lundi 27 août 2012

வேண்டும் வரம்



பிறக்கும் பிறவிதொறும் பீடார் தமிழில்
சிறக்கும் கவியாய்ச் செழிக்கப் - பறக்கும்
குயிலெனக் கூவிமென் னெஞ்சம்! கவிதை
வயலென வேண்டும் வரம்!

நலமுற வேண்டும் நலிவுறும் மக்கள்!
பலமுற வேண்டும்நற் பண்பே! - உலகை
வளம்வர வேண்டும் மனிதம்!சன் மார்க்கம்
வளமுற வேண்டும் வரம்!

அருங்கம்பன் போலிங்(கு) அணித்தமிழ் பாடிப்
பெருங்கம்பன் நானெனும்பேர் பெற்று! - வருமுலகில்
நின்றிட வேண்டும்! நிலைத்த நெடும்புகழை
வென்றிட வேண்டும் வரம்!

சங்கத் தமிழ்மணக்கச்! சந்தக் கவிமணக்கத்!
தங்கத் தமிழ்மணக்கச்! சீர்மணக்கப்! - பொங்குதமிழ்
எண்ணமுற! எத்திசையும் ஏந்தித் தமிழ்மணக்க
வண்ணமுற வேண்டும் வரம்!

சாதி சமய சழக்குகளை வேரறுக்க!
நீதி நிலவும் நிலங்காணச் - சோதியெளிர்
உள்ளமே! சன்மார்க்க இல்லமே! பொன்வடலூர்
வள்ளலே! வேண்டும் வரம்!

பாட்டுக்கோர் பாரதிபோல் பாங்குடைப் பாரீசு
நாட்டுக்கோர் நற்கவியாய் நானிருக்கக் - கூட்டமாய்
ஆட்டமிடும் தீயவரை அப்படியே தூளாக்க
வேட்டிட வேண்டும் வரம்!

தந்தை பெரியார்போல் தன்மான சீரூட்ட!
கந்தைச் சமுகக் கரையகற்றச்! - சந்தையுறும்
மந்தையெனும் வாழ்வகற்ற! வண்ண மதியொளிர
விந்தையென வேண்டும் வரம்!

என்னாடு! எனதில்லம்! ஏனோ தமிழில்லை!
பொன்னாடு! பொய்யாகப் போற்றுகிறோம்! - நன்மைகள்
தந்தாட வேண்டுமெனில் தண்டமிழ் அரசேறி
வந்தாட வேண்டும் வரம்!

நாளை உலகம் நறுமலர்ப் பூத்தாடும்
சோலை உலகம் எனச்சுடர்ந்து - கோலமெலாம்
சூழ்ந்திட வேண்டும்! இனிமை சுரந்தென்றும்
வாழ்ந்திட வேண்டும் வரம்!

சுந்தரியே! என்கவிதைச் சொர்க்கமே! என்வாழ்வின் 
மந்திரியே! மாய விழிமலரே! - சந்தமெலாம்
தந்தணைக்கத் தூண்டும் தளிர்க்கொடியே! எப்பிறப்பும்
வந்தணைக்க வேண்டும் வரம்!

2 commentaires:


  1. வேண்டும் வரங்கள் விருந்தென இனித்தன!
    துாண்டும் உணா்வோடு சொல்கின்றேன்! - மீண்டும்
    அரசாளச் செய்வோம் அருந்தமிழை! வெற்றி
    முரசாளச் செய்வோம் முனைந்து!

    RépondreSupprimer

  2. வணக்கம்!

    தன்னலம் ஏந்தித் தமிழர் சுழல்கின்றார்!
    என்னலம் ஏற்றிவா் இன்புறுவார்! - ஒன்றறியேன்
    என்ன உரைத்தாலும் ஏற்கார்! பழிசுமைப்பார்!
    சின்ன மதியால் சிதைந்து!

    RépondreSupprimer