'தமிழ்ப்பேரொளி'
தென்பசியார், பாவலர் வ. இராமதாசு அவர்களின்
பொன்விழா வாழ்த்து!
அன்பாம் அமுதைச் சுரக்கின்ற
.......... அகத்தைப் பெற்ற தென்பசியார்
இன்பாம் தமிழை எந்நொடியும்
.......... இமைபோல் காக்கும் தொழில்கொண்டார்!
பண்பாம் மலர்கள் மணம்வீசும்!
.......... பணிகள் தம்மை இனம்பேசும்!
தண்பாம் பணையான் தொண்டன்யான்
.......... தங்கத் தமிழால் வாழ்த்துகிறேன்!
தந்தை பெரியார் பொன்னெறியைத்
.......... தலைமேல் தரித்த தென்பசியார்
சிந்தை அறிஞர் அண்ணாவின்
.......... சீரார் நுாலில் திளைத்திடுமே!
விந்தைக் கலைஞர் நற்புகழை
.......... வீதி தோறும் விளைத்திடுமே!
முந்தைத் தமிழின் பாட்டரசன்
.......... முத்தம் இட்டு வாழ்த்துகிறேன்!
பாட்டி ஓளவை மொழிகாக்கும்
.......... பசுமை நிலத்துத் தென்பசியார்
தீட்டி வைத்த கவியாவும்
.......... செந்தேன் ஊற்றுத்! தமிழ்ப்புதையல்!
ஈட்டிக் கூர்மை மதியொக்கும்!
.......... இதயம் நேர்மை இடஞ்சொக்கும்!
ஊட்டிக் குளிர்சேர் பாட்டரசன்
.......... ஒண்மைத் தமிழால் வாழ்த்துகிறேன்!
கற்றோர் தம்மை வணங்கிடுவார்
.......... கடமை மறவர் தென்பசியார்!
பெற்றோர் தம்மைத் தெய்வமெனப்
.......... பேணிப் போற்றும் அறமுடையார்!
உற்றோர் மற்றோர் மகிழ்ந்திடவே
.......... உதவுங் கருணைக் குணமுடையார்!
பொற்றேர்த் திருமால் அன்பன்யான்
.......... புலமை பொலிய வாழ்த்துகிறேன்!
சோலை பூத்துச் செழிக்கட்டும்!
.......... சொந்தம் பூத்துக் கொழிக்கட்டும்!
மாலை பூத்து மயக்கட்டும்!
.......... மகிழ்ச்சி பூத்து மணக்கட்டும்!
காலை பூத்துக் கமழ்வதுபோல்
.......... காலம் பூத்துக் கனியட்டும்!
சாலை பூத்துத் தென்பசியார்
.......... தழைத்து வாழ்க பல்லாண்டே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.
05.04.2024
Aucun commentaire:
Enregistrer un commentaire