vendredi 24 août 2012

ஆசை முகம் மெல்ல..மெல்ல




ஆசை முகம் மெல்ல..மெல்ல

ஆசைமுகம் மெல்ல மெல்ல மின்னுது! – அவன்
அரும்புமீசை என்னுயிரைக் கிள்ளுது
                                                                              (ஆசைமுகம்)

ஓசையுடன் தென்றல் வந்து வீசுது! – ஏனோ
உடல்முழுதும் அவன்செயல்போல் கூசுது!
                                                                              (ஆசைமுகம்)

காலையிலே கண்விழித்து எழுந்தேன்! – கண்ட
கனவையெண்ணிப் படுக்கையிலே விழுந்தேன்!
சேலையிலே அவன்ரேகை கண்டேன்! – என்ன
செய்தானோ மனம்விம்பி நின்றேன்!
                                                                              (ஆசைமுகம்)

வாசலிலே கோலமிடும் வேளை! – அவன்
வரவையெண்ணி வாடுதடி மூளை!
பாசக்கிளி கொஞ்சுமகிழ் சோலைஅவன்
பார்த்தபார்வை புரியுதடி லீலை!
                                                                              (ஆசைமுகம்)

கல்லூரி சென்றுவரும் நேரம் - அவனைக்
காணாமல் என்னெஞ்சுள் பாரம்!
அல்லிமலர்க் குளக்கரையின் ஓரம்! - இரு
அன்னங்கள் பாய்ச்சும்மின் சாரம்!
                                                                              (ஆசைமுகம்)

காணாமல் வீடுவந்து சேர்ந்தேன் - என்
கைவளையல் இளகிவிழ ஆழ்ந்தேன்!
ஆனவரை வீட்டுக்குள் நடித்தேன் - வட்ட
அழகுநிலா தூதுவிட துடித்தேன்!
                                                                              (ஆசைமுகம்)

உண்ணதரும் பொருள்மீது வெறுப்பு! – அவன்
உணர்வாலே விடியும்வரை விழிப்பு!
எண்ணமெலாம் காதல்வலை விரிப்புஐயோ
இரவெல்லாம் காமனவன் அழைப்பு
                                                (ஆசைமுகம்) 

2 commentaires:


  1. பூக்கள் பொலிகின்ற பொற்சோலை போன்றவரே!
    ஈக்கள் எனநாங்கள் இங்குற்றோம்! - பாக்கள்
    சுரக்கும் மதுவுண்டு சொக்குகிறோம்! என்றும்
    இருக்கும் எனக்குள் இனிப்பு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பூக்கள் பொலிந்தாட! பொன்மணிகள் போந்தாட!
      ஊக்கம் உணா்த்தி உவந்தாட! - பாக்கள்
      படைக்கம் பசுந்தமிழ்ப் பாவலன் பாடுகிறேன்
      வடிக்கும் மதுவென வாழ்த்து!

      Supprimer