lundi 14 juillet 2014

கவிப்பேரரசு வைரமுத்து




கவிப்பேரரசு வைரமுத்து

மணிவிழா வாழ்த்து!

நற்கவிப் பேரரசே! நன்வைர முத்துவே!
பொற்கவி பாரதிநான் போற்றுகிறேன்! - நற்றமிழ்
மின்னும் புகழேந்தி வீர முகமேந்தி
இன்னுமோர் நூற்றாண்டு இரு!

மணிவிழா இந்நாள்! வளர்தமிழ் அன்னை
அணிவிழா இந்நாள்! அமுதின் - பணிவிழா
என்றும் இசைத்திடலாம்! இன்கவி பேரரசே!
இன்னுமோர் நூற்றாண்டு இரு!

சந்தக் கவிதைகளின் சொந்த உறவானாய்!
எந்தம் இதய இனிப்பானாய்! - தந்ததன
சொன்ன உடன்பாடும் தூயகவிப் பேரரசே!
இன்னுமோர் நூற்றாண்டு இரு!

உன்றன் தமிழ்படித்தே ஓங்கும் கவிகற்றேன்!
இன்பத் தமிழின் எழில்பெற்றேன்! - என்றென்றும்
மன்னுபுகழ் வாணரே! மாக்கவிப் பேரரசே!
இன்னுமோர் நூற்றாண்டு இரு!

படைத்த சுவடிகளின் பக்கங்கள் யாவும்
அடைத்தேன்! அகத்துள் அடைத்தேன்! - கடைவிரித்தே
கன்னல் தமிழளித்த இன்கவிப் பேரரசே!
இன்னுமோர் நூற்றாண்டு இரு!

13.07.2014

27 commentaires:

  1. மணிவிழா வாழ்த்து! - நன்று
    சிறப்பான ஒன்று!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மணிவிழாப் பாவலரை வாழ்த்தித் தமிழின்
      அணிவிழாஆக்கல் அழகு!

      Supprimer
  2. சிறப்பான மணிவிழா வாழ்த்துரை ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிறந்த கவிஞரின் சீா்களைச் சொல்லப்
      பறந்து மிதக்கும்என் பாட்டு!

      Supprimer
  3. வணக்கம் ஐயா!

    மணிவிழா மன்னனுக்கு மாண்புமிகு வாழ்த்து!
    அணியான வெண்பா அழகு! - கனிவுமிகும்
    கன்னற் கவிஞரே! காப்பிய மாமழையே!
    மின்னுதே பாக்கள் மிளிர்ந்து!

    மணிவிழாக் காணும் கவிப்பேரரசு வைரமுத்து ஐயாவுக்கும்
    என் கனிவான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ஐயா.. அருமையான வெண்பா வாழ்த்து மாலை!

    மகிழ்வோடு உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மின்னும் கவிபடைத்த மேன்மைக் கவியரசு
      என்னுள் இருப்பார் இனித்து!

      Supprimer
  4. நன்வை"நற்கவிப் பேரரசேர முத்துவே!
    பொற்கவி பாரதி நான் போற்றுகிறேன்
    கவிஞர். கி.பாரதிதாசன்.

    பொற்கவி பாரதிதாசனே! செம்மொழியாம்-தமிழ்
    சிற்பி நான் வடிக்கின்றேன் உந்தன் புகழை
    உண்மையென்னும் உளிக் கொண்டு- நீயென்றோ!
    நற்றமிழ் என்னும் நாற்காலியில் அமர்ந்திட்டாய்
    அதனால்தான்கம்பன் கழக வானில்...
    சுற்றும் சூரியனாய் திகழ்ந்திட்டாய்.

    புதுவை வேலு

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நற்றமிழ் என்றன் நறுந்தவத் தாயென்க!
      உற்ற உயிரின் ஒளி!

      Supprimer

    2. வணக்கம்!

      தமிழ்ச்சிற்பி என வல்லினம் மிக வேண்டும்
      உந்தன் என்பதை உன்றன் என்று எழுத வேண்டும்!

      புதுவை வேலு அவா்களே தமிழ் நாற்காலி அன்று
      தமிழ் என் தாய்! தமிழ் என் உயிா்!

      கம்பன் கழக வானில் சூாியனாய்ச் சுற்றுகிறாய் என்பது பொருட்பிழை
      சூாியன் சுற்றவதில்லை!

      என்ன எழுதுகிறோம் எங்கே எழுதுகிறோம்
      நன்றே உணா்ந்தால் நலம்!

      Supprimer
  5. வணக்கம் கவிஞரையா!

    கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு
    இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்!

    அருமையான கவிவாழ்த்து! ரசித்தேன்...

    ”இன்னுமொரு நூற்றாண்டு இரு”
    இப்படி உங்களையும் நான் வாழ்த்துகிறேன் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பூங்கொடி தந்தார் புகழ்க்கொடி! அச்சொற்கள்
      தேங்கனி நல்கும்தித் திப்பு!

      Supprimer
  6. சிறந்த வாழ்த்துரை
    நன்றி ஐயா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வல்ல கவியரசின் வாழ்த்து கவிதைகள்
      சொல்லச் சுரக்கும் சுவை!

      Supprimer
  7. வணக்கம்
    ஐயா.
    மணிவிழா அகவையில் மனிதம் போற்றும்
    மாமனிதருக்கு வாழ்த்துரை வாழ்த்திய
    கவிப்பா கண்டு மகிழ்ந்தேன்
    கவிஞர் ஐயா...

    மிக அருமையாக உள்ளது கவிப்பா... பகிர்வுக்கு நன்றி ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வல்ல புலமையை வாழ்த்தி மகிழ்ந்திடுவோம்!
      நல்ல தமிழ்என நாம்!

      Supprimer
  8. வணக்கம்
    த.ம 7வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  9. ஔவையார் வஞ்சபுகழிச்சி உதாரணத்தை புதுவை வேலு அவர்கள் வைரமுத்துவின் மணிவிழா கவிதைக்கு நல்ல எடுத்துக்காட்டாக பயன்படுத்திய வலிமையான வரிகளுக்கு நன்றி

    sattia

    RépondreSupprimer
    Réponses

    1. பள்ளிப் பருவத்தில் பாடம் பயின்றதை
      அள்ளி அளித்தல் அழகென்பேன்! - துள்ளிவரும்
      மான்அன்று நான்விளை யாட! மணித்தமிழென்
      ஊன்என்று உயிரென்று உணா்!

      Supprimer
  10. மணிவிழா வாழ்த்து - அருமை...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகைக்கும் வாழ்த்துக்கும் என்நன்றி! நட்பின்
      அருமை அணிகள் அளித்து!

      Supprimer
  11. இன்னுமோர் நூற்றாண்டு இருஎன
    இயற்றிய பாக்கள் இனிது !

    மணிவிழா காணும் கவிப்பேரரசுக்கு
    என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      செவிபுகும் செந்தமிழ் சிந்தையில் நிற்கும்!
      புவிபுகழ் வாணா் பொலிவு!

      Supprimer

  12. மணிவிழா காணுகின்ற மாப்புகழ் வைரமுத்துப்
    பணியெலாம் சந்தங்கள் பாடும்! - துணிவுடன்
    பாடிப் பறந்தகவி! பாரதிபோல் பைந்தமிழைச்
    சூடி சுடா்ந்தகவி! சொக்கு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாடிப் பறந்தகவி! பாரதிபோல் பைந்தமிழைச்
      சூடிச் சுடா்ந்தகவி! சொக்குகிறேன்! - கோடியெனப்
      பொன்னிருந்தால் கொட்டிக் கொடுப்பேன்! அவா்பாக்கள்
      இன்விருந்தாய் ஊறும் இனிப்பு!

      Supprimer
  13. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-7.html?showComment=1409445973167#c7251801609786561377

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer