போகித் திருநாள் வாழ்த்துக்கள்!
தேவி தேவி யெனவேண்டித்
.......... தென்னந் தமிழை வணங்கிடுவோம்!
கூவிக் கூவிச் சந்தமுடன்
.......... குரவைக் கூத்தும் ஆடிடுவோம்!
துாவித் துாவி விதைத்தவரின்
.......... தொண்டைப் போற்றிப் பாடிடுவோம்!
தாவித் தாவி வரும்புலியாய்த்
.......... தமிழர் ஆண்டே வந்திடுவாய்!
மொழியைக் காக்கும் அறிஞர்க்கும்
.......... மோனை காக்கும் கவிஞர்க்கும்
வழியைக் காக்கும் மறவர்க்கும்
.......... மண்ணைக் காக்கும் உழவர்க்கும்
விழியைக் காக்கும் இமையாக
.......... விரைந்து காக்கும் உறவர்க்கும்
பொழிலைக் காக்கும் பூங்கவியாற்
.......... போகித் திருநாள் வாழ்த்துக்கள்!
பாட்டின் அரங்கப் பாவலரே!
.......... பண்பிற் சிறந்த பாவையரே!
நாட்டின் நிலையைத் தினமெண்ணி
.......... நலத்தை முழங்கும் நாவலரே!
ஏட்டின் சிறப்பை உலகுணர
.......... எழுதிக் குவிக்கும் வல்லவரே!
காட்டில் கமழும் மலர்சேர்த்துக்
.......... கன்னல் வாழ்த்துப் படைக்கின்றேன்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
14.01.2023

Aucun commentaire:
Enregistrer un commentaire