mardi 4 février 2020

அண்ணா என்றால் தமிழென்பேன்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

அண்ணா என்றால் தமிழென்பேன்!
  
'ஒன்றே குலமாம்' நன்னெறியை
   உள்ளம் ஏற்றால் துயரேது?
'ஒன்றே இறையாம்' பொன்னெறியை
   உலகம் ஏற்றால் பகையேது?
நன்றே அண்ணா உரைத்தவழி
   நாடும் மண்ணில் குறையேது?
வென்றே வாழ உரமூட்டும்
   விந்தைத் தலைவன் மொழிகாப்போம்!
  
ஏழை சிரிப்பில் விண்ணிறைவன்
   இருப்பான்! குடிசை வாழ்மக்கள்
ஊழைப் போக்கும் உள்ளத்துள்
   ஒளிர்வான்! என்றன் இதயமெனும்
பேழைக் குள்ளே புகழ்அண்ணா
   பேரைத் தீட்டிக் காத்திடுவேன்!
தாழை போன்று மணம்வீசும்
   தமிழைப் பாடிக் கூத்திடுவேன்!
  
இந்தி எதிர்ப்புப் பெரும்போரை
   முந்தி நின்று நடத்தியதால்,
தொந்தி சாயும் துன்னரிகள்
   சுரண்டும் தீதைப் போக்கியதால்,
சந்தி யெங்கும் தமிழமுதைப்
   பந்தி யிட்டு முழங்கியதால்,
புந்திக் குள்ளே இனப்பற்றுப்
   பொங்கும்! அண்ணா புகழ்வாழ்க!
  
நொடிக்கும் பொழுதில் நற்பதிலை
   நுவன்ற ஆற்றல்! எந்நாடும்
படிக்கும் வண்ணம் பன்னுரையைப்
   படைத்த வன்மை! துன்புற்றுத்
துடிக்கும் மக்கள் வளமுறவே
   தொகுத்த சட்டம்! நற்றேனைக்
குடிக்கும் வண்டாய் நுால்தேடிக்
   குவித்த அண்ணா புகழ்வாழ்க!
     
அண்ணா என்றால் அறமென்பேன்!
   அண்ணா என்றால் அறிவென்பேன்!
அண்ணா என்றால் அழகென்பேன்!
   அண்ணா என்றால் அமுதென்பேன்!
அண்ணா என்றால் ஒளியென்பேன்!
   அண்ணா என்றால் உயர்வென்பேன்!
அண்ணா என்றால் தகையென்பேன்!
   அண்ணா என்றால் தமிழென்பேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
04.02.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire