mardi 13 novembre 2012

சகோதரத்துவம்!




சகோதரத்துவம்!

உலகம் தமது பையினிலே!
     நிலவும் தமது கையினிலே
உலவும் கோள்கள் அத்தனையும்
     உரிமை தமது நாட்டிற்கே!
பலமும் பணமும்  கொழுத்ததனால்
     பாரை அடக்க எண்ணுவதோ?
வளமும் நலமும் பெருகிடவே
     வருக சகோத ரத்துவமே!

நானே உலகில் உயர்ந்துள்ளேன்
     நாட்டோர் என்றன் அடிமைகளாம்!
வீணே பேசிக் குதிக்கின்ற
     வீணர் விரைவில் அழிவாரே!
தேனே நல்கும் நல்லுரையால்
     தேசம் உனக்குப் புகழ்பாடும்!
வானே உன்னை வணங்கவரும்
     வளர்ப்பாய் சகோத ரத்துவமே!

அல்லா என்ற பேரொளியே
     அடியோன் வணங்கும் திருமாலாம்!
எல்லா உயிரும் எவ்வுலகும்
     இறைவன் ஒருவன் செய்ததுவே!
பொல்லா வினையால் மதம்பேசிப்
     புவியோர் மாய்தல் புன்னெறியே!
கல்லா நெஞ்சே! இருளகலக்
     காண்க சகோத ரத்துவமே!

பஞ்சம் பசிநோய் பறந்தோட,
     பாவ வினைகள் விரைந்தோட,
தஞ்சம் இருந்த ஆணவமும்
     தானே இறங்கி மறைந்தோட,
நெஞ்சம் மனித நேயத்தை
     நினைத்து நினைத்து நெகிழ்ந்தாட,
விஞ்சும் இன்பம் நிறைந்தாட
     வேண்டும் சகோத ரத்துவமே!

இந்து முசுலீம் ஒற்றுமையாய்
     இனிதே வாழ்தல் எந்நாளோ?
முந்தும் சாதி மதப்பேயை
     முற்றும் அகற்றல் எந்நாளோ?
அந்தம் ஆதி அறிந்தவனை
     அடைய அன்பே வழியாகும்!
சிந்துக் கவிபோல் வாழ்வினிக்கச்
     செழிக்க சகோத ரத்துவமே!

3 commentaires:

  1. உலகம் தமது பையினிலே!
    // நிலவும் தமது கையினிலே
    உலவும் கோள்கள் அத்தனையும்
    உரிமை தமது நாட்டிற்கே!
    பலமும் பணமும் கொழுத்ததனால்
    பாரை அடக்க எண்ணுவதோ?
    வளமும் நலமும் பெருகிடவே
    வருக சகோத ரத்துவமே!//
    நல்ல வரிகள் அமெரிக்காவின் எண்ணத்தை அழகாகக் கூறி விட்டீர்கள்.

    RépondreSupprimer

  2. சகோதரத்துவத்தை மிகச்சிறப்பாக பகிர்ந்த ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    மங்களம் நிறைய,
    மகிழ்வொடு வாழ்த்துவம்!

    RépondreSupprimer