samedi 13 avril 2024

சிறப்புப் பாயிரம்

 

பாவலர்மணி சிவ. மணிவேலனார் எழுதிய

விருத்தமாயிரம் நுாலுக்குச்

சிறப்புப் பாயிரம்

 

அலைதவழ் புதுவை கலைதவழ் நகரின் 

நிலைபுகழ் வாணர்! நிறைமதி யாளர்!

உரைவளங் கண்ட ஒப்பில் அறிஞர்!

கரைவள ஊர்போல் கவிவளப் புலவர்!

அருந்தமிழ் மலையர் ஆ.சிவ லிங்கனார்

திருப்பெயர் காக்கும் தீந்தமிழ் மைந்தர்

சிவ.மணி வேலர் செய்த இந்நுால்

தவமணிக் கலனார் சாற்றிய வழியில்

விருத்த மாயிரம் வியன்பெயர் சூடிப்

பொருத்தம் பத்தும் பொலிய கண்டேன்!

குணகடல் கிழக்கே! குமரி தெற்கே!

இணைக்கடல் அரபி இமயம் தாமே

மேற்கும் வடக்கும் மேவிய எல்லையுள்

பூத்த பொழிலில் யாத்த விருத்தம்

மூத்த தமிழை ஏத்திப் போற்றும்!

தந்தை வாழ்வைச் சாற்றும் இவ்வேடு

விந்தை மேவ விழிகளைக் கவ்வும்!

பாட்டின் அரசன் பாரதி தாசன்

காட்டிய வழியில் தீட்டிய ஆக்கம்

சீர்சேர் வாழ்வைத் தேர்மேல் ஏற்றித்

தார்சேர் வாழ்வைத் தந்து தழைக்கும்!

வண்ணத் தமிழின் வளத்தை யளிக்கம்!

எண்ண மினிக்க இன்றேன் யளிக்கும்!

இரண்டா யிரத்திரு பத்து நான்கில்

திரண்ட அவையுள் விரித்த படையல்

பாவலர் அரங்கின் மாவளம் காட்டும்!

நாவளங் கூட்டும்! நன்னெறி சூட்டும்! 

மண்ணின் மாட்சி, பண்ணின் ஆட்சி,

பெண்ணின் மீட்சிப் பேசிக் களிக்கும்

விருத்தம் யாவும் விருந்தாய் இனிக்கும்!

நிருத்தச் சிவனின் திருவருள் திளைக்கும்!

வெற்றி கொடுக்கும்! பற்றுப் படைக்கும்!

கற்றிடக் கற்றிடக் காவியம் பிறக்கும்!

அன்னைத் தமிழின் அழகில் மயங்கிப்

பொன்னை யுருங்கிப் புனைந்த இந்நுால்

தண்மணி வேலரின் தமிழ்மணி மரபினை

மண்ணணி யாக்கி விண்ணொளி வீசுமே!

 

17.02.2024

Aucun commentaire:

Enregistrer un commentaire