mardi 16 avril 2024

சாற்றுகவி

 

பாவலர் தென்பசியார் படைத்த

தமிழ்ப்பாவை நுாலுக்குச்

சாற்றுகவி

.

திருப்பாவை யாப்பழகில் தமிழ்ப்பாவை தீட்டித்

...........    திக்கெட்டும் மொழிபரவ நல்வழியைக் காட்டி

அரும்பாவை யழகாகப் பொன்னணிகள் சூட்டி

...........    அளித்தகவி ஒவ்வொன்றும் மாமறவன் ஈட்டி!

இரும்பாலைக் கொதிப்பாக இனவுணர்வை மூட்டி

...........    எல்லைவரை எதிர்கொண்டு கொடுங்பகையை ஓட்டிக்

கரும்பாலைச் சருக்கரையை யெழுத்துக்குள் கூட்டிக்

...........    காலத்தின் நுால்படைத்த தென்பசியார் வாழ்க!

.

மூவேந்தர் புகழ்பாடி முக்கொடியை ஏற்றி

...........    முத்தமிழே முதன்மொழியாம் உண்மைநெறி சாற்றிப்

பாவேந்தர் பாதையிலே தமிழ்ப்பணியை யாற்றிப்

...........    பகுத்தறிவு சுடரொங்க அறிவெண்ணெய் ஊற்றி

நாவேந்தர் அண்ணாவைப் பெரியாரைப் போற்றி

...........    நம்கலைஞர் நுால்படித்து நெஞ்சத்தைத் தேற்றிக்

காவேந்தர் என்றுரைக்க இந்நுாலைத் தோற்றிக்

...........    கடனாற்றும் நல்லதமிழ்ப் பேரொளியார் வாழ்க!

.

தாய்மொழியின் சீர்மையினைத் தொடுத்தழகாய் ஊட்டும்!  

...........    தமிழ்நாட்டின் சீர்மையினைத் தழைத்தழகாய்க் காட்டும்!

வாய்மொழியின் சீர்மையினை வடித்தழகாய்ச் சூட்டும்!

...........    வள்ளுவத்தின் சீர்மையினை மலர்ந்தழகாய்க் கூட்டும்!

சேய்மொழியின் சீர்மையினைச் செழித்தழகாய் ஈட்டும்!

...........    திராவிடத்தின் சீர்மையினைச் சேர்த்தழகாய் நாட்டும்!

வேய்மொழியின் சீர்மையினை விரைந்தழகாய் மீட்டும்!  

...........    வீரியநுால் பாவலர் வ. இராமதாசர் வாழ்க!

.        

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

16.04.2024

Aucun commentaire:

Enregistrer un commentaire