mardi 21 août 2012

காதல் நாற்பது (முதல் பத்து)


காதல் நாற்பது (முதல் பத்து)

உள்ளத்துள் ஏதேதோ எண்ணம் தோன்றி
    உணர்ச்சிதனைக் கூட்டுதடி! பெருகும் ஆசை
வெள்ளத்துள் சிக்கிமனம் அங்கும் இங்கும்
    வேதனையால் அலையுதடி! என்றன் வாழ்வு
பள்ளத்துள் வீழாமல் உயர வேண்டின்
    பசுங்கிளியே! பைந்தமிழே! விரைந்து வந்தென்
இல்லத்துள் விளக்கேற்றி இனிமை கூட்டி
    இன்பத்தை எந்நாளும் பொழிவாய் கண்ணே! 1

தேனூறும் அவளிதழைத் தொட்டால் இன்பம்!
    செங்கனியாள் என்மார்பில் சாய்ந்தால் இன்பம்!
வானூறும் மதிமுகத்தாள் பார்த்தால் இன்பம்!
    மணக்கின்ற மல்லிகையாள் சிரித்தால் இன்பம்!
மீனூறும் மைவிழியாள் கண்டால் இன்பம்!
    மின்னுகின்ற பொற்சிலையை அணைத்தால் இன்பம்!
நானூறும் செந்தமிழின் சுவையைப் போல
    நன்மொழியாள் கிடைத்திட்டால் வாழ்வே இன்பம்! 2

அடங்காமல் அலைபாயும் நெஞ்சே! ஆசை
    அளிக்கின்ற உணர்வுகளால் ஏக்கங் கொண்டே
உறங்காமல் ஏக்கமுறும் விழியே! காதல்
    உள்ளத்துள் எரிகின்ற காமத் தீயில்
முடங்காமல் காத்திருக்கும் உயிரே! மோகம்
    மூட்டுகின்ற அன்னவளைக் கூடி வாழ்க்கை
தொடங்காமல் முடிந்திடுமோ இளமை! இன்பஞ்
    சுரக்கின்ற நினைவுகளால் ஏங்கு கின்றேன்! 3

விண்பூத்த வெண்ணிலவாய் நெஞ்சுள் மின்னும்
    விந்தைமிகும் முகத்தழகி! வையம் தன்னில்
முன்பூத்த செந்தமிழ்போல் திகட்டா இன்பம்
    மூட்டுகின்ற பேரழகி! மணம் பரப்பும்
மண்பூத்த மலரெல்லாம் தோற்கும் வண்ணம்
    மணக்கின்ற பேச்சழகி! மயக்கும் மங்கை
கண்பூத்த சுடர்அழகைக் கண்ட தாலே
    கம்பனெனக் கவிபாடிக் களிக்கின் றேனே! 4

பட்டாக மிளிர்கின்ற பாவை மேனி
    பஞ்சாக என்மனத்தைப் பறக்கச் செய்யும்!
முத்தாக மொழிகின்ற மோகப் பேச்சு
    முள்ளாக என்னுடலைக் குத்தும்! தங்கத்
தட்டாக ஒளிர்கின்ற முகத்தைக் கண்டால்
    தானாக என்விழிகள் சொக்கும்! சின்னச்
சிட்டாகப் பறக்கின்றேன் காதல் வானில்!
    சிந்தனையை வடிக்கின்றேன் இன்பத் தேனில்! 5

குற்றால அருவியிலே குளித்தல் போலக்
    குளிர்ச்சியினைக் கொடுக்கின்றாய்! கொஞ்சிப் பேசி
வற்றாத பேரின்பக் கடலில் தள்ளி
    மயக்கமுறச் செய்கின்றாய்! வடிவைக் காட்டி
மொட்டாகத் தளிர்விட்ட பருவந் தன்னை
    முகிழ்ந்தாட வைக்கின்றாய்! ஆசை யாலே
எட்டாத உயரத்தில் இருக்கும் தேனை
    எடுக்காமல் என்னுள்ளம் அடங்கு மாமோ? 6

மெழுகாக உள்ளத்தை உருகச் செய்யும்
    மேனியினைக் கொண்டவளே! என்றும் மாறாத்
தழும்பாக உன்னுருவம் என்றன் நெஞ்சுள்
    தான்படிந்தே உள்ளதடி! அன்று மெல்ல
விழுதாக வளர்ந்திட்ட ஆசை நூறு
    வேரூன்றிப் போனதடி! இறுகக் கட்டித்
தழுவாமல் கையிரண்டும் ஓயா(து) அன்பே!
    தண்ணிலவாய் நலங்கொடுக்க வாராய் இன்றே! 7

கரும்பாக இனிக்கின்ற கவிகள் பாடக்
    கட்டழகுக் காரிகையே முகத்தைக் காட்டு!
இரும்பாக இருக்கின்ற என்றன் மேனி
    இதமாக இளகிடவே இன்பம் மூட்டு!
அரும்பாக மணக்கின்ற நம்மின் காதல்
    அரங்கேற வேண்டாவோ? இசையை மீட்டு!
விருந்தாகும் நீயெனக்கே! ஒன்று சேர்ந்து
    விளையாடிக் களித்திடுவோம் வாராய் மாதே! 8

அழகாக அவளுருவை அமையச் செய்தே
    அடிமையென்றே இங்கென்னை ஆக்கி வைத்தாய்!
பழமாக இனிக்கின்ற பாவை சொல்லில்
    பாவலனின் கற்பனையைப் பெருகச் செய்தாய்!
நிழலாக அவள்பின்னே ஏகு மாறு
    நினைவுகளைக் கொடுத்திட்டாய்! மயக்கம் தந்தாய்!
குழலூதும் திருக்கண்ணா! அவளும் நானும்
    கோகுலத்து நலவாழ்வைக் காண்ப தென்றோ? 9

கண்ணழகைக் கண்டுள்ளம் சொக்கிப் போகும்!
    கனியிதழ்கள் முத்தமிட என்ன வாகும்?
பின்னழகைப் பார்த்தாலே பித்தம் ஏறும்!
    பிறந்தநிலை பார்த்தாலோ என்ன வாகும்?
முன்னழகை மூட்டுகின்ற கவர்ச்சி கண்டு
    மோகத்தால் தவிக்கின்றேன் எனை மறந்து!
பொன்னழகைப் பூவழகைப் பெற்ற பெண்ணே
    பொலிவேந்தும் நல்வாழ்வைத் தாராய் கண்ணே! 10

2 commentaires:


  1. தேனுாறும் செந்தமிழில் நானுாறி நிற்கின்றேன்!
    ஊனுாறும் காதல் உணா்வேந்தி! - மீனுாரும்
    வண்ண விழியழகை வார்த்த மொழியழகை
    உண்ணத் துடிக்கும் உயிா்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முன்னே படைத்த முதுகனிக் பாக்களைத்
      தன்னே ரிலாத்தமிழில் தாலாட்டும் - பொன்னேர்
      மனஞ்சோ் தமிழ்ச்செல்வா! வாழ்த்துகிறேன் பூக்கும்
      வனஞ்சேர் கவிகள் வழங்கு!

      Supprimer