dimanche 19 février 2023

பாவலர் சரளா விமலராசா


 

பாவலர் சரளா விமலராசா வாழியவே!

 

வண்ணம் மின்னும் எண்ணங் கொண்டு

         மரபைப் பாடும் கவி.சரளா!

மண்ணின் வளமும் மக்கள் நலமும்

         மனத்தில் கமழும் கலைச்சரளா! 

பண்ணின் மீதும் பண்பின் மீதும்

         பற்றே படரும் பனிச்சரளா!

கண்ணன் அருளால் கவிதைப் பொருளால்

         கற்றோர் போற்ற வாழியவே!

 

அறத்தைப் போற்றி மறத்தைச் சாற்றி

         ஆளும் இனிய கவி.சரளா!

முறத்தைக் கொண்டு புலியை மோதும்

         மூத்த குடியில் வருஞ்சரளா!

சிறப்பை நாடிச் செழிப்பைச் சூடிச்

         செயல்கள் ஆற்றும் அருஞ்சரளா!

திறத்தைக் கண்டு திகைக்கும் உலகம்!

         செம்மைத் தமிழ்போல் வாழியவே!

 

பாரி வள்ளல் காரி வள்ளல்

         பணியைத் தொடரும் கவி.சரளா!

மாரி யாக வளத்தை நல்கி

         வாழ வைக்கும் தமிழ்ச்சரளா!

ஏரி நீர்போல் சூரி தேர்போல்

         ஏற்றம் கொடுக்கும் எழிற்சரளா!

வாரி வழங்கும் வண்மை வாழ்வு

         மக்கள் வாழ்த்த வாழியவே!

 

ஆடும் மயில்சேர் பாடுங் குயில்சேர்

         ஆக்கம் அளிக்கும் கவி.சரளா!

ஓடும்  நதியாய் ஒளிரும் மதியாய்

         உள்ளம் படைத்த உயர்சரளா!

நாடும் வீடும் நன்றே திகழ

         நாளும் உழைக்கும் நறுஞ்சரளா!

ஈடும் இல்லை என்றே சொல்ல

         எழுதிக் குவித்து வாழியவே!

 

மரபு யாப்பை வரமாய்ப் பெற்று

         மணக்கும் வண்ணக் கவி.சரளா!

இரவும் பகலும் இன்பத் தமிழை

         எண்ணிப் படிக்கும் தண்சரளா!

வரவும் செலவும் வகையைத் தெரிந்து

         வாழும் வல்ல செயற்சரளா!

தரவும் இசையும் தழைத்த தமிழ்போல்

         சரளா குலத்தோர் வாழியவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாவலர் பயிரங்க முகநுால் குழுமம்

19.02.2023

Aucun commentaire:

Enregistrer un commentaire