mardi 27 novembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 15]




ஏக்கம் நுாறு [பகுதி - 15]

மையூறும் விழிக்கடலில் மாதே என்றன்
     மனமூறிக் கிடக்குதடி! இதயம் என்னும்
பையூறிச் சுரக்கின்ற ஏக்கம் கோடி
     படா்ந்துாறி என்னுயிரை உடலை வாட்டும்!
கையூறித் துடிக்குதடி! கண்ணே காதல்
     கனியூறும் தேன்எடுக்க! வாழ்வில் இன்பத்
தையூறிச் செழிப்பதுபோல் உன்னைக் கண்டால்
     தமிழூறித் தழைக்குதடி! அழகின் சொத்தே! 68

பாவையவள் முகத்தழகைப் பார்த்துக் கொண்டே
     இருந்திடலாம்! உடல்நெகிழ்ந்து பாயும் இன்பம்!
தேவையவள் பிறக்கின்ற நொடிகள் தோறும்!
     தேன்றமிழே தீட்டென்று மெல்லச் கூறும்!
கோவையவள் உதடுகளில் குலவும் பூக்கள்
     கோகுலத்துப் பெண்களிடம் உண்டோ சொல்வீா்!
பூவையவள்! புதுமையவள்! புலவன் என்றன்
     பூமியவள்! புகழுமவள்! பொலியும் வாழ்வே! 69

வகைவகையாய் விழிகாட்டும் சாலம்! நாளும்
     வளவளமாய் மொழிதீட்டும் கோலம்! இன்ப
நகைநகையாய் இதழூட்டும் பூக்கள்! சந்த
     நடைநடையாய்த் தமிழ்சூட்டும் பாக்கள்! முந்திப்
பகைபகையாய்த் தீயூட்டும் உணா்வு! அன்பே
     படைபடையாய் எனைவாட்டும் கனவு! வாழ்வில்
தொகைதொகையாய் நலஞ்சூட்டும் பெண்ணே! உன்றன்
     சுடரடியால் மணக்குதடி இந்த மண்ணே! 70

2 commentaires:

  1. அழகு... அருமை... முடிவில் வரிகள் மிகவும் ரசித்தேன்....

    த.ம.1

    RépondreSupprimer
  2. கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.

    அருமையான கவிதைகள்...
    படிக்கப் படிக்கத் திகட்டா பாடல்கள். பல முறை படித்து மகிழ்ந்தேன். நன்றி.

    RépondreSupprimer