dimanche 28 avril 2024

தென்பசியார் பொன்விழா


தென்பசியார் வாழியவே!

 

எடுப்பு

 

தென்பசியார் வாழியவே! - என்றும்

இன்மொழியார் வாழியவே!

                                             [தென்பசியார்]

 

தொடுப்பு

 

விண்மழையார் வாழியவே! - சந்தப்

பண்மழையார் வாழியவே!

                                             [தென்பசியார்]

 

முடிப்பு

 

வண்ணமுடன் வாழியவே! வள்ளுவனார் தந்தபுகழ்

எண்ணமுடன் வாழியவே! எத்திசையும் ஏத்துகின்ற

அண்ணனுடன் வாழியவே! அருந்தந்தை கொள்கையிலே

திண்ணமுடன் வாழியவே! செந்தமிழின் சீர்முழங்கித்

                                             [தென்பசியார்]

 

யாப்பேந்தி வாழியவே! எந்நாளும் கவிபூக்கும்

தோப்பேந்தி வாழியவே! தொன்மொழியாம் நம்மொழிக்குக்

காப்பேந்தி வாழியவே! கருத்தெல்லாம் வாழைதரும்

சீப்பேந்தி வாழியவே! தென்னவர்தம் பேர்முழங்கித்

                                             [தென்பசியார்]

 

குடிசெழித்து வாழியவே! கொல்லைவளர் ஆலெனவே

அடிசெழித்து வாழியவே! அகத்துள்ளே அன்புமலர்க்

கொடிசெழித்து வாழியவே! அந்தமிழின் அரசோங்க

வெடிவெடித்து வாழியவே! வெல்தமிழின் ஏர்முழங்கித்

                                             [தென்பசியார்]

 

ஊர்போற்ற வாழியவே! உற்றாரும் கற்றாரும்

சீர்போற்ற வாழியவே! திசையாவும் பாடுதமிழ்

வேர்போற்ற வாழியவே! விந்தைமிகு பாட்டுலகில்

தார்போற்ற வாழியவே! தண்டமிழின் மண்முழங்கி

                                             [தென்பசியார்]

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

28.04.2024

Aucun commentaire:

Enregistrer un commentaire