mercredi 23 octobre 2013

வாலியைப் போற்றுவோம் - 3




வாலியைப் போற்றுவோம்!
[தலைமைக் கவிதை]

தோழி தோழர் வாலி புகழை
வாழி என்று வாழ்த்தி வடித்தனர்!

இளமை பொங்கும் இனிய பாக்களை
வளமைத் தமிழில் வழங்கிய வாலி!
வாலிபக் கவிஞர்! வசனக் கவிஞர்!
மாலினைப் போற்றி மகிழ்ந்த கவிஞர்!
காவியக் கவிஞர்! காப்பியக் கவிஞர்!
ஓவியக் கவிஞர்! உணர்ச்சிக் கவிஞர்!
திரையிசை போற்றும் தேன்மனக் கவிஞர்!
உரைநடை நூல்களால் ஒளிரும் கவிஞர்!
எண்ணம் யாவும் இனிக்கும் வண்ணம்
கண்ணன் கழலிணை காட்டிய கவிஞர்!
கம்பன் கவிதையுள் கட்டுண் டிருந்து
செம்பொன் இராமனைச் செப்பிய கவிஞர்!
வள்ளுவர் வடித்த வான்மறை அமுதை
அள்ளிப் பருகிய அறநெறிக் கவிஞர்!
கலைஞர் தமிழில் காதல் கொண்டு
குலையாய்ப் பாக்கள் கொடுத்த கவிஞர்!
வித்தக கவிஞர் விசயின் நெஞ்சுள்
முத்தமிழ் ஆக முகிழ்த்த கவிஞர்!
ஏந்தல் எங்கள் இராமா நுசனின்
பூந்தாள் போற்றிப் புகழ்ந்த கவிஞர்!
இன்னும் இவர்கள் இருக்கிறார் என்று
மின்னும் மாந்தரை மீட்டிய கவிஞர்!
பாண்டவர் பூமி பாடிய கவிஞர்!
ஆண்டவர் அடிகளில் ஆழ்ந்த கவிஞர்!
ஆனந்த விகடனில் அனைவரும் மகிழத்
தேனார் கவிதைகள் தீட்டிய கவிஞர்!
திரையிசை பூக்கள் திகட்டா ஆயிரத்தை
மரைமகள் அருளால் வழங்கிய கவிஞர்!
கம்பன் எண்பது கவிநூல் பாடி
எம்மனம் புகுந்த ஈடில் கவிஞர்!
வெற்றிவேல் முருகனை வெண்பா யாப்பில்
பற்றிக் களித்த பக்தி கவிஞர்!
பொய்க்கால் என்னும் பொலிவுடை நூலை
நெய்போல் மணக்க நெய்த கவிஞர்!
அம்மா என்னும் அன்பொளிர் நூலை
இம்மண் தழைக்க ஈந்த கவிஞர்!
நெஞ்சுள் ஆடும் நினைவு நாடா
கொஞ்சும் தமிழால் குவித்த கவிஞர்!
அழகிய சிங்கர் விழுமிய நூலைப்
பழகிய தமிழால் பகன்ற கவிஞர்!

வாலியின் நூல்களை வரிசைப் படுத்த
வாலியின் வால்போல் வளரும் ஐயா!
வல்ல கவிகளை வடித்த வாலியைச்
செல்லத் தமிழால் சீராட்டு வோமே!

காளியின் தாசன் போன்று
     கவிதைகள் படைத்தோர் வாழி!
வாலியின் புகழை இங்கு
     வளமுறச் சுவைத்தோர் வாழி!
வேலியின் அரணைப் போன்று
     வியன்தமிழ் காப்போர் வாழி!
நாளினை இனிக்கச் செய்த
     நல்லவர் வாழி! நன்றி!

18.05.2013

18 commentaires:

  1. வஞ்சம் இல்லா வாலியைப் போற்றி
    கொஞ்சும் மொழியில் கெஞ்சும் பாக்கள்!
    தஞ்சம் நீர்தான் தமிழுக்கு வேறில்லைஎம்
    நெஞ்சம் நிறைய நிலைத்து நிற்பீரே !..

    ஐயா!... பேச வார்த்தையில்லை.
    சொற்கோர்வை எம்மைக் கட்டி இழுத்துச் செல்கின்றது.

    அவ்வளவு இனிமை! உங்களால் எம் தமிழுக்குப் பெருமை!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இதயம் ஒளிரும் இளமதியே! வாழ்க
      முதலில் கருத்தை மொழிந்து!

      Supprimer
  2. காளியின் தாசன் போன்று
    கவிதைகள் படைத்தோர் வாழி!
    வாலியின் புகழை இங்கு
    வளமுறச் சுவைத்தோர் வாழி!
    வேலியின் அரணைப் போன்று
    வியன்தமிழ் காப்போர் வாழி!
    நாளினை இனிக்கச் செய்த
    நல்லவர் வாழி! நன்றி!

    இரண்டாவது பகுதி வாசித்த கையோடு மூன்றாம் பகுதியும் வாசிக்கக் கிடைத்தது...
    அருமை ஐயா....

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      நல்ல கவிகளை நாளும் படித்துவக்க
      வல்ல மனத்தோனே வா!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      வாலிபோல் வண்ணக் கவியெழுதி நானோங்க
      மாலிடம் கேட்டேன் வரம்

      Supprimer
  4. அற்புதம்... அவ்வளவுதான்.....

    உலக மகா கவிஞரைப்பற்றி நான் வேறென்ன சொல்ல

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அற்புதப் பாவலா் ஆா்த்தபுகழ் வாலியார்
      பொற்றமிழ் வாழும் பொலிந்து!

      Supprimer
  5. என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஐயா... வரிகளின் மிகவும் மகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள் பல... நன்றி...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      திண்டுக்கல் வாழும் தனபாலன் திண்கருத்தில்
      கண்டுச்சொல் மின்னும் கமழ்ந்து!

      Supprimer
  6. வாலியைப் போற்றிய மூன்றாம் பகுதி... என்ன சொல்வேன்...
    ஒவ்வொரு வரிகளும் வைரத்தில் தோய்ந்த வரிகளோ.. மின்னுகிறது...
    ஈடினையில்லாப் பெறுமதி வாய்ந்தவை.
    வியப்பிலிருந்து மீளவில்லை இன்னும் நான்!

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தேங்கனி நல்கும்! திறனோங்கச் செய்யும்!மென்
      பூங்கொடி சொற்கள் பொலிந்து

      Supprimer
  7. வாலியைப் போற்றும் இனிய கவிதை.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வண்ண கவிபடைத்த வாலியின் நுால்களை
      உண்ணும் புலவா் உளம்!

      Supprimer

  8. எப்படிச் சொல்வேன் எனதுயிர்ப் பாவலனே
    இப்படித் தீட்டும் எழுத்துகளை? - அப்பப்பா!
    ஒப்பிலாப் பாட்டு! தமிழ்ஒளிர் செல்வனை
    முப்பொழுதும் ஈர்க்கும் முனைந்து!

    இனிய. தமிழ்ச்செல்வன்

    RépondreSupprimer
    Réponses

    1. ஒப்பிலாப் பாட்டென்றே ஓதியவா! எந்நொடியும்
      தப்பிலா தோங்கும் தமிழ்ச்செல்வா! - அப்..பலாப்
      போன்றே இனிப்பவா! பூங்கருத்தை வெண்பாவில்
      ஈன்றே அளிக்க..வா இங்கு!

      Supprimer
  9. [[இளமை பொங்கும் இனிய பாக்களை
    வளமைத் தமிழில் வழங்கிய வாலி!]]

    I love vaali only because of this.

    தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1 போட்டு விட்டேன்.
    நன்றி!

    RépondreSupprimer

  10. வணக்கம்!

    நம்பள்கி வந்து நலமுற வாக்களிதார்
    எம்மன நன்றி இனிது!

    RépondreSupprimer