமை
பெருமை x சிறுமை
நெடுமை x குறுமை
இளமை x முதுமை
விண் x மண்
தீ x நீர்
ஒளி x இருள்
மேல் x கீழ்
உயர்வு x தாழ்வு
பகை x நட்பு
என்பன போன்ற தமக்குள் முரண்படும் சொற்கள் தமிழில் நிறைய உள்ளன. அவற்றைப் பாடலின் அடித் தொடக்கங்களில் அமைத்து எழுதுவதை அடி முரண் தொடை என்பார்கள். ஓர் அடியின் சீர்களில் அமைத்து எழுதுவதைச் சீர் முரண் தொடை என்பார்கள்.
மேற்கண்ட வெண்பாவில் முதல் அடியில் இன்பம் x துன்பம், என்ற முரண் அமைந்துள்ளது.
இரண்டாம் அடியில் குன்றும் x ஓங்கும் என்ற முரண் அமைந்துள்ளது. மூன்றாம் அடியில் மென்மை x வன்மை என்ற முரண் அமைந்துள்ளது. நான்காம் அடியில் நன்மை x தீமை என்ற முரண் அமைந்துள்ளது.
விரும்பிய பொருளில் 'சீர் முரண் தொடை வெண்பா' ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். [மேலுள்ள வெண்பாவில் நான்கு அடிகளிலும் சீர் முரண் அமைந்துள்ளது.] [தங்கள் எழுதும் வெண்பாவில் இரண்டடிகளில் அமைந்தால் போதும், அதற்குமேலும் அமையலாம்
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் சீர் முரண் தொடை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
17.07.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire