mardi 29 juillet 2014

செய்யுள் இலக்கணம் - பகுதி 2



 
(பாவேந்தா் பாரதிதாசன் அவா்கள் 1926 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட மயிலம் சுப்பிரமணியா் துதியமுது நுாலின் முகப்பு அட்டை)

புதுவைப் புலவன்
வெண்டளையால் வந்த எண்சீர் விருத்தம்

புதுவைப் புலவன் புகழ்த்தமிழ்ப்பா வேந்தன்
     புனைந்த மயிலம் துதியமுதைப் பாடப்
புதுமை அணிபல பூத்திடக் காண்பாய்!
     பொழிலென மின்னும் தமிழருள் ஏற்பாய்!
மதுவைக் குடித்து மயங்கிடும் வண்டாய்
     மரபைக் குடித்து மகிழ்ந்திடும் நெஞ்சம்!
பொதுமை மலர்ந்து பொலிந்திட வேண்டும்
     புரட்சிக் கவிஞன் புகன்றநெறி போற்று!

பாட்டின் இலக்கணம்

1. ஒவ்வோர் அடியும் வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.
2. ஓரடிக்கும் அடுத்த அடிக்கும் வெண்டளை கட்டாயமில்லை.
3. அரையடிதோறும் இறுதியில் தேமாச்சீர் அமையவேண்டும்.
4. மற்ற இடங்களில் காய், விளம், மாச்சீர்கள் அமையலாம்
5. ஒவ்வோர் அரையடியிலும் மூன்றாம் சீர் காய் அல்லது விளமாக அமைய வேண்டும்.
6. ஒன்று ஐந்தில் மோனை வரவேண்டும்

கவிஞா் கி. பாரதிதாசன்
29.07.2014 

20 commentaires:


  1. பாவேந்தா் பாடிய பைந்தமிழை எந்நாளும்
    நாவேந்திப் போற்றி நலம்பெறுவோம்! - பூவேந்தி
    மின்னும் பொழிலாகக் கன்னல் கவிபடைத்தீா்!
    என்னுள் இருக்கும் இனித்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மூடப் பழக்கங்கள் முற்றும் முடிவெய்த
      வாட வழிசெய்த பொய்யொழிய - பாடி
      நிலைத்தபுகழ் பெற்ற நெடுங்கவி.பா வேந்தன்
      விளைத்ததமிழ் வீரா் விருந்து!

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா.
    சீராக அடியெடுத்து சிந்தை குளிர வைத்த -வரிகள் கண்டு மகிழ்ந்தேன்பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சீரொளிா் பாவேந்தன் செய்தகவியில் செந்தமிழின்
      பேரொளிரும் என்றும் பிணைந்து!

      Supprimer
  3. அருமையான பகிர்வு! இலக்கனமும் கற்றோம்! மிக்க நன்றி கவிஞரே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கனம்என்றால் வன்சுமை! நற்கணம் என்றால்
      கணக்கிடும் கால அளவு!

      தலைக்கனம் இன்றி இலக்கணம் கற்றால்
      கலைக்கனம் மேவும் கமழ்ந்து!

      Supprimer
  4. இலக்கணம் என்று அடிக்க நினைத்து அது இலக்கனம் என்று ஆகிவிட்டது. வருந்துகின்றோம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல தமிழை நவிலும் மணங்கண்டேன்
      முல்லை மலா்உன் மொழி!

      Supprimer
  5. வணக்கம் ஐயா!

    புரட்சிக் கவிஞர் பாவேந்தன் பாரதிதாசன் அவர்களைப் பற்றி
    நீங்கள் பாடிய எண்சீர் விருத்தம் கண்டு உள்ளம் சிலிர்த்தேன்!
    மிக மிக அருமை ஐயா!.

    இவ்வகை எண்சீர் விருத்த இலக்கணமும் கண்டேன்.
    உள்ளம் துள்ளிக் குத்திக்கின்றது...
    ஓடிவந்து சீரெடுத்துப் பாட இப்பொழுது சற்று நேரக் குறைபாடாக உள்ளது.
    மீண்டும் பாட்டுடன் வருவேன்.

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாவேந்தன் தந்த படைப்புகளை எந்நாளும்
      நாவேந்திப் போற்றுவோம் நாம்!

      Supprimer
  6. வணக்கம் கவிஞரையா!

    அட அட.. அருமையாக இருக்கிறது ஐயா பாடல்.
    பாவேந்தர் புகழ் பாடிய பாக்கள் தேன் பூக்கள் ஐயா!

    இலக்கண வகுப்பு ஆரம்பித்தாயிற்றோ?.. அருமை!
    ஆனால் நானோ...
    பாடறியேன் படிப்பறியேன்
    பள்ளிக்கூடந்தான் அறியேன்
    ஏடறியேன் எழுத்தறியேன்
    எழுத்துவகை நானறியேன்.

    பார்த்து இரசிக்க மட்டும்தான் என்னால் முடியும்.
    வாழ்த்துக்கள் கவிஞரையா!!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அவையடக்கத் தோடே அளித்த கருத்துச்
      சுவைபெருக்கும் நெஞ்சுள் சுடர்ந்து!

      Supprimer
  7. இலக்கியச் சுவையோடு
    இலக்கண மணம் பரப்பும்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இலக்கியத் தேனை இலக்கணக் கண்டைக்
      கலக்கியே உண்போம் களித்து!

      Supprimer
  8. அருளை இரந்து வருகின்றேன்! நல்ல
    அறிவை அழகாய் அருள்வாயே! பாழும்
    இருளை மனத்தால் ஒழித்திடவே தாயே!
    இணையாய் ஒளியாய் வருவாயே! மேன்மைக்
    குருவை எனக்கும் உணர்த்தினையே! உன்றன்
    கொடையில் குளிர்ந்து மகிழ்கின்றேன்! கன்னற்
    கரும்பே! தமிழே! உனையேநான் போற்றிக்
    கவியால் துதிக்கக் களிப்பாயோ இன்று!

    ஐயா வணங்குகிறேன்!

    சந்தமும் சீரும் சண்டையிட
    சற்றுக் களைத்துவிட்டேன்.
    தவறுகள் இருக்கும் நிச்சயம்.
    திருத்தம் கூறுங்கள்!

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சந்தமுடன் நற்சீரும் சொந்தமுடன் வந்தாடிச்
      சிந்தனையில் நிற்கும் செழித்து!

      Supprimer
  9. அருமையான பாடலும் ,விரிவான இலக்கணமும் போட்டு இருக்கிறீர்கள்.பூங்கொடி சொன்னது தான் எனக்கும் தோன்றுகிறது.நன்றி.ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உள்ளம் உவந்திட ஒண்டமிழ் யாப்பினை
      அள்ளித் தருவேன் அருந்து!

      Supprimer
  10. கொஞ்சும் தமிழில் கொடுத்திட்ட பாடல்
    குயிலின் குரலாய் இனிக்கிறதே! ஞானம்
    மிஞ்சும் மொழியின் இலக்கணத்தைக் கண்டு
    மிரண்டு தொடுத்திட்டேன் வெண்டளையில்! என்தன்
    பிஞ்சு கவியில் பிழைகண்டால் என்னைப்
    பிடித்தே அதனைத் திருத்திடுக! வீட்டில்
    நெஞ்சில் நிறைந்த குழந்தைகளால் நானோ
    நிறைவாய்க் கவிதை எழுதவில்லை அன்றோ!!

    31.07.2014

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      வெண்டளை மின்ன விளைந்த,எண் சீா்கவியைத்
      தண்டலை பூவெனச் சாற்றுகிறேன்! - மண்ணில்
      செறிகுலை போன்று செழுந்தமிழ் தந்தீா்
      வெறிமனம் கொண்டேன் விழுந்து!

      Supprimer