samedi 13 avril 2024

வாழ்த்துக்கவிதை

தமிழ்க் கலாச்சார சங்கம் நடத்தும்

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு

சிறந்தோங்க வாழ்த்துகிறேன்! 

 

புலிபறக்கும் மாமறவர் சோழர் தம்மின்

          புகழ்பறக்கும் வரலாற்றைப் பேசும் இந்நுால்

கிளிபறக்கும் அழகாக இன்ப மூட்டும்!

          கிளைபடைக்கும் பூக்களென மணமே கூட்டும்!

ஒளிபடைக்கும்! உயர்வளிக்கும்! உலகே போற்ற

          ஒண்டமிழின் மேன்மையினை எடுத்துக் காட்டும்!

வலிபடைக்கும் மெலிபடைக்கும் பாட்டின் மன்னன்

          வாழ்த்துகிறேன்! மாநாடு வெற்றி காணும்!

 

சோறளிக்கும் வளநிலத்துத் தஞ்சைக் கோயில்

          சோழர்களின் கலைகாக்கும்! தொன்மை சொல்லும்!

ஆறளிக்கும் வளமாக ஆய்வை யேந்தி

          அமுதளிக்கும் இம்மலரை அகமே கொள்வோம்!

ஏறளிக்கும் விருதேற்று வாழ்ந்த மண்ணின்

          எழிலளிக்கும் மாநாட்டை நடத்தி நன்றே

பேறளிக்கும் தமிழ்ச்சங்கம் வாழ்க! வாழ்க!!

          பெயர்பதித்த தொண்டர்கள் வாழ்க! வாழ்க!!

 

கல்லணையைக் கட்டிவைத்த கரிகால் சோழன்

          காலத்தைக் கோலத்தை ஓதும் இந்நுால்

சொல்லணையைக் கட்டிவைத்த மாட்சி யாகும்! 

          சுவையணையே இல்லாமல் பொங்கிப் பாயும்!

பல்லணையைக் கட்டிவைத்த நன்மை போன்று

          பன்னாட்டு மாநாடு! நற்றேன் கூடு!

நல்லணையைக் கட்டிவைத்த ஆட்சி யாக

          நலங்காணப் பாட்டரசன் வாழ்த்து கின்றேன்! [52]

 

12.04.2024

Aucun commentaire:

Enregistrer un commentaire