jeudi 3 octobre 2013

பல்லாண்டு வாழியவே!


மணமக்கள் பல்லாண்டு வாழியவே!

சொல்லாண்டு வாழ்க! சுடர்மண மக்களே!
தொல்லாண்டு வாழ்க சுவையுடனே! - இல்லறத்தை
நல்லாண்டு வாழ்க! நறுந்தமிழ்போல் சீர்மேவிப்
பல்லாண்டு வாழ்க படர்ந்து!

வண்ண மலர்கள் மலர்ந்தாட!
     அன்னம் அழகாய் அசைந்தாட!
உண்ணத் திகட்டா மழலைமொழி
     ஓதும் கிளிகள் உவந்தாட!
எண்ண அரங்கில் இனிமையினை
     ஏந்தி என்றும் நெகிழ்ந்தாட!
அண்ணல் அருளால் சாந்ரீனும்
     அருமைப் பிரபும் வாழியவே!

சந்தக் கம்பன் தண்டமிழைச்
     சாற்றும் அசோகன் பிரபாவும்
தந்த செல்வி! பண்பொளிரும்
     தங்கச் செல்வி சாந்ரீனைச்
சொந்தம் பந்தம் புடைசூழச்
     சூடி மகிழும் நற்பிரபு!
கந்தம் கமழும் கவியாகக்
     காலம் வென்று வாழியவே!

சம்பத் குமாரும் கோமதியும்
     தந்த செல்வன்! இன்பிரபு
செம்பொன் செல்வி சாந்ரீனைச்
     சேரும் மணநாள்! வாழ்த்திடுவோம்!
நம்மின் முன்னோர் நவின்றிட்ட
     நலங்கள் யாவும் காணுகவே!
கம்பன் கழகச் சார்பாகக்
     கவிதை தந்தேன் வாழியவே!

அன்பில் ஆழ்க! இயற்கையெழில்
     அமுதில் ஆழ்க! முப்பாலின்
இன்பில் ஆழ்க! இளமைதரும்
     இசையில் ஆழ்க! புலவரென
மன்றில் ஆடும் வண்டமிழ்போல்
     மகிழ்வில் ஆழ்க! மணமக்கள்
குன்றில் வாழும் குகனருளால்
     குளிர்ந்து கொழித்து வாழியவே!

28.09.2013

10 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    திருமணத் தம்பதிக்கு-செலுத்திய கவிமலை மிக மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா பால்லாண்டு வாழ்க.......வாழ்க....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. பிரபு சாந்த்ரீன் பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகின்றேன்

    RépondreSupprimer
  3. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது

    எனும் குறளுக்குப் பொருள் போல் தோன்றியது. மேலும்
    இல் வாழ்வின் இனிமைக்கு இலக்காகவும் இலக்கணமும்
    அதுவே எனவும் தங்கள் கவிதை சொல்லாமல் சொல்கிறது

    . Permettez-moi également de féliciter le couple



    சுப்பு ரத்தினம்.
    www.wallposterwallposter.blogspot.com
    www.subbuthatha72.blogspot.in
    www.vazhvuneri.blogspot.com

    RépondreSupprimer
  4. அருமை... மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  5. நறுந்தமிழ்போல் சீர்மேவிப்
    பல்லாண்டு வாழ்க படர்ந்து!

    தேனாய் தித்திக்கும் கவிதை தந்தே வாழ்த்துகள் தந்த
    அருமையான பகிர்வுக்குப் பாரட்டுக்கள்..!

    RépondreSupprimer
  6. அருமையான திருமண வாழ்த்துப் பாமாலை!

    அன்பில் ஆழ்க! இயற்கையெழில்
    அமுதில் ஆழ்க! முப்பாலின்....
    இதன் தொடர் சீர்கள் அற்புதமாக ரசிக்கவைத்தன!

    மணமக்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!.

    உங்களுக்கும் என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  7. வாழ்த்துக் கவிதை அருமை! நன்றி!

    RépondreSupprimer
  8. இனிய திருமண வாழ்த்துக்கள்
    மணமக்கள் என்றும் நலமோடு வாழ
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    வாழ்த்துக் கவிகண்டு மெய்மறந்தேன்
    அருமையோ அருமை கவிஞரே

    வாழ்க வளமுடன்

    RépondreSupprimer
  9. வாழ்த்துப் பா மிக மிக அருமை
    புது மணத் தம்பதிகளுக்கு
    எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்களும்...

    RépondreSupprimer