mardi 22 juillet 2014

மூங்கில் காற்று முரளிதரன்




மூங்கில் காற்று முரளிதரன்
பிறந்தநாள் வாழ்த்துமலா்

எங்கள் முரளிதரன் சங்கத் தமிழினிமை
பொங்கும் தமிழனெனப் போற்று!

அன்பு முரளிதரன் ஆய்ந்த கருத்தெல்லாம்
இன்புறச் செய்யும் இனிப்பு!

வல்ல முரளிதரன் வண்ண வலைப்பதிவின்
செல்ல மகனெனச் செப்பு!

நண்பர் முரளிதரன் நன்மூங்கில் காற்றானார்
பண்ணின் இனிமை படைத்து!

இன்தேன் முரளிதரன் ஈடில் தமிழாகப்
பொன்போல் வாழ்க பொலிந்து!

கன்னல் முரளிதரன் கற்கண்டுப் பாக்களையே
என்றும் பொழிக இனித்து!

வெல்க முரளிதரன் மேன்மை நெறியேற்று
மல்க புகழுடன் மாண்பு!

இனிய முரளிதரன் எல்லாம் அடைந்து
கனிபோல் சுவைவளம் காண்!

சீரார் முரளிதரன் செந்தமிழ் காக்கின்ற
பேரார் பெருமைப் பெருக்கு!

இசைசேர் முரளிதரன் என்றென்றும் வாழ்வில்
விசையுடன் காண்க விழா!

முத்தொளிர் நெஞ்சன் முரளிதரன் செம்மலர்த்தேன்
கொத்தொளிர் நெஞ்சனெனச் கூறு!

மூங்கிலிசை காற்று முரளிதரன் காண்கவே
பூங்குவளைக் காடாய்ப் புகழ்

22.07.2014

28 commentaires:

  1. மூங்கிலிசை காற்று முரளிதரன் வாழ்வில், முள்ளும் இனி முத்தமிழ் சொல்லாய் இனிக்கும். இளவலுக்கு யதுகுல நாயகன் கண்ணனின் குழல் இன்னிசை குதுகுலம் தரும் வகையில், இனிதே இசைக்கும்! வாழ்க! திருபல்லாண்டு நல்முடன்.

    புதுவை வேலு (குழல் இன்னிசை kuzhalinnisai.blogspot.com)

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கண்ணன் படமிட்டுக் கன்னல் கருத்தேழுதும்
      வண்ணம் அனைத்தும் வனப்பு!

      Supprimer
  2. பல்லாண்டு வாழ்க வென்று இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மதுரைத் தமிழெடுத்து வாழ்த்துரைத்தீா்! நன்றி
      புதுமை அணியெனப் பூத்து!

      Supprimer
  3. முரளிதரன் ஐயாவை பாமாலை புனைந்து வாழ்த்தியமை மிகச்சிறப்பு! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பூமாலை வாடுமென எண்ணிப் புகழ்தமிழில்
      பாமாலை தந்தேன் பணிந்து!

      Supprimer
  4. மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து அனைவரின் உள்ளம் புகும் திருமிகு முரளிதரன் ஐயா அவர்களைப் பற்றிய பாடல் அருமை இனிமை
    நன்றி ஐயா
    தம 4

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உாிமையாய் யானிங்கே ஓதிய பாக்கள்
      அருமையாய் மின்னும் அணி!

      Supprimer
  5. மூங்கில் காற்றினிசை ஐய்யாவால் முரளிதரனுக்கு
    குறளிசையாய் வாழ்த்த வந்தது.

    அருமையான குறள்கள்

    நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காற்றில் தவழும் கவிதைகள் தந்துள்ளேன்
      போற்றி மகிழும் புவி!

      Supprimer
  6. அருமை ஐயா....

    இனிய நண்பருக்கும் வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனித்ததமிழ் நண்பா் முரளிதரன் வாழ்க!
      கனிந்ததமிழ்ச் சிந்தை கமழ்ந்து!

      Supprimer
  7. முரளிதரன் வாழ்க பல்லாண்டு! பாடல் அருமை!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புலவாின் பொன்னான வாழ்த்துக்கு நன்றி!
      குலவும் தமிழைக் குவித்து!

      Supprimer
  8. வணக்கம் ஐயா!..

    நண்பரை வாழ்த்தி நவின்ற குறட்பா..கற்
    கண்டாய் இனித்ததே காண்!

    அருமையான குறட்பாக்கள்!
    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!
    ----------------------------------------------------------------------------

    அன்புச் சகோதரர் முரளிதரருக்கு உளமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!

    மூங்கிலின் காற்றாய் முரளிதரன் நல்வாழ்வும்
    ஓங்குகவே இன்பங்க ளுற்று!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இளமதி வந்தளித்த இன்குறள் வாழ்த்தில்
      உளம்மகிழ்ந் தாடும் உருண்டு!

      Supprimer

  9. கண்ணன் குழலிசைக் காற்றில் தவழ்ந்துவர
    எண்ணம் இளகி இனித்திடுமே! - நண்பா்
    முரளிதரன் வாழ்க! முதுமொழி யாளா்
    திருவருள் சூழ்க திரண்டு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      நண்பரை வாழ்த்தி நவின்றிட்ட வெண்பாவில்
      கண்டேன் கனிகளின் கூட்டமைப்பை! - உண்டேன்
      அருமைத் தமிழமுதை! ஆண்டதமிழ்ச் செல்வா
      பெருமை உரைத்ததென் பேறு!

      Supprimer
  10. வணக்கம் ஐயா அண்ணாச்சி முரளிக்கு இனிய வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய தமிழா் முரளிதரனை எண்ணிக்
      கனிய கொடுத்தீா் கருத்து!

      Supprimer
  11. மூங்கில்காற்று முரளிதரன் அவர்களுக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
    தங்கள் பாமூலப் பகிர்வுக்கு
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அன்பு மனத்தால் அளிக்கின்ற வாழ்த்துக்கள்
      இன்றும் இருக்கும் இனித்து!

      Supprimer
  12. Dear Admin,
    You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

    To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
    1. Facebook: https://www.facebook.com/namkural
    2. Google+: https://plus.google.com/113494682651685644251
    3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல...
    நம் குரல்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      நம்குரல் வலையகத்தில் நல்ல கவிபாடும்
      எம்குரல் ஓங்கும் இனி!

      Supprimer
  13. அருமை ஐயா! தோழர், முரளிதரன் அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகைக்கும் வாழ்த்துக்கும் என்வணக்கம் சொல்லி
      இரு..கை குவித்தேன் இணைத்து!

      Supprimer
  14. வணக்கம் ஐயா!,
    மன்னிக்கவும் ஐயா.! உடனடியாக தங்களுக்கு நன்றி தெரிவிக்க இயலவில்லை.எதிர்பாராவிதமாக இணைப்பு பழுது மற்றும் அலுவலகப் பணி காரணமாக ஐந்து நாட்களாக வலைப் பக்கம் வர இயலவில்லை. என் பிறந்த நாள்கூட எனக்கு மறந்து விட்டது.
    தங்கள் அருமையான குறட் பாக்கள் மூலம் என்னை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா . கவிமழையாகப் பொழிந்துவிட்டீர்கள். அருந்தமிழில் தாங்கள் புனைந்த பாமாலைக்கு நான் தகுதி படைத்தவன் இல்லை . என்றபோதும் தங்கள் பாவன்மையால் என்னை வாழ்த்தியுள்ளீர் கள் . மரபுக் கவிதையின் மன்னராகத் திகழும் தங்களிடம் சற்றுக் கொள்ளவேண்டியவை ஏராளமாக உள்ளன..
    இப்படி ஒரு வாழ்த்து பெறுவதுதற்கு நான் மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.. தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நன்றி .
    கருத்திட்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உன்றன் தமிழ்ப்பணிக்கு ஓதினேன் பாக்களை!
      என்றன் இதயம் இணைத்து!

      Supprimer