lundi 28 octobre 2013

கம்பனில் ஒளிர்வது - பகுதி 2




கம்பன் கவியில் ஓங்கி ஒளிர்வது

[கருணை ஒளி, காதல் ஒளி, கடமை ஒளி, கற்பின் ஒளி]
[பிரான்சு கம்பன் விழாத் தலைமைக கவிதை]

கவிஞர்களைக் கவிபாட அழைத்தல்!

கருணை ஒளியைப் பாடிடவே
     கவிஞர் அருணா வந்துள்ளார்!
அருணை ஈசன் இவரிடத்தில்
     அழகுத் தமிழைத் தந்துள்ளான்!
சுருணை யாகக் கவிபிறக்கும்!
     சுடரும் கதிராய்த் தமிழ்சிறக்கும்!
பெருமை மேவ அழைக்கின்றேன்
     அருமைத் கவிகள் அளித்திடவே!

அருணா செல்வப் பெண்மணியே! - கொடுப்பாய்
அமுதை அளிக்கும் இன்கனியே!
கருணை கரனின் திருவருளால் - என்றும்
கமழும் உன்றன் தமிழ்கவியே!
பாடுக! கவிமலர் சூடுக!

-------------------------------------------------------------------------------------------

கடமை ஒளியைப் பாடிடவே
     கவிஞர் தணிகா வந்திடுக!
மடமை இருளை கிழித்திடவே
     மாண்பாய்க் கவிகள் தந்திடுக!
உடைமை என்ன? உயர்வென்ன?
     உரிமை என்ன? உரைத்திடுக!
தடையை உடைத்துப் பாய்கின்ற
     தண்ணீர் போன்று தமிழ்மொழிக!

தணிகா வருகவே! - மின்னும்
அணியாய் கவிகள் தருகவே!

-------------------------------------------------------------------------------------------

திங்கள் போன்றே ஒளிர்கின்ற
     தேனாம் காதல் காட்சிகளை
இங்கே பாட வருகின்றார்
     இனிய சரோசா நற்கவிஞர்!
சங்கே முழங்கு! எனச்சொல்லிச்
     சபைக்கே இவரை அழைக்கின்றேன்!
தங்கு தடைகள் தாமின்றித்
     தமிழைத் தரவே வாழ்த்துகிறேன்!

இனிய சரோசா நற்கவிஞர்!
இவர் எழுதும் கவிதையைப்
புது..ரோசா என்பார் தமிழ்அறிஞர்!
எழுகவே! தேன்மழை பொழிகவே!

-------------------------------------------------------------------------------------------

கற்பின் ஒளியைப் வீசிடவே
     கவிஞர் தேவ ராசரை,நான்
நட்பின் சீரால் அழைக்கின்றேன்
     நல்ல கவிகள் நவின்றிடவே!
முத்தின் வெண்மை இவர்உள்ளம்!
     முற்றல் கனியோ இவர்சொல்லும்!
சற்றென்(று) எழுந்து கவிதுள்ளும்!
     சாற்றும் கருத்தோ நமைவெல்லும்!

வல்ல தேவராசர் கவிராயர்
வருக! வருக! வருகவே!
நல்ல தேனடையைத் தமிழ்நேயர்
உண்ண தருக! தருகவே!

-------------------------------------------------------------------------------------------

14.09.2013 (தொடரும்)

17 commentaires:

  1. கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அன்றளித்த பாக்களை ஆவலுடன் கற்றுவந்து
      இன்றளித்த வாழ்த்தும் இனிது!

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா

    ஒவ்வொரு கவிஞர்களையும் வாழ்த்திய விதம் அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழன் தமிழனை வாழ்த்திட வேண்டும்
      அமிழ்தச் சுவையை அளித்து!

      Supprimer
  3. // இனிய சரோசா நற்கவிஞர்!
    இவர் எழுதும் கவிதையைப்
    புது..ரோசா என்பார் தமிழ்அறிஞர்! //

    தேன்மழையை ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தேன்மழையில் நீ..நினைந்து தீட்டிய செந்தமிழை
      நான்சுவைத்து உற்றேன் நலம்!

      Supprimer
  4. உள்ளம் குளிர! உவகை ததும்ப!
    வெள்ளம் இதுவென வியக்க! அள்ளக்
    குறையாத கன்னல் கவிகாண! இங்கு
    நிறையாதோ மனமும் நிதம்!

    அருமை ஐயா! தொடருங்கள்!...

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உள்ளம் குளிர ஒளிரும் இளமதியே!
      துள்ளும் கவிகளைத் துாவு!

      Supprimer
  5. அழகு தமிழை ரசித்தேன், எனது வணக்கங்களும் பாராட்டுக்களும் ஐயா,

    உங்களது அழைப்பை பெற்ற கவிஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகுத் தமிழை அகம்பதித்தீா்! அன்பாய்ப்
      பழகும் தமிழைப் படித்து!

      Supprimer
  6. அவரவர் பெருமைகளை நயமாக மிகச் சிறப்பாகக் கூறிக்
    கவிஞர்களைக் கவிபாட அழைத்தவிதம் மிக அருமை!

    உங்கள் கவிதைகளில் என்னைக் கவர்ந்ததே
    எத்தனை இலகுவாக உள்ளதோ
    அத்தனை இலகு சொற்களால்
    மிக இனிமையாக அருமையாகக் கவிதைகள்
    தருகின்றீர்கள்! வாசகரின் ஆவலைத் தூண்டும்
    காந்தசக்தி உங்கள் கவிநடையில் உண்டு!

    அற்புதம்! தமிழ்த்தாயின் கொடைதான் கவிஞரே! வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காந்தக் கவியழகில் கட்டுண்டாய்! செந்தமிழில்
      நீந்திக் களிப்பாய் நிதம்!

      Supprimer
  7. அருமை... அருமை ஐயா...
    வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அரும்..மை கலந்துநான் அந்தமிழைத் தீட்டிப்
      பெருமை அடையும் பிறப்பு!

      Supprimer

  8. பாவலரே! பாரதி தாசரே! பைந்தமிழின்
    காவலரே! காதல் தமிழ்மணக்கும் - நாவலரே!
    மேடையினை ஆள்கின்ற வேந்தரே! நற்கனிக்
    கூடையினைத் தந்தீா் குளிர்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காடு மணக்கும்! கமழும் கவியேந்தி
      ஏடு மணக்கும்! இதயமெனும் - கூடும்
      குளிர்ந்து மணக்கும்! கொடுக்கும்உன் பாட்டால்
      ஒளிர்ந்து மணக்கும் உயிர்!

      Supprimer
  9. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer