dimanche 26 août 2012

தமிழா! நித்திரை கிழித்து வா



தமிழா! நித்திரை கிழித்து..வா!
நெஞ்சினை நிமிர்த்தி..வா!
எத்தனைத் தடைகளோ - உடைத்து
வெற்றியைச் சூடி..வா!

அன்னையை மறப்பதோ? - சோம்பித்
திண்ணையில் கிடப்பதோ?
அன்னிய ஆசையால் - உன்றன்
கண்ணையே இழப்பதோ?

உண்டு உறங்குவதோ? - துயர்
கண்டு நடுங்குவதோ?
நண்டு இழுப்பதுபோல் - செயல்
கொண்டு அழுந்துவதோ?

கேலிப் பொருளாக - பிறர்
காலிற் கிடக்காதே!
தோளிற் பலமுண்டு! - நாள்கள்
தூங்கிக் கழிக்காதே!

சாதிப் பெயர்நீக்கு! - வெறியாம்
சமயப் பகைபோக்கு!
ஆதித் தமிழ்நூல்கள் - ஓதும்
அழகை உனதாக்கு!

தலைவர் தலைவரெனத் - தூக்கித்
தலைமேல் ஆடாதே!
விலையாய் உன்வாழ்வை - விற்று
வெந்து வாடாதே!

நடிகர் நடிகைகளை - வாழ்வாய்
நம்பித் துதிக்கின்றாய்!
விடிவா.. திரையொளியும் - காலம்
வீணில் கழிக்கின்றாய்!

குனிந்து நீ..நின்றால் - உன்மேல்
குதிரை ஏறிடுவான்!
துணிந்து நீ..நின்றால் - பகைவன்
தொடவே அஞ்சிடுவான்!

இம்மண் சுமையாகத் - தமிழா!
என்றும் இருக்காதே!
கும்ப கருணனைப்போல் - தூங்கிக்
கொள்கை மறக்காதே!

மம்மி தாடியெனத் - தமிழ்
மழலை அழைக்குது..பார்!
அம்மா எனும்சொல்லோ - மெல்ல
அழிந்து போகுது...பார்!

தன்னலம் நீக்குகவே! - தாயாம்
தமிழ்நலம் தேக்குகவே!
உன்னரசு ஆட்சியிலே - தமிழை
ஒளிபெற ஏற்றுகவே!

சின்னத் திரைப்பெட்டி - உன்னைத்
தின்னு செரிக்கிறது!
பெண்ணை அடிமையிடும் - பே
ரிழிவு தொடர்கிறது!

ஈரம் தமிழ்வித்து! - புகழ்
ஆரம் குறள்முத்து!
வீரம் நம்சொத்து! - எழுக
கீரனை நீ கற்று!

விழித்துக் காத்திடுக! - சீர்
விளைத்துக் கூத்திடுக!
தழைத்துப் பூத்திடுக! -  உலகே
தமிழைப் போற்றிடுக!

2 commentaires:


  1. நித்திரை நீக்கி நிமிர்ந்து நடைபோட
    முத்திரைப் பாக்கள் மொழிந்துள்ளீா்! - சத்தியம்!
    இந்தக் பதிவினை ஏந்தும் மனத்துள்ளே
    செந்தேன் சுரக்கும் செழித்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாட்டின் இழிவழிய, வாட்டும் துயரொழிய,
      ஓட்டும் நாிகளைக் காட்டுக்குள்! - தீட்டிடுவோம்
      ஓட்டை இலாமல் உயர்சட்டம்! ஒண்டமிழ்க்
      கோட்டை அமைப்போம் குளிா்ந்து

      Supprimer