vendredi 2 novembre 2012

மணமக்கள் வாழ்க!

மணமக்கள் வாழ்க பல்லாண்டு!
சீர்லோக நாயகியும் செஞ்சீனு வாசனும்
பேர்ஓங்க வாழ்க பெருமையுடன்! - பார்ஓங்கும்
வண்ணம் வளஞ்சமைத்து வானமுத வள்ளுவத்துள்
திண்ணம் செழிப்பீர் திளைத்து!

அண்ணா மலையும் தவமணியும்
     அன்பால் வளர்ந்த திருமகளே!
கண்ணா என்று கமழ்வாழ்வில்
     கலக்கும் லோக நாயகியே!
தண்ணார் சீனு நல்வாசன்
     தழைக்கக் கைகள் கோர்த்தனையே!
பண்ணார் தமிழின் பண்புகளைப்
     படைத்து வாழ்க பல்லாண்டே!

சோலை மலர்கள் பூத்தாட!
     சொக்கும் கிளிகள் இணைந்தாட!
மாலை மயக்கம் மணந்தாட!
     மயிலும் குயிலும் மகிழ்ந்தாட!
வேலை நிகர்த்த விழியாட!
     வேண்டி வேண்டி மனமாட!
காலை கமழ்ந்து கனிந்தாட!
     காதல் தொடர்க பல்லாண்டே!

நல்லோர் நவின்ற நன்னெறியை
     நன்றே பருகிக் களித்திடுவீர்!
வல்லோர் வடித்த வளர்நெறியை
     வரமாய்ப் பெற்றே அணிந்திடுவீர்!
பல்லோர் மகிழும் வகையினிலே
     பாதை அமைத்தே ஒளிர்ந்திடுவீர்!
சொல்லோர் புதுமை என்கவிபோல்
     சுடர்ந்தே வாழ்க பல்லாண்டே!

அருணை ஈசன் அருட்பொழிய!
     அம்மை வாழ்வின் பொருட்பொழிய!
கருணைக் கண்ணன் காலமெலாம்
     காதல் கலையின் சுவைபொழிய!
சுருணை சலக்கும் சந்தத்தில்
     தூய கம்பன் கவிபொழிய!
வருணைத் தமிழை வணங்குகிறேன்!
     வாழ்க! வாழ்க பல்லாண்டே!!

2 commentaires:

  1. வரிகள் சிறப்பு...

    நன்றி ஐயா...
    த.ம.1

    RépondreSupprimer
  2. மணமக்கள் வளமுடன் வாழ வாழ்த்துகள்

    RépondreSupprimer