பொங்குகவே
மெல்லத் தமிழும் மறையுமென
மேலை ஆய்வு உரைக்கிறது!
கள்ள மனமோ! கனித்தமிழைக்
கணக்கை முடிக்கத் துடிக்கிறது!
வெல்லம், அரிசி, முந்திரியும்
வேண்டும் பொழுது பொங்கிடலாம்!
உள்ளத் துள்ளே தமிழுணர்வை
ஓங்கும் வண்ணம் பொங்குகவே!
வென்றாய்ப் பகையை! பழம்பெருமை
வியந்து பேசிப் பயனென்ன?
நின்றாய்த் தனியே! ஒற்றுமையை
நீக்கிக் காணும் உயர்வென்ன?
நன்றாய் அரிசி வெல்லமுடன்
நாளும் பொங்கல் பொங்கிடலாம்!
ஒன்றாய் இணைந்து வாழ்கின்ற
உயர்ந்த உணர்வைப் பொங்குகவே!
கற்றுத் தேர்ந்த அறிஞர்களும்
கவிதை பாடும் கவிஞர்களும்
அற்றுப் போகும் செயலாக
அகலாப் பகையை வளர்க்கின்றார்!
முற்றல் கனியைத் தேன்சேர்த்து
முழங்கிப் பொங்கல் பொங்கிடலாம்!
பெற்ற இனத்தைப் பேணுகிற
பற்றை நிலையாய்ப் பொங்குகவே!
அண்ணன் தம்பி உறவுகளை
அறுக்கும் நிலையேன்? மதமென்னும்
வண்ணம் பலவாய் இருந்திடலாம்!
வல்லோன் ஒருவன் உணர்ந்திடுக!
கன்னல் கனியும் கற்கண்டும்
கலந்து பொங்கல் பொங்கிடலாம்!
உன்னுள் இருக்கும் பிரிவினையை
ஒழித்துப் பொங்கல் பொங்குகவே!
அம்மா மம்மி ஆனதுமேன்?
அப்பா தாடி வளர்ந்ததுமேன்?
இம்மா நிலத்தில் ஆங்கிலத்தை
இவர்போல் கதைப்பார் யாருள்ளார்?
குப்பா! சுப்பா! நினைத்திட்டால்
கூடிப் பொங்கல் பொங்கிடலாம்!
தப்பா துங்கள் பிள்ளைகளைத்
தமிழில் பேசப் பொங்குகவே!
காசு கொழிக்கும் அரசியலோ
கள்ளச் சந்தை! வாயொன்றால்
பேசிக் கொழிக்கும் பெரும்நரிகள்
பினைந்தி ருக்கும் பெருங்காடு!
வீசிக் கொழிக்கும் தைத்திங்கள்
விளைந்து கொழித்தால் பொங்கிடலாம்!
மாசு கொழிக்கும் தலைவர்களை
மாற்றும் வன்மை பொங்குகவே!
சேலை என்றால் என்னவெனச்
சீ..சீ உடையா என்றுரைப்பார்!
மேலைப் பாதி! கீழ்ப்பாதி!
மேனி பாதி உடையாமோ?
சோலை மணக்கக், குழல்மணக்கக்,
கோலம் மணக்கத் தமிழ்ப்பண்பு
நாளை மணக்க வேண்டாமோ?
நன்றே மாண்பைப் பொங்குகவே!
அன்பும் அறிவும் ஒளிருகவே!
அறனும் திறனும் மிளிருகவே!
பண்பும் பணிவும் படருகவே!
பணியும் பற்றும் சுடருகவே!
என்றும் இனத்தின் உயர்வெண்ணி
ஈடில் தமிழர் இயங்குகவே!
இன்பத் தமிழை உயிராக
இயம்பிப் பொங்கல் பொங்குகவே!
RépondreSupprimerபொங்குகவே என்றுளம் பொங்கிப் படைத்தகவி
தங்குகவே வாழ்வில் தமிழேந்தி! - சங்கெடுத்து
ஊதுகவே! நம்படை ஓங்குகவே! தீயவரை
மோதுகவே கைகால் முறித்து!
Supprimerவணக்கம்!
பொல்லாப் பகைவர் புகுந்ததை எண்ணாமல்
கல்லாய் இருந்தால் கதைமுடியும்! - நல்லவனாய்
வல்லவனாய் வாழும் வகையறிக! இல்லையெனில்
கொல்லவரும் தீமை கொழித்து!