காதல் நாற்பது (மூன்றாம் பத்து)
பொன்மேலே வைரத்தைப் பதித்தாற் போலே
பொன்மேலே வைரத்தைப் பதித்தாற் போலே
பொலிகின்ற பேரெழிலே! அழகின் ஊற்றே!
என்மேலே உனக்கென்ன கோபம் அன்பே?
ஏனின்று வெறுப்பாக இருக்கின் றாய்நீ?
விண்மேலே தவழ்கின்ற நிலவைக் கண்டு
விரும்புகின்ற உயிரினங்கள் அனைத்தும் போல
உன்மேலே நான்வைத்த காத லாகும்
ஓடிவந்தே இன்பத்தைத் தாராய் கண்ணே! 21
பக்கத்தில் அமர்ந்திருந்த போதும் ஏனோ
பார்க்காமல் இருப்பதுபோல் நடிக்கின் றாயே?
வெட்கத்தில் ஆசைதனை அடக்கப் போமோ?
வீசுகின்ற தென்பொதிகைத் தென்றற் காற்றே!
சொக்குதடி உன்னழகால் என்றன் உள்ளம்!
சுடர்விழியே உனைக்கண்டால் இன்பம் பொங்கும்!
விக்குதடி! வேர்க்குதடி! அன்பே காதல்
விருந்துண்டு களித்திடலாம் வாராய் கண்ணே! 22
அத்தானென்(று) ஒருமுறைதான் அழைத்தால் என்ன?
ஆசையுடன் முத்தங்கள் கொடுத்தால் என்ன?
முத்தமிழின் நற்றேனைச் சுவைத்தால் என்ன?
மோகமெனும் கடலுக்குள் குளித்தால் என்ன?
பித்தாய்உன் நிழலாக அலைந்தால் என்ன?
பேரின்பக் காட்சிகளைக் கண்டால் என்ன?
அத்தானின் திருமார்பில் அகலா தென்றும்
அரவணைத்துப் பொழுதெல்லாம் களித்தால் என்ன? 23
உன்கரமும் என்கரமும் ஒன்றாய்ச் சேர்ந்தே
உவக்கின்ற திருநாளைக் காண்ப தென்றோ?
கண்துயிலும் கனவெல்லாம் நினைவா யாகிக்
கலைமேவும் நல்வாழ்வைப் பெறுவ தென்றோ?
விண்ணுலவும் வெண்ணிலவை நாம ழைத்தே
விளையாடி மகிழ்கின்ற காலம் என்றோ?
பொன்மயிலே! பூந்தமிழே! புலவன் கூறும்
புகழுரையை ஏற்றிடவே வாராய் இங்கே! 24
தேரோடும் தெருவினிலே தேவி யுன்றன்
திருமுகத்தைக் பார்த்ததனால் தூக்கம் இல்லை!
சீரோடும் சிறப்போடும் திகழ்ந்த என்னைத்
திண்டாடச் செய்தனையே! ஏக்கத் தாலே
ஊரோடும் உறவோடும் பேச வில்லை!
உன்நினைவால் நாள்தோறும் பெருகும் தொல்லை!
பேரோடும் புகழோடும் பெருமை யோடும்
பெருவாழ்வு வாழ்ந்திடலாம் வாராய் பெண்ணே! 25
ஆடுகின்ற பொன்மயிலே! அன்பால் என்னை
ஆளுகின்ற ஆரணங்கே! குயிலைப் போன்று
பாடுகின்ற தமிழணங்கே! அத்தான் மார்பில்
படருகின்ற பூங்கொடியே! கவிஞன் யானும்
நாடுகின்ற தமிழ்மறையே! பாக்கள் கோடி
நவிலுகின்ற நற்றமிழே! இன்ப வாழ்வைச்
சூடுகின்ற சுடர்மணியே! புறாக்கள் போன்று
சுற்றியுலாச் சென்றிடலாம் வாராய் கண்ணே! 26
முத்துமணி மாலையெனப் பற்கள் பெற்றாய்!
முக்கனியாய் இனிக்கின்ற சொற்கள் உற்றாய்!
கொத்துமலர் மணப்பதுபோல் உள்ளங் கொண்டாய்!
கோலவிழிப் பார்வையிலே என்னை வென்றாய்!
சித்துவிளை யாடுகின்ற விந்தை காட்டிச்
சிந்தனையை எப்பொழுதும் சிதறச் செய்தாய்!
அத்தைமகன் என்னுயிரை ஆட்டு விக்கும்
ஆருயிரே! அரவணைக்கத் தயக்கம் ஏனோ? 27
என்னுடைய எண்ணங்கள் யாவும் ஏற்றே
ஈடில்லாப் பேரின்பம் நல்கும் நங்காய்!
உன்னுடைய மடிமீது படுத்தி ருந்தால்
உலகத்தை மறந்திடுவேன் உண்மை! உண்மை!
கண்ணுடைய வலைக்குள்ளே எனைப்பி டித்துக்
காத்துவரும் பேரழகே! தேனாம் ஊற்றே!
பொன்னுடைய நன்னெஞ்சுள் போதை யூட்டிப்
போராட வைத்தாயே போதும்! போதும்!! 28
இதயமெனும் ஏட்டினிலே தீட்டி வைத்தேன்
இளையவளே உன்பெயரை! இனிய வாழ்க்கை
உதயமினி என்றனுக்கே உன்னால் தானே!
உயிர்மகிழ உறவென்னும் உணவைத் தாராய்!
கதிராடும் வயல்வெளியின் தென்றல் போலக்
கருத்துக்குள் கமழ்கின்ற காதல் காற்றே!
புதிராடும் உன்விழிக்குள் புதைந்து போனேன்
புரியாமல் வாடுகின்றேன் மயக்கம் தீராய்! 29
அணுஅணுவாய் உன்னழகைச் சுவைத்த பின்னும்
ஆசையலை அடங்காமல் அடித்தல் ஏனோ?
மினுமினுப்பாய் மிளிர்கின்ற பொன்னார் மேனி
மின்னலென எனைத்தாக்கி மறைந்த தேனோ?
கிளுகிளுப்பாய் ஆக்குதடி உன்றன் முத்தம்
கிடைக்காத இன்னமுதம் தெவிட்டு மாமோ?
விறுவிறுப்பை ஊட்டுகின்ற இன்பக் காட்சி
வேல்விழியே! உன்னருளால் கண்டேன் யானே! 30
RépondreSupprimerமலைத்தேன் அடையென வார்த்தகவி கண்டு
மலைத்தேன்! பருகி மகிழ்ந்தேன்! - அலைந்தேன்!நற்
கற்பனை வானில்! கமழ்காதல் நெஞ்சுக்கு
நற்றுணை யாகும் இவை!
Supprimerவணக்கம்!
அருங்காதல் நாற்பதை அள்ளிப் பருகப்
பெருங்காதல் பொங்கிப் பெருகும்! - தரும்..காதல்
காட்சியைக் கண்முன்! கனித்தமிழர் கண்டுவந்த
மாட்சியைக் கண்முன் மலர்ந்து!