jeudi 1 novembre 2012

வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 5]

நண்பா்களின் வலைப்பூக்களில் என் கவிப்பூக்கள்

வணக்கம்

நீரோடை மீன்அழகை கண்கள் காட்ட
            நினைவோடை என்னாகும? காதல் செஞ்சச்
சீரோடைப் பயணத்தை அழகாய்ப் பாடிச்
            சிறப்பாடை தமிழுக்குத் தந்தீா் வாழ்க!
மார்போடை மஞ்சத்துள் மனங்கள் கொஞ்ச
            மதுவோடை பாய்ந்துவரும்! உயிர்கள் சொக்கும்!
பாரோடை அத்தனையும் விஞ்சும்! நம்மின்
            பசுந்தமிழின் பாட்டோடை! நீந்து! நீந்து!

22.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பழனிவேல் பாடல் பசுந்தமிழ் அன்னை
கழனியில் வந்த கதிர்!

செவியைக் குளிரச் செய்திடவே
      செய்த கவிதை படித்திட்டேன்!
சுவையைக் கொட்டி வைத்ததுபோல்
      கொடுத்த கவிதை இனித்ததுவே!
கவியை உயிராய்க் காக்கின்ற
      கவிஞன் காலக் கண்ணாடி!
புவியைப் புரட்டப் புரட்சிநடை
      போடும் அஞ்சாப் போராளி!

22.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

மேடைநிறை தமிழைப் பேசும்
      மேன்மைமிகு கவிஞன் என்னைக்
கூடைநிறை மலா்கள் துாவிக்
      கும்பிட்டு மகிழும் காட்சி!
ஓடைநிறை மரையைப் போன்றறே
      உயிர்கவ்வும் பதிவைக் கண்டேன்!
கோடைநிறை சூட்டைப் போக்கிக்
      குளிர்விக்கும் இளநீா் என்பேன்!

22.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

முருகா னந்தா் மருத்துவத்தில்
      முன்னைத் தமிழின் மணமிருக்கும்!
உருகா திருந்த வன்நெஞ்சம்
      உருகும்! ஒளிரும்! உணா்வுபெறும்!
அருகா திருந்த அறிவியலை
      அடியேன் அறிய வாய்ப்பென்பேன்!
ஒரு..கா மலா்கள் அத்தனையும்
      உம்மின் வலைமேல் துாவுகிறேன்!

22.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

குழம்பிப்போய்ப் பார்க்கின்ற நண்பா் உள்ளார்!
      குழப்புகின்ற தோழா்களும் உள்ளார்! நல்ல
அழகியைப்போல் கண்கவரும் வண்ணம் பாடி
      அடியவனின் அகத்துள்ளே இடம் பிடித்தீா்!
தழும்பிவரும் நீரலையாய்க் கருக்கள் யாவும்
      தாம்பொங்கிப் பாய்கின்ற வன்மை கண்டேன்!
விழும்மிவரும் ஆசையினால் விருத்தம் ஈந்து
      வியக்கின்றேன்! விரைகின்றேன் தமிழைக் காக்க!

22.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பதமாய்ப் படித்தேன் சிலபக்கம்!
      பசியைப் போக்கும் நல்விருந்து!
கதம்பம் போன்றே கமழ்கின்ற
      கவிதை! கருத்து! கனிக்கதைகள்!!
இதமாய் நீரில் குளிக்கின்ற
      இன்பம் இந்த வலையென்பேன்!
மிதமாய்ப் பாடும் விருத்தத்தில்
      மேலாம் பதிவைப் பதித்தனனே!

22.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

துாரிகையின் துாறலெனப் தொடங்கும் பக்கம்!
      துாபமென மணக்கின்ற கவியின் உச்சம்!
பேரிகையின் முழக்கமெனக் கொட்டும் பாக்கள்!
      பெரியாரின் பாசறையைக் காக்கும் சிந்தை!
ஆரியரின் முகத்திரையைக் கிழித்துப் போட்டே
      அகவிருட்டை அகட்டுகின்ற போர்வாள்! சந்தக்
காரிகையின் கடைக்குட்டிக் கவிஞன் யானும்
      கைகூப்பி வணங்குகிறேன்! தமிழே வெல்க!

மதுமதி பாக்கள்! மகிழ்வொளி வீசும்
முதுமதிப் பாக்கள்! பொதுமை பொலியும்
புதுமதிப் பாக்கள்! புவியைப் புகட்டும்
பொதுமதிப் பாக்கள்! புகல்!

22.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

கந்தன் என்றே எழுதிடலாம்!
      பந்தன் என்றும் எழுதிடலாம்!
எந்தன் என்றே எழுதுவதுதோ
      எழுத்துப் பிழைதான் உணா்ந்திடுக!
எந்தன் என்ற பிழைச்சொல்லை
      என்தன் என்று மாற்றிடுக!
நந்தம் தமிழின் நலம்பேணி
      நல்ல துரைத்தேன் நாடிடுக!

என் - தன் - என்தன் அல்லது என்றன் என்று வரும் (ஒருமை)
எம் - தம் - எந்தம் என்று வரும் (பன்மை)

24.09.2012

------------------------------------------------------------------------------------------------------

உனக்குரிய வலைப்பூவை உற்றுப் பார்த்தேன்!
            உயிர்மணக்கும் கவிக்காட்டின் இன்பம் பெற்றேன்!
எனக்குரிய தளத்திற்குச் சற்றே மேவும்
            இனியதமிழ் பெற்றிடலாம்! ஆற்றல் ஓங்கும்!
பனிக்குரிய குளிர்தன்மை! தென்றல்! ஆறு!
            படைக்குரிய நல்வேகம்! பசுமை! வன்மை!
கவிக்குரிய இலக்கணங்கள் என்பேன் தோழி!
      கனித்தமிழின் இசைபாடி இனிதே வாழி!

24.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

நினைத்தேன்! சொல்கி றேன்என்ற
      நேய நெஞ்சை வாழ்த்துகிறேன்!
அனைத்தேன் உன்றன் பதிவுகளை
      அழகின் பெருக்கு மயக்கியதால்!
இணைத்தேன் தொடரும் நட்புறவில்
      ஏனோ பதிலே வரவில்லை!
பிணைத்தேன் மீண்டும் விருத்தத்தை!
      பெருமைத் தமிழின் பித்தினிலே!

24.09.2012

------------------------------------------------------------------------------------------------------

3 commentaires:

  1. அனைத்து தளங்களும் தங்களின் கை வண்ணத்தில் சிறப்பு பெறுகின்றன...

    நன்றி... வாழ்த்துக்கள்...
    த.ம.1

    RépondreSupprimer
  2. அத்தனையும் அழகு ஐயா

    RépondreSupprimer
  3. அருமயான கவிதைகள் படிக்க படிக்க ஆனந்தம். நன்றி

    RépondreSupprimer