சந்தப்பாமணி
புலவர் அரங்க. நடராசர் ஏன் சென்றார்?
பண்ணியல் ஆய்ந்து படைத்தது போதுமென
விண்ணியல் காண விரைந்தாரோ? - கண்ணியல்பு
இன்றி இழியும்! அரங்க. நடராசர்
என்று வருவார் இயம்பு?
நுண்ணிய ஆழ்புலமை! நோக்கம் தமிழ்மேன்மை!
எண்ணிய தெல்லாம் இனவுயர்வு! - கண்ணியம்
மிக்க அரங்க. நடராசர் மேலடைந்தார்!
செக்கெனச் சுற்றும் துயர்!
மரபும் கவியும் வடித்தநட ராசர்
திருளும் துயரிட்டேன் சென்றார்? - உரவிடம்
வேகும்! வெடிக்கும்! விழிகள் அலைந்தழுவும்!
போகும் அவர்பின் புகழ்!
ஐயத்தைத் தீர்க்கும் அரங்க நடராசர்
வையத்தைத் தாண்டி வழிகண்டார்! - மையகத்தை
நீக்க வருவாரோ? நெஞ்சம் நினைந்துருகி
ஏக்க முறுமே இருண்டு!
எத்தனை மேடைகள்? ஏத்தனை ஆய்வுரைகள்?
சொத்தெனத் தந்த சுடர்மதியர்! - இத்தரையை
விட்டுப் பிரிந்ததுமேன்? கொட்டும் துயர்மழை
கட்டுக் கடங்காது காண்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
Aucun commentaire:
Enregistrer un commentaire