jeudi 1 novembre 2012

வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 6]

நண்பா்களின் வலைப்பூக்களில் என் கவிப்பூக்கள்

வணக்கம்!

பாலும் தேனும் கலந்தனபோல்
     பசுமைத் தமிழின் சொல்லினிக்கும்!
வேலும் வாளும் தோற்றோடும்!
     வெல்லும் தமிழின் சீா்ப்படை..முன்!
ஆலும் வேலும் பல்லுறுதி!
     நாளும் இரண்டும் சொல்லுறுதி!
நாளும் தொடா்ந்து தமிழிசையை
     நன்றே இனிக்க இசைத்திடுக!

03.10.2012

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

வலிகளைத் ஏற்றுக் கொள்க!
           
வந்தவை தாமே போகும்!
உளிகளைப் பாராய்! தாங்கி
           
உளங்கவா் சிலையைச் செய்யும்!
கிளிகளைக் கூண்டில் வைத்துக்
           
கேட்டிடும் குரலா இன்பம்?
ஒளிகளை விஞ்சும் வண்ணம்
           
ஓடிடும் மனத்தை வெல்க!

வணக்கம்

அன்னைத் தமிழே! உன்னடியை
     அடியேன் தலைமேல் சூடுகிறேன்!
முன்னை முகிழ்த்த முதுமொழியே!
     முல்லைக் காடே! முத்தமிழே!
பொன்னை நிகா்த்த இவ்வலையைப்
     பொறுமை யாகப் படித்திட்டேன்!
உன்னை உடலாய் உயிராக
     உடைய கவிஞன் உவந்தனனே!

03.10.2012

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்

கவிதை வாசல் கதவுகளைக்
     காதல் கொண்டு திறந்தனனே!
புவியை மறந்து நிற்கின்றேன்!
     பூந்தேன் பருகிக் களிக்கின்றேன்!
செவியைக் குளிரச் செய்கின்ற
     சிறந்த உரையில் மகிழ்கின்றேன்!
கவியை உயிரின் காற்றாகக்
     காக்கும் கா. வாழியவே!

03.10.2012

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

நல்ல கருத்துக்களை நன்றே வழங்கிவரும்
வல்ல வலைப்பூவே வாழ்துகிறேன்! - வெல்லுதமிழ்
நுால்மீது காதல்! நுவன்ற மொழிநடக்கும்
கால்மீது காதல் கனிந்து

04.10.2012

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

இன்ப இரவின் புன்னகையாய்
     மின்னும் மதியை உரைத்திடுவார்!
என்றன் இரவின் புன்னகையாய்
     இனிய தமிழே உதிக்கின்றாள்!
உன்றன் வலையின் பெயரினிலே
     ஒளிரும் நீண்ட கவிவளமே!
என்றும் என்றன் இதயத்தை
     இழுக்கும் இரவின் புன்னகையே!

08.10.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

புன்னகை பூத்தே நாள்கள்
     பொலிவுடன் பிறக்கும் என்றே
இன்னகைத் தமிழைக் கணடே
     எழுதினேன் விருத்தம்! வேதா
பொன்னகை தட்டில் வைத்தே
     போற்றியே கொடுத்தால் கூட
உன்னடை  தமிழுக் கீடே?
     உள்மகிழ்ந் துரைத்தேன் வாழ்த்து!

08.10.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

செய்யும் செயலைத் திருத்தமுடன்
     செய்க! அதுவே நலங்கொடுக்கும்!
நெய்யும் துணிபோல் சிந்தனையை
     நெய்யும் எழுத்தைப் படைத்துள்ளீா்!
பொய்யும் புரட்டும் உடையவா்கள்
     போவார் போவார் கீழ்நோக்கி!
மெய்யும் உயிரும் ஒன்றாகி
     மேவும் வாழ்வே மேன்மைபெறும்!

08.10.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

தலைதனில் கொட்ட மனமில்லை! உன்றன்
தலைதனில் வைத்தேன் தமிழ்!

------------------------------------------------------------------------------------------------------

10.10.2012

வெண்பா படைத்து வியப்புற வாழ்த்திய
ஒண்பாப் புலவரே என்வணக்கம்! - கண்குளிரத்
தண்பா வடித்துத் தமிழ்வளா்க்கும், சால்புடை
நண்பா பெறுக நலம்!

11,10,2012 

------------------------------------------------------------------------------------------------------

5 commentaires:

  1. என் போன்றோருக்கு
    நல்ல வழிகாட்டியாய் அமைந்த கவிதைகள் அருமை
    படித்து ரசித்து மகிழ்ந்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  2. வலைப் பூ வாசனைப் பூவாய் மனம் வீசுகின்றது.

    RépondreSupprimer
  3. கவிதைகள் அருமை கவிஞரே..
    இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் முதலில் வருகிறேன்.

    வலைவடிமைப்பு மிக நன்று.

    RépondreSupprimer