vendredi 18 juillet 2014

அணி இலக்கணம் - 2



சொற்பின் வருநிலையணி

முன் பதிவில் சொற்பொருள் வருநிலையணியைக் கண்டோம். ஒரு செய்யுளில் ஒரு சொல் அதே பொருளில் பலமுறை வருவதைச் சொற்பொருள் வருநிலையணி எனப்படும். இதற்கு எதிர் நிலையாக ஒரு சொல் வேறு வேறு பொருளில் பலமுறை பயின்று வருவது சொற்பின் வருநிலையணி எனப்படும்.

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை"

உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி  அவற்றை உண்பவர்க்குத் தானும் உணவாய் நிற்பது மழை ஆகும்.

துப்பு = உண்ணுதல், தூய, உணவு

எனத் "துப்பு" என்னும் ஒரு சொல் பலமுறை வேறு வேறு பொருளில் பயின்று வந்துள்ளதால் இக்குறளில் சொற்பின் வருநிலையணி அமைந்துள்ளது.

------------------------------------------------------------------------------------------------------

1.
மரைக்கண் தொடுக்கும் மரைப்பார்வை கண்டு
மரையெனப் போகும் மனம்!

மரை = தாமரை, மான், தவளை, திருகுதல்.

2.
மதியவள் என்னை மதியாது பார்க்க
மதியுறும் இன்ப மயக்கு!

மதி = நிலவு, திமிர், அறிவு.

3.
மடலென நெஞ்சுள் மணக்கும் மடல்கள்
மடலுற ஏகும் மனம்!

மடல் = தாழை, கடிதம், மடலேறுதல்.

4.
கொடிபறக்கும்! மண்ணில் கொடிதழைக்கும்! அன்பின்
கொடிதொடுக்கும் மின்னற் கொடி!

கொடி =  துணிக்கொடி, மலர்க்கொடி, அன்புக்கயிறு, மின்னிடை.

5.
கண்டுமலர் கண்டு கவிமனம் கட்டுண்டு
கண்டாகச் சுற்றுதடி கண்!

கண்டு = தேன்மலர், காணுதல், நூற்கண்டு.

6.
அணியிழை தந்த அணியொளிர் வாழ்க்கை
அணித்தமிழ் நல்கும் அமுது!

அணி = அழகு, பெருமை, இலக்கணம்

7.
பொன்றளைத் தாள்கண்டு பூந்தளை பின்கண்டு
வெண்டளை மேவும் விரைந்து!

தளை = சிலம்பு, மலர்ச்சரம், வெண்பா

8.
நற்றகை நங்கையின் பொற்றகை போற்றிடச்
சொற்றகை ஊறும் சுடர்ந்து!

தகை = பெருமை, அழகு, இயல்பு

9.
தையல் நடம்புரியும் தையல், எனதுயிரைத்
தையலெனத் தைத்தாள் தனித்து!

தையல் = அழகு, பெண், துணி தைத்தல்.

10.
சிலையழகுக் செல்வியவள் சீரழகு கண்டு
சிலையழகன் ஆனான் சிலை!

சிலை = மலை, வில், கற்சிலை

கவிஞா் கி. பாரதிதாசன்
18.07.2014

30 commentaires:

  1. கவிதைக்கு அணியாய் விளங்கும் அணி இலக்கணம் பற்றிய தெளிவான விளக்கங்களை தந்திருக்கிறீர்கள் ஐயா. யாப்பிலக்கணமும் கற்றுக் கொள்ள ஆவல்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாக்கள் படைத்திடும் பாடங்கள் தந்திடுவேன்!
      ஏக்கம் இனியேன் இயம்பு?

      Supprimer
  2. தங்கள் மூலம் அறியாத தமிழ் படிக்கிறேன் ஐயா.....

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அறிந்த அருந்தமிழை அள்ளி அளித்தேன்
      சிறந்த கவிதைகளைச் சோ்த்து!

      Supprimer
  3. வணக்கம்
    ஐயா

    இலக்கணம் பற்றி தெளிவான விளக்கம் நானும் அறிந்து கொண்டேன். இதைப்போன்று பதிவுகள் மலரட்டும் இன்னும் பல.. நன்றி ஐயா
    த.ம 5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிக்கும் இலக்கணம் என்றும் மணக்கும்!
      மனத்துள் பதிப்பாய் மகிழ்ந்து!

      Supprimer
  4. அறியாத செய்திகள்
    தெளிவான விளக்கங்கள்
    நன்றி ஐயா
    தம 6

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      கரந்தைத்தமிழ்ச்சங்கம் காத்த நெறியேற்று
      தருவேன் தமிழைத் தழைத்து!

      Supprimer
  5. பள்ளியில், கல்லூரியில், தமிழ் வகுப்பில் கற்றது. தற்போது தங்களிடமிருந்து இன்னும் விரிவாகக் கற்கின்றோம்! யாப்பும் நினைவு கூர ஆவல்!

    மிக்க நன்றி ஐயா! தொடர்கின்றோம்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      யாப்பென்னும் தோப்பினில் சாப்பிட வந்தவரைக்
      கூப்பிட்டே கைகள் குவித்து!

      Supprimer
  6. வணக்கம் ஐயா!

    அருமை இதுவன்றோ!
    இலக்கண விளக்கமும் தொடர்ந்து உங்கள் குறள்களும்
    அத்தனையும் இனிமை!
    கற்கக் கற்க மகிழ்வே மேலும்!..
    மிக்க நன்றி ஐயா! வாழ்த்துக்கள்!
    இதுபோல் ஏனைய இலக்கணங்களையும் தொடர வேண்டுகிறேன்!

    எனது சிறு முயற்சி!..

    உரைத்தனை ஊனுயிர் தானுரைய நன்றே!
    உரைநூலும் காட்டா துணர்வு!

    அதிகம் எழுத இன்று எனக்கு இப்போ நேரம் போதவில்லை.
    பின்னர் வேறு எழுதி வருகிறேன். நன்றி ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சொல்லிய வண்ணம் சுவைத்திடும் பாட்டெழுதி
      நல்கிய உன்செயல் நன்று!

      Supprimer
  7. கற்றுக் கொள்கிறேன்... நன்றி... விளக்கம் மிகவும் அருமை ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கற்க வயதேது? காலம் புகழுரைக்க
      கற்போம் கலையைக் கமழ்ந்து!

      Supprimer
  8. கவிபாடும் பாட்டால் கவிகற்ற நானோ
    கவிபோல் குதித்தேன் கவி!

    கவி – கவிதை, கவிஞன், குரங்கு, குரு, ஞானி
    18.07.2014

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவிபோல் குதித்த கவியே! கவியால்
      புவிமேல் பதிப்பாய் புகழ்!

      Supprimer

  9. சிறந்த பாவிலக்கணத் தெளிவு
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      யாழ்நகா் பாவலா்! ஏந்தும் தமிழ்ப்பணியை
      தாழ்ந்து வணங்கும் தலை

      Supprimer

  10. நாளும் இதுபோல் நறுந்தமிழ் நல்லணியை
    ஆளும் கவியே! அருந்தோழா! - மூளும்என்
    எண்ணத்தை இங்கே எழுதுகிறேன்! இன்கவிதை
    வண்ணத்தை அள்ளி வழங்கு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எந்தை அருங்கவிஞா் தே.ச எனும்நாமம்!
      சிந்தை முழுதும் கவிச்செழுமை! - விந்தையெனப்
      பாக்கள் படைப்பார்! அவா்தந்த பைந்தமிழைப்
      பூக்களெனப் பூப்பேன் பொலிந்து!

      எந்தையின் பெயா்
      கலைமாமணி
      கவிஞா் தே. சனாா்த்தனன் என்ற கிருட்டினசாமி

      Supprimer
  11. வணக்கம் ஐயா

    தங்கள் மூலம் இலக்கணம் கற்கின்றோம்.
    நன்றி.

    ஏதோ எனக்கு தெரிந்தவரையில் இங்கு...ஒரு முயற்சி

    அணியறியா எமக்கணி செப்பி அணிச்செயல்
    அணியாய் புரிந்தீர் ஐயா.

    நன்றி.

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      பற்றுடை நெஞ்சுள் பசுந்தமிழ் வந்தாடும்
      பொற்புடைப் பாக்கள் பொலிந்து!

      Supprimer
  12. அணி இலக்கண விளக்கம் அணி சேர்த்தது! குறள்கள் அழகு! நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அகத்தைப் பறிக்கும் அணியின் அழகு!
      மிகும்சுவை நல்கும் மிளிா்ந்து!

      Supprimer
  13. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

    நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
    Happy Friendship Day 2014 Images

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நன்றி நவில்கின்றேன்! நண்பா் தினமெண்ணி
      இன்றே அளித்தேன் இனிப்பு!

      Supprimer
  14. கவிஞரே!

    பெருமை பெருமைக் கண்டு-அருந்தமிழ்
    பெருமை உரைத்தாய் நன்று!

    புதுவை வேலு

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமைக் கருத்தால் பெருமை அடைந்தேன்!
      வருகை வளா்ந்திட வாழ்த்து!

      Supprimer
  15. வாழ்த்துக்கு நன்றி!
    "புவி செழிக்க கவி வளரும்"

    புதுவை வேலு

    RépondreSupprimer
  16. சிறந்த பதிவு. இது வரை அறிந்திராத சங்கதிகள். படித்துப் பயனடைந்தேன். மிக்க நன்றி.

    RépondreSupprimer