பாவலர்மணி நெய்தல் நாடன் வாழியவே!
ஆயிரம் விருத்தம் தந்த
அரும்புகழ் நெய்தல் நாடா!
பாயிர மாக உன்னுால்
பாவலர் அரங்கைச் சொல்லும்!
தாயிடம் குடித்த நற்பால்
தமிழெனத் தழைக்கக் கண்டேன்!
வாயிடம் போட்டி போட்டு
வாழ்த்திடச் சொற்கள் முந்தும்!
பாவலர் மணியாய் மின்னும்
பார்புகழ் நெய்தல் நாடா!
காவல ராக நாளும்
கனித்தமிழ் மொழியைக் காத்தாய்!
நாவலர் ஆற்றல் பெற்றாய்!
நல்லவர் உறவை யுற்றாய்!
நீ..வளர் தமிழின் செல்வன்!
நிலமெலாம் போற்ற வாழ்க!
ஈழமண் காத்த வீரர்
எழிற்குடி நெய்தல் நாடா!
வாழமண் மீட்க வேண்டும்!
வடித்துள பாக்கள் துாண்டும்!
ஆழமண் உழுதல் போன்றே
அழகுமண் சொழித்தல் போன்றே
சூழமண் ணன்மை செய்தாய்!
கூடருமண் உன்னால் என்பேன்!
சீருடை ஓளவை மாண்பைத்
தீட்டிய நெய்தல் நாடா!
போருடை யாற்றல் கண்டாய்!
புயலுடை வேகங் கொண்டாய்!
பாருடை யறத்தைப் பாடிப்
பாரதி நெறியில் நின்றாய்!
தேருடைப் பாட்டின் வேந்தன்
திண்படை மறவா வாழி!
பாட்டொளிர் அரசன் மன்றில்
பயின்றொளிர் நெய்தல் நாடா!
நாட்டொளிர் கொடியின் பாட்டில்
நடையொளிர் அழகைக் கண்டேன்!
வீட்டொளிர் மாட்சி யூட்டி
விழியொளிர் காட்சி காட்டி
மீட்டொலிர் புலமை வாழி!
மிகுத்தொளிர் பெருமை வாழி! [96]
17.02.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire