பாட்டரசன் படும்பாடு!
1.
பல்வகைத் துன்பத்தில் பாட்டரசன் வாடுகிறேன்!
நல்வகை காட்டி நலந்தருவாய்! - தொல்லுலகைக்
காத்தொளிரும் கண்ணா! கருணை மழைபொழிவாய்!
பூத்தொளிரும் என்றன் புகழ்!
2.
நாய்போல் திரிவதுவோ? நற்றமிழ்ப் பாட்டரசன்
பேய்போல் அலைவதுவோ பேரிடலில்? - தாய்போல்
அணைத்தென்னைக் காத்திடுவாய் அச்சுதா! இன்றே
இணைத்தென்னை உன்னுள் இயக்கு!
3.
கூடுந் துயரால் கொதிப்புற்றுப் பாட்டரசன்
வாடும் நிலையேன் மணிவண்ணா? - ஆடும்
விதிமாற்றி வாழ்வை விடுவிப்பாய்! வெல்லும்
மதியேற்றித் தாராய் வளம்!
4.
பொல்லா வுறவுகளால் புண்ணாகிப் பாட்டரசன்
கல்லாய்க் கிடைக்கின்றேன் கார்வண்ணா! - எல்லா
நிலையுணர்த்தி என்னுள் இருந்திடுவாய்! பாடும்
கலையுணர்த்திச் செய்கவே காப்பு!
5.
அன்னை படுந்துயரால் அல்லுறும் பாட்டரசன்
முன்னை வினையோ? முகில்வண்ணா! - என்னை
உனையன்றி யார்காப்பார்? உற்றவூழ் தீர்ப்பார்?
மனமொன்றி வேண்டுகிறேன் வா!
6.
விண்ணடைந்த சுந்தரியால் வெந்துருகும் பாட்டரசன்
கண்ணுடைந்து பாய்ந்தோடும் கண்ணீரே! - பெண்ணிணைந்து
வாழும் பெரியோனே! வாட்டும் துயர்களைவாய்
ஆழும் விதியை அறுத்து!
7.
நம்பி யிருந்து நலிவுற்றுப் பாட்டரசன்
வெம்பி யழுவதேன் வேங்கடவா? - தும்பிதன்
வாலடி நுான்முடிபோல் வாடுகிறேன்! மாலேயுன்
காலடி மேன்மையைக் காட்டு!
8.
கொண்ட பணியாள் குழிபறிக்கப் பாட்டரசன்
கண்ட துயரம் கணக்கில்லை! - கொண்டலே!
இன்றே அவர்போக்கி என்னை யரவணைத்துக்
குன்றா வலிமை கொடு!
9.
வல்ல நரிகளின் வஞ்சத்தால் பாட்டரசன்
சொல்ல முடியாத் துயருற்றேன்! - நல்ல
வழிகாட்டி வாழ்விப்பாய்! மாமலை வண்ணா!
விழிகாட்டிக் துன்பம் விரட்டு!
10.
ஆசைக் கடலுக்குள் ஆழ்பட்டுப் பாட்டரசன்
மோச மடையதுவோ? முன்வினையோ? - வாசனே!
பற்றற்று வாழ்கின்ற பாதை யளித்திடுவாய்!
அற்றற்றுப் போகும் அவை!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
12.02.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire