samedi 4 mai 2019

சிலேடை வெண்பா



சிலேடை வெண்பா
  
செருப்பும் இடுப்பு வாரும்
  
அடியேந்தும்! வண்ண அழகேந்தும்! மாட்டப்
பிடியேந்தும்! பின்னலெழில் பேணும்! - உடற்காக்கும்!
தோலேந்தும்! முள்ளேந்தும்! வாலேந்தும் வாரணியும்
காலேந்தும் தேய்செருப்பும் காண்!
  
செருப்பு
  
காலடியை ஏந்தும், கண்களைக் கவரும் அழகிய வண்ணத்தை உடையது. கால் விரல்களை மாட்டப் பிடியிருக்கும், அல்லது கொக்கி இருக்கும். மேல் வார்கள் பின்னல்களைப் பெற்றிருக்கும். வெப்பத்திலிருந்து கால்களைக் காக்கும். தோலால் செய்யப்படும். செருப்படியில் முட்கள் குத்தி இருக்கும்.
  
இடுப்பு வாரணி
  
அடிக்க உதவும். கண்களைக் கவரும் அழகிய வண்ணத்தை உடையது. இடுப்பில் அணியக் கொக்கியைப் பெற்றிருக்கும். பின்னல்களைப் பெற்றிருக்கும். உடல் அணியும் உடையைக் காக்கும். தோலால் செய்யப்படும். மேலே முட்களையும் கொண்டிருக்கும்.
  
எனவே, வால்போல் நீண்டுள்ள வாரணியும், செருப்பும் ஒப்பாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
04.05.2019

1 commentaire:

  1. தங்கள் புலமை அபாரம்
    மத தீவிரவாத்திற்கு எதிராக ஒரு வெண்பா எழுதினால் தங்கள் ரசிகர்களுக்கு மகிழ்வு...
    வேண்டுகோள் இது

    RépondreSupprimer