mercredi 29 août 2012

தமிழா விழித்திடு! தமிழைக் காத்திடு



எடுப்பு

வீரத் தமிழா விழித்திடுஉன்
விழியாம் தமிழைக் விரைந்த நீ காத்திடு!
                                                                                            (வீரத் தமிழா)

தொடுப்பு

சீரெனும் செந்தமிழ் செம்மொழியாம் - அதைத்
தேனென உண்டே சிறந்து நீ வாழ்ந்திடு!
                                                                                            (வீரத் தமிழா)

முடிப்புகள்

இனிதாகும் தமிழ்தன்னைப் போற்றுநமை
எதிர்ப்போரை முன்னின்று எந்நாளும் தூற்று!
கனிபோலும் தமிழினிக்கும் ஊற்றுஅதன்
காதல்மேல் வீசட்டும் கற்கண்டாம் காற்று!
                                                                                            (வீரத் தமிழா)

கலைபல கண்டவர் தமிழரென்றோதொல்
காப்பியம் கொண்டவர் தமிழரென்றோ!
சிலம்பினைப் பெற்றவர் தமிழரென்றோதிருக்
குறளினைச் கற்றவர் தமிழரென்றோ!
                                                                                            (வீரத் தமிழா)

கற்பனைக் கடலெனும் கம்பனையேபுவி
கண்டிடச் செய்ததும் களிதமிழே!
அற்புத அருட்சுடர் வள்ளலையேஇங்கு
அகமகிழ்ந்(து) அளித்ததும் அருந்தமிழே!
                                                                                            (வீரத் தமிழா)

2 commentaires:


  1. உண்டுறங்கி வாழுவதோ? உள்நடுங்கி அச்சத்தைக்
    கொண்டிறங்கி வாடுவதோ? கொள்கையை - மண்ணுறங்கச்
    செய்வதுவோ? செந்தமிழா என்று விழிப்பாயோ?
    பொய்வதுவோ வாழ்வும் புழுத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அற்றைத் தமிழின் அருநிலை எண்ணாமல்
      இற்றைத் தமிழன் இழிகின்றான்! - ஒற்றையாய்
      எங்கும் உலவுகிறான்! இன்றிவனுள் தன்மானம்
      பொங்கும் உணா்வைப் புகுத்து!

      Supprimer