samedi 13 avril 2024

சிறப்புப் பாயிரம்

 

பாவலர்மணி வ. சண்முகம் படைத்த

தேனமுத விருத்த நுாலுக்குச்

சிறப்புப் பாயிரம்

 

முழையூர் பிறந்த முத்தமிழ் வாணர்!

மழையூர் சோழன் மாளிகை சேர்ந்து

கற்றுத் தேர்ந்த கன்னல் பாவலர்!

பெற்றோர் வஞ்சி லிங்கப் பிள்ளை

அன்பகச் சரோசா! அறஞ்சேர் குடும்பம்!

பண்பகம் என்று பார்ப்போர் உரைப்பர்!

முகநுால் நட்பை அகமேல் பதித்து

மிகுநுால் வன்மை விளைந்த நாவலர்!

அடக்கம், அமைதி, ஆற்றல் ஓங்கி

நடக்கும் மறவர்! நற்றமிழ் உழவர்!

பற்றுடன் பாவலர் அரங்கில் பயின்று

பொற்புடன் பூத்த நற்றேன் அமுத

விருத்தம்! இளங்கோ, விந்தைக் கம்பன்,

திருமுறை யடியார் செப்பிய வழியில்

உலகே வாழ உயர்ந்த நெறிகளைக்

குலவும் தமிழின் கோல அணிகளைப்

பாட்டின் அரசன் பாரதி தாசன்

கேட்டதற் கிணைங்கித் தீட்டிய இந்நுால்

பாட்டு வளத்தைப் படிப்பவர்க் கூட்டும்!

காட்டு வளத்தைக் கவிகளில் காட்டும்!

மரபு தமிழின் மாட்சியைச் சூட்டும்!

உரவே கூட்டும்! உரிமையை மூட்டும்!

முக்கடல் சூழும்! முகமோ இமயம்!

எக்கடல் வெல்லும்? இன்றமிழ் ஆழம்

என்றே யுணர்ந்த இந்திய நாட்டில்

நன்றே தமிழின் நன்னெறி சூழ

முன்னைத் மொழிமேல் மோகங் கூடத்,

தன்னே ரில்லாத் தண்டமிழ் ஆள,

ஈரா யிரத்தை மூவெட்டு இணையும்

தீரா ஆசையில் திளைத்த காலம்

தண்முகங் கொண்ட சண்முகப் புலவர்

பண்முக மின்னப் படைத்தார் நுாலே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

13.01.2024

Aucun commentaire:

Enregistrer un commentaire