வெண்பா மேடை - 78
துாது வெண்பா
பொங்கும் கனவுகளால் பொற்புடை நற்புலவன்
மங்கும் மனமுற்று வாடுகிறேன்! - மங்கையிடம்
செங்கண் கருங்குயிலே! சென்று..நீ கூறுவாய்
இங்கென் நிலையை எடுத்து!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
செங்கால் மடநாராய்! தென்னுறந்தை சேறியேல்
நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும்! - நன்பால்
கரையுரிஞ்சி மீன்பிறழுங் காவிரிநீர் நாடற்[கு]
உரையாயோ யானுற்ற நோய்!
[முத்தொள்ளாயிரம்]
ஓடும் முகில்இனங்காள்! ஓடாத தேர்சுமந்த
கூடு வருகுதென்று கூறுங்கோள்! - நாடியே
நந்திச் சீராமனுடை நன்னாட்டில் நாயகியைச்
சந்திச்சீர் ஆமாகில் தான்!
[நந்திக் கலம்பகம்]
அன்னமே நீயுரைத்த அன்னத்தை என்னாவி
உன்னவே சோரும் உனக்கவளோ - டென்ன
அடைவென்றான்! மற்றந்த அன்னமதை முன்னே
நடைவென்றாள் தன்பால் நயந்து!
[நளவெண்பா 43]
வாவி யுறையும் மடவனமே என்னுடைய
ஆவி உவந்தளித்தாய் ஆதியால் - காவினிடைத்
தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி என்றுரைத்தாள்
பார்வேந்தன் பாவை பதைத்து!
[நளவெண்பா 43]
துாது எனும் சொல் செய்தி எனும் பொருளைத் தரும். ஒருவர் பிறிதொருவருக்குத் தான் கூறக் கருதிய செய்தியை அஃறிணைப் பொருள்கள் வழியாகவே, உயர்திணையின் வழியாகவே அனுப்பிச் சேர்ப்பிப்பது துாதுவிடல் எனப்பெறும்.
துாது என்பது ஓர் அரசன் தன் பகையரசன்பால் தன் கருத்தைத் தெரிவிக்கவேண்டித் தன் அமைச்சியலின் ஐம்பெருங்குழுவில் ஒன்றாய் அமைந்த துாதுவர் மூலம் கூறிவிடுக்கும் பொருளமைந்தது.
அகத்துாது செய்திகளே இலக்கியங்களில் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. புறத் துாதுகள் சிலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன.
விரும்பிய பொருளில் துாது வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் துாது வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.07.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire