vendredi 7 août 2015

கவியேறு காவடிச் சிந்து




கவியேறு வாணிதாசன் காவடிச் சிந்து

1.
வாணி தாசர்புகழ்         பாடு - துள்ளி
                         யாடு - மகிழ்
                         வோடு - அவர்
வார்த்த தமிழ்க்கிலை     ஈடு - நாம்
வளமேபெறும் திறமேபெற நலமேபெறும் மறமேபெற
வாழ்வெல்லாம் தொண்டினைச் கொண்டார் - நம்
தாழ்வெல்லாம் போக்கிடக் கண்டார்!

கேணி தரும்சுவை        நீராய் - பழத்
                         தாராய் - கவி
                         யேறாய் - தமிழ்க்
காணி விளைத்தார்நற்     சீராய் - மண்
கேடேஅறும்! பீடேவரும்! நாடேபுகழ் பேறேவரும்!
ஞானியாய்ச் சிந்தனை நெய்தார் - பூந்
தேனியாய்ப் பாட்டடை செய்தார்!

2.
வள்ளுவர் வாய்மறை     யேற்று - பணி
                         யாற்று - அதைப்
                         போற்று - உடன்
வாடி ஓடும்வினைக்       கூற்று - என்றும்
வண்ணம்பல தந்தகவி! எண்ணம்தனில் நின்றகவி
மண்வாழ வண்டமிழ் வார்த்தார் - தமிழ்ப்
பண்வாழ ஒண்டமிழ் சேர்த்தார்

தௌ்ளிய நன்னடை       உண்டு - சுவை
                         கொண்டு - தினம்
                         கண்டு - மனம்
தேனுண்டு ஆடிடும்       வண்டு - பூந்
தென்றல்தரும் மென்மைச்சுகம் அன்னைத்தமிழ் அன்பைத்தரும்
தென்மொழி செல்வராய் வாழ்ந்தார் - நாளும்
பன்மொழி நூல்களை ஆய்ந்தார்!

3.
கொஞ்சும் இயற்கையைத் தீட்டித் - தேன்
                         கூட்டி - இசை
                         மீட்டி - புகழ்
கொண்டார் கொள்கைக்கொடி நாட்டி - இங்குக்
கோலத்தமிழ் காதற்றமிழ் ஞானத்தமிழ் மானத்தமிழ்
கொட்டியே நன்முர(சு) இட்டார் - பகை
வெட்டியே தீயிட்டுச் சுட்டார்!

விஞ்சும் எழில்நலம்       பூட்டி - உணர்
                         வூட்டி - துயர்
                         ஓட்டி - நமை
வெல்லச் செய்யும்வழி    காட்டி - துள்ளி 
வெற்றிநடை கொட்டும்படை! கற்றதமிழ் பற்றும்புகழ்
வீரத்தை நாள்தோறும் மொழிந்தார் - கலை
ஈரத்தை நாள்தோறும் பொழிந்தார்!

4.
பாவேந்தர் நண்பராய்      நின்று - பகை
                         வென்று - புகழ்
                         குன்று - வாழும்
பார்அவர் பாக்களைத்     தின்று - தமிழ்ப்
பற்றேமிகும் சத்தேபெறும்! முத்தேயொளிர் சித்தேபெறும்!
பண்பொளி வீசியே வாழ்ந்தார் - நாளும்
பண்ணொளிர் இன்பத்தில் ஆழ்ந்தார்!

நாவேந்தர் போற்றிடும்    உள்ளம் - தமிழ்
                         இல்லம் - கவி
                         வெள்ளம் - அவர்
நாவினில் சந்தங்கள்      துள்ளும் - நான்
நற்றேன்என உற்றேன்தமிழ்! பொற்கோவென நட்டேன்தமிழ்!
நற்றிறம் பெற்றிட வைத்தார் - என்னுள்
சொற்றிறம் மின்னிடத் தைத்தார்!

5.
பாடித் தொடுத்திட்ட       நூல்கள் - மொழியின்
                         கால்கள் - அறிவின்
                         வேர்கள் - அவை
பாவலர் கையேந்தும்      வேல்கள் - கொண்ட
பகையேஅறப் பயனேஉறப் புவியேநமைப் பணிந்தேதொழப்
பாங்குற நற்பணி புரிந்தார் - வண்ணப்
பூங்கொடி போல்மணம் செரிந்தார்!

நாடி நரம்புகள்            புடைக்க - இருள்
                         துடைக்க - நலம்
                         கிடைக்க - பாரில்
நம்மினத் தொன்மையைப்  படைக்க - இந்
நாட்டில்உள காட்டின்நரி ஓட்டும்படி மூட்டும்பறை
நாளெல்லாம் பாட்டுக் குழைத்தார் - தீட்டும்
தாளெல்லாம் செந்தேன் குழைத்தார்!

26.07.2015

mardi 4 août 2015

வெண்பாக் கொத்து!



வெண்பாக் கொத்து!

குறள் வெண்பா

எங்கும் தமிழை இசைத்து மகிழ்ந்திட்டால்
பொங்கும் புவியிற் புகழ்!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

எங்கும் இருக்கின்ற ஏற்ற இறக்கத்தைக்
கங்கு கடலில் கரைத்திடுவோம்! - சங்கமிடும்
பொங்கல் சுவையாய்ப் புகழ்!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

எங்கும் எரித்திடுவோம்! என்றும் எதிர்த்திடுவோம்!
சுங்கி நமைப்புரிக்கும் சாதியெனும் சூதினை!
பொங்கலெனப் பொங்கும் புகழ்!

நேரிசை வெண்பா

எங்கும் தமிழர் இணைந்து செயற்பட்டால்
தங்கும் வளங்கள் தழைத்தோங்கும்! - சிங்கமெனக்
காக்கும் திறமுற்றால் காலத்தை வென்றோங்கிப்
பூக்கும் புவியுட் புகழ்!

இன்னிசை வெண்பா

எங்கும் தமிழாய் எதிலும் தமிழாய்..நாம்
இங்குறச் செய்திட்டால் இன்னல் அகன்றோடும்!
இன்பம் நிறைந்தாடும்! இவ்வுலகே வாழ்த்துரைக்கப்
பொன்னாய்ப் பொலியும் புகழ்!

பஃறொடை வெண்பா

எங்கும் இருக்கும் இறைவன் எழிலுணர்க!
தங்கத் தமிழின் தகையுணர்க! - சங்கப்
புலவர் புகன்ற நெறியுணர்க! இன்பம்
குலவும் குறளமுதைக் கொள்க! - உலகினில்
உள்ள அனைவரும் உற்ற உறவாக
அள்ளி அணைக்கும் அகம்பெறுக! - உள்ளத்துள்
உண்மை ஒளியேற்றி ஒண்மை மறையறிக!
வண்கை வழங்கும் மகிழ்வுறுக! - வெண்மைக்
கவியுள் கதைத்த கருத்தை தெளிந்தால்
புவியுட் பொலியும் புகழ்!

இலக்கண விளக்கம்

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'எங்கும்', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'புகழ்' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

01.07.2015


lundi 3 août 2015

குளக வெண்பா!



போற்றுவேன் உன்னைப் புகழ்ந்து!

குளக வெண்பா! 

சல்லடைபோல் என்னெஞ்சை முள்விழிகள் ஓட்டையிட!
சொல்..அடைபோல் வந்து சுவைகொடுக்க! - கள்ளுருக!
அள்ளிக் குடிக்க அலைபாயும் எண்ணங்கள்
துள்ளிக் குதிக்கத் தொடர்ந்து!

கண்டு களிக்கக் கவிதை பலபடைக்க
உண்டு களிக்க! உயிர்உருக! - வெண்மதியே!
ஏற்ற பிறவியெலாம் என்னோடு நீயிருக்கப்
போற்றுவேன் உன்னைப் புகழ்ந்து!

இலக்கண விளக்கம்

ஒரே வினைமுடிவு கொள்ளும் வெண்பாக்கள் குளகம் எனப்படும்.முதல் வெண்பா முழுவதையும் வினையெச்சத்தில் அடிக்கி; அடுத்த வெண்பாவில் வினையைப் பெய்து  
எழுத வேண்டும்.

முதல் வெண்பாவில் மூன்றாம் நான்காம் அடிகளில் வினைமுற்று, வியன்முற்று, ஏவல் வினைமுற்று செய்யுமெனும் வாய்ப்பாட்டு முற்று, பயன் நிலையாக அமையும் பெயர்ச்சொல்  
போன்றவற்றைத் தவிர்த்தல் நலம்.

09.07.2015

samedi 1 août 2015

மும்மண்டில வெண்பா!



இலக்கண விளக்கம்

மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!

ஏன் வெறுப்பு?

1.
வண்டுக்கண் தேன்கொடுத்து வண்ணமலர்க் கான்மணக்கும்!
கண்டுச்சொல் ஊன்புடைக்கும்! எண்ணமிகும்! - ஒண்மதியே!
நான்தொடுக்கும் வண்ணங்கள் வான்கொடுக்கும் மின்னன்றோ?
ஏன்வெறுக்கும் பெண்ணழகு மான்?

2.
தேன்கொடுத்து வண்ணமலர்க் கான்மணக்கும் கண்டுச்சொல்!
ஊன்புடைக்கும்! எண்ணமிகும்! ஒண்மதியே! - நான்தொடுக்கும்
வண்ணங்கள் வான்கொடுக்கும் மின்னன்றோ? ஏன்வெறுக்கும்
பெண்ணழகு மான்வண்டுக் கண்?

3.
வண்ணமலர்க் கான்மணக்கும் கண்டுச்சொல்! ஊன்புடைக்கும்
எண்ணமிகும்! ஒண்மதியே! நான்தொடுக்கும் - வண்ணங்கள்
வான்கொடுக்கும் மின்னன்றோ? ஏன்வெறுக்கும் பெண்ணழகு
மான்வண்டுக் கண்?தேன் கொடுத்து?

---------------------------------------------------------------------------------------------

கண்மணியே!

1.
கண்மணியே! கண்ணமுதே! பண்மழையே! மண்மணமே!
வெண்மதியே! வண்கொடியே! தண்மலரே! - பெண்மணியே!
பொன்னொளியே! இன்றமிழே! என்றென்றும் பொங்குதடி
உன்னழ கால்என் உயிர்!

2.
கண்ணமுதே! பண்மழையே! மண்மணமே! வெண்மதியே!
வண்கொடியே! தண்மலரே! பெண்மணியே! - பொன்னொளியே!
இன்றமிழே! என்றென்றும் பொங்குதடி உன்னழகால்
என்உயிர்! கண்மணி யே!

3.
பண்மழையே! மண்மணமே! வெண்மதியே! வண்கொடியே!
தண்மலரே! பெண்மணியே! பொன்னொளியே! - இன்றமிழே!
என்றென்றும் பொங்குதடி உன்னழகால் என்உயிர்!
கண்மணியே! கண்ணமு தே!

---------------------------------------------------------------------------------------------

நற்றேன் கலைசூடு!

1.
கவிபாடு! நற்றேன் கலைசூடு! நாளும்
சுவைகோடி பெற்றேன்! அலையாக ஆசை
பெருகிமனம் வாடும்! திரண்டோங்கி மண்ணில்
உருகிமனம் ஓடும் உருண்டு!

2.
நற்றேன் கலைசூடு! நாளும் சுவைகோடி
பெற்றேன்! அலையாக ஆசை பெருகிமனம்
வாடும்! திரண்டோங்கி மண்ணில் உருகிமனம்
ஓடும்! உருண்டுகவி பாடு!

3.
கலைசூடு! நாளும் சுவைகோடி பெற்றேன்!
அலையாக ஆசை பெருகிமனம் வாடும்!
திரண்டோங்கி மண்ணில் உருகிமனம் ஓடும்!
உருண்டுகவி பாடு!நற் றேன்!

கவிஞர் கி. பாரதிதாசன்
01.07.2015

jeudi 16 juillet 2015

அம்பாளடியாள் வாழ்க!




அம்பாளடியாள் பிறந்தநாள் வாழ்த்து!

அருமைக் கவிபாடி அம்பாள் அடியாள்
பெருமை பெறுகவே! பெம்மான் - திருவருளால்
எல்லா வளங்களும் என்றும் இருந்தொளிரப்
பல்லாண்டு வாழ்க படர்ந்து!

அன்பு மலர்க்காடாய், ஆனந்தப் பொற்காற்றாய்,
நன்கு செழித்த நறுங்கனியாய், - என்றென்றும்
அம்பாள் அடியாள் அரும்வாழ்[வு] அமையட்டும்!
எம்மான் திருவருளை ஏற்று!

என்றமிழ் மாணவி! இன்றேன் இசைவாணி!
தன்னினம் தாங்கும் தமிழச்சி! - பொன்மனம்
கொண்டொளிரும் அம்பாள் அடியாள்! குலமோங்கக்
கண்டொளிர வேண்டும் களிப்பு!

கவிஞர் கி. பாரதிதாசன்
16.07.2015