dimanche 15 janvier 2023

போகித் திருநாள்

 


போகித் திருநாள் வாழ்த்துக்கள்!

 

தேவி தேவி யெனவேண்டித்

..........       தென்னந் தமிழை வணங்கிடுவோம்!

கூவிக் கூவிச் சந்தமுடன்

..........       குரவைக் கூத்தும் ஆடிடுவோம்!

துாவித் துாவி விதைத்தவரின்

..........       தொண்டைப் போற்றிப் பாடிடுவோம்!

தாவித் தாவி வரும்புலியாய்த்

..........       தமிழர் ஆண்டே வந்திடுவாய்!

 

மொழியைக் காக்கும் அறிஞர்க்கும்

..........       மோனை காக்கும் கவிஞர்க்கும்

வழியைக் காக்கும் மறவர்க்கும்

..........       மண்ணைக் காக்கும் உழவர்க்கும்

விழியைக் காக்கும் இமையாக

..........       விரைந்து காக்கும் உறவர்க்கும் 

பொழிலைக் காக்கும் பூங்கவியாற்

..........       போகித் திருநாள் வாழ்த்துக்கள்!

 

பாட்டின் அரங்கப் பாவலரே!

..........       பண்பிற் சிறந்த பாவையரே!

நாட்டின் நிலையைத் தினமெண்ணி

..........       நலத்தை முழங்கும் நாவலரே!

ஏட்டின் சிறப்பை உலகுணர

..........       எழுதிக் குவிக்கும் வல்லவரே!

காட்டில் கமழும் மலர்சேர்த்துக்

..........       கன்னல் வாழ்த்துப் படைக்கின்றேன்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

14.01.2023

samedi 7 janvier 2023

விருத்த மேடை - 87


 

விருத்த மேடை - 87

 

சந்த விருத்தம் - 4

 

தந்தாதன  + தந்தாதன + தந்தாதன + தனனா

[முதல் மூன்று சீர்கள் 6 சந்த மாத்திரை + இறுதிச்சீர் 4  சந்த மாத்திரை]

 

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்

துாமாமழை துறுகல்மிசை சிறுநுண்துளி சிதற

ஆமாம்பிணை அணையும்பொழி[ல்] அண்ணாமலை அண்ணல்

பூமாங்கழ[ல்] புனைசேவடி நினைவார்வினை இலரே!

 

[சம்பந்தர் தேவாரம், திருவண்ணாமலை]

 

வெய்யோனொளி தன்மேனியி[ன்] விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடு[ம்] போனான்!

மையோ!மர கதமோ!மறி கடலோ!மழை முகிலோ!

ஐயோவிவ[ன்] வடிவென்பதொ ரழியாவழ குடையான்!

 

[கம்பன், அயோத்தியா. கங்கை - 1]

 

குற்றெழுத்தை இறுதியில் கொண்ட மாங்கனிச் சீர்கள் மூன்றும், இறுதியில் மாச்சீர் ஒன்றும் ஓரடியாகும். இதுபோல் நான்கடி ஓரெதுகையில் வரவேண்டும். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும். அடி இறுதியில்  தனிக்குறிலும் வரலாம். [அடியிறுதியில் வரும் குறில் 2 மாத்திரை பெறும்]

 

கனிச்சீர் 6 சந்த மாத்திரையும், மாச்சீர் 4 சந்த மாத்திரையும் பெறுதல் வேண்டும்.

[குறில் 1 மாத்திரை, குறிலொற்று, நெடில், நெடிலொற்று 2 மாத்திரை என்ற சந்த மாத்திரைக் கணக்கை நினைவில் கொள்ளவும்]

 

சம்பந்தர் தேவாரம், சுந்தரர் தேவாரம், திருமங்கையாழ்வார் பாடல்கள், திருவாசகம், சூளாமணி, நீலகேசி, பெரியபுராணம், கம்பராமாயணம் ஆகியவற்றில் இந்தக் சந்த விருத்தங்கள் உள்ளன.  

 

தொண்டேபுரி தொழுமேபுவி தொடரேபுக ழாகும்!

செண்டேபொழி கவியேகுவி சிவமேதமி ழாகும்!

பண்டேவழி ஒளியேமிகு பணியேயுயி ராகும்!

கண்டேயளி கருவேயிடு கனிவேமிகு தாயே!

 

[பாட்டரசர்]

 

கண்ணேயெனை நெஞ்சோடணை! கவியேபல தருவேன்!

பெண்ணேயுனை யுற்றேநனி பேறேபல பெறுவேன்!

தண்ணேபுனை தவமேபுரி தகையேபல வுறுவேன்!

பண்ணேயுனை மணமேபுரி பசியேமிக வருவேன்!

 

[பாட்டரசர்]

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

06.01.2023

dimanche 1 janvier 2023

சந்தக் கலிவிருத்தம் - 3


 

விருத்த மேடை - 86

 

சந்த விருத்தம் - 3

 

தந்ததன தந்ததன தந்ததன தந்தா

[முதல் மூன்று சீர்கள் 5 சந்த மாத்திரை இறுதிச்சீர் 4  சந்த மாத்திரை]

 

பஞ்சியொளி[ர்] விஞ்சிகுளி[ர்] பல்லவம னுங்க

செஞ்செவிய கஞ்சநிகர் சீறடிய ளாகி

அஞ்சசொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்

வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

 

[கம்பன், ஆரணிய. சூர்ப்பணகை - 31]

 

குறில் ஒற்று, நெடில், நெடில் ஒற்று எனவரும் அசைகளை நெடில் என்று கொள்க. அதன்படி ஒரு நெடிலும் முன்று குறிலுமாக வரும் காய்ச்சீர் மூன்றும் இரு நெடிலாக வரும் தேமாச்சீர் ஒன்றுமாக வருவது ஓரடி. இதுபோல் நான்கடி ஓரெதுகையில் வரவேண்டும். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும். அடி இறுதியில்  தனிக்குறிலும் வரலாம். [அடியிறுதியில் வரும் குறில் 2 மாத்திரை பெறும்]

 

முதல் மூன்று சீா்கள் 5 சந்த மாத்திரையன. இறுதிச்சீர் 4 சந்த மாத்திரையது. தந்ததன  என்பதற்குப் பதில் தானதன வரலாம்.  இறுதிச்சீரான தந்தா என்பதற்குப் பதிலாகத் தந்தாம், தந்தம், தானம், தானாம், தந்த, தான என்னும் சீர்கள் வரலாம்.

 

சம்பந்தர் தேவாரம், சிந்தாமணி, சூளாமணி, வளையாபதி, குண்டலகேசி, நீலகேசி, பெரியபுராணம், கம்பராமாயணம் ஆகியவற்றில் இந்தக் சந்த விருத்தம் உண்டு.

 

அன்றுமுதல் இன்றுவரை அந்தமிழின் சீரை

நன்றினிது காத்துவரு நல்லவரை வாழ்த்து!

என்றுமுள இன்றமிழின் ஏற்றமதை எண்ணா

இன்றுளறு போலிகளை இத்தரையில் வீழ்த்து!

 

[பாட்டரசர்]

 

தங்கமென அங்கமொளிர் தண்மையுறு பெண்ணே!

திங்களென எங்குமொளிர் சிந்தையுறு கண்ணே!

கங்கையென மங்கையொளிர் கன்னலிடு மன்பே!

சிங்கமென இன்பமொளிர் செம்மையுறு வாழ்வே!

 

[பாட்டரசர்]

 

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

01.01.2023

புத்தாண்டே வாராய்

 


புத்தாண்டு பூத்துப் பொலியட்டும்!

 

1.

பூநிறை தோட்டமெனப் புத்தாண்டு பூக்கட்டும்

பாநிறை தேனைப் படைத்து!

 

2.

பொங்கியெழும் பாலெனவே புத்தாண்[டு] இனிக்கட்டும்

எங்குமெழில் இன்பம் இசைத்து!

 

3.

பொன்னொளி வீசியே புத்தாண்டு மின்னட்டும்

இன்பொளி வாழ்வினை ஈந்து!

 

4.

புத்தன் புகழ்நெறியைப் புத்தாண்[டு] அறையட்டும்

அத்தன் அருளை அளித்து!

 

5.

புண்ணிய மேன்மையைப் புத்தாண்டு நல்கட்டும்

எண்ணிய யாவும் இனித்து!

 

6.

புற்பசுமை போன்றழகைப் புத்தாண்[டு] அணியட்டும்

நற்றண்மை மாட்சி நவின்று!

 

7.

பொற்புடனே தான்பிறந்து புத்தாண்[டு] அருளட்டும்  

பற்றுடனே பாக்கள் பழுத்து!

 

8.

போற்றி வணங்கிடவே புத்தாண்[டு] ஒளிரட்டும்
சாற்றித் தழைக்கட்டும் சால்பு!

 

9.

பொற்றா மரைக்காடாய்ப் புத்தாண்[டு] அமையட்டும்

குற்றால வின்பம் கொழித்து!

 

10.

போதை தருமழகைப் புத்தாண்டு வார்க்கட்டும்

கோதை தமிழைக் குழைத்து!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

01.01.2023