பாவலர் வெற்றிச்செல்விக்குப் பல்லாண்டு!
நல்ல நல்ல கவிதைகளை
நாளும் பாடிக் களிக்கின்ற
வல்ல வெற்றிச் செல்விக்கு
வடித்தேன் கோடி பல்லாண்டு!
சொல்லச் சொல்ல மனமொன்றித்
தொன்மை யாப்பைக் கற்பதனால்
எல்லாத் திசையும் புகழ்பாடும்
எழுதி வைத்தேன் திருவாக்கு!
இனமே காக்கும் பொற்போங்கும்!
ஈழத் தாயின் பற்றோங்கும்!
மனமே வெற்றிச் செல்விக்கு
வழங்கும் கோடி பல்லாண்டு!
வனமே மலர்ந்த எழிலாக,
வளமே நிறைந்த தமிழாகச்
சனமே வாழ்த்த வாழியவே!
சாற்றி வைத்தேன் திருவாக்கு!
அயலார் நாட்டில் வாழ்ந்தாலும்
அன்னைத் தமிழைத் தன்னுடைய
உயிரார் வெற்றிச் செல்விக்கே
உரைத்தேன் கோடி பல்லாண்டு!
இயலார் திண்மை பெற்றிடவும்
இல்லார் நன்மை உற்றிடவும்
வயலார் பசுமைப் பணியாற்ற
வரைந்து வைத்தேன் திருவாக்கு!
கற்கும் வன்மை! உளமென்மை!
கவிதை பாடும் உயர்புலமை
முற்றும் வெற்றிச் செல்விக்கு
மொழிந்தேன் கோடி பல்லாண்டு!
பற்றுங் கொடிபோல் செழித்திடவும்
பண்பும் அன்பும் கொழித்திடவும்
சுற்றும் பூமி மகிழ்ந்திடவும்
தொகுத்து வைத்தேன் திருவாக்கு!
பாட்டின் அரசன் கோட்டையிலே
பாடிப் பாடித் தமிழ்த்தேனை
ஊட்டும் வெற்றிச் செல்விக்கே
உவந்தேன் கோடி பல்லாண்டு!
நாட்டின் நிலையைத் தினந்தீட்டி
நல்லார் நெறியை மனமேற்றி
ஏட்டின் ஆற்றல் ஓங்குகவே!
இசைத்து வைத்தேன் திருவாக்கு!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாவலர் பயிரங்க முகநுால் குழுமம்
19.02.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire