பாவலர் நிலவழகி பார்போற்ற வாழியவே!
பிள்ளை யுள்ளம் பெற்றே திகழும்
பெருமை மிக்க நிலவழகி!
கொள்ளை கொள்ளும் கோலத் தமிழைக்
கோயில் கட்டித் தொழுகின்றார்!
கிள்ளை மொழியும் கெண்டை விழியும்
கீர்த்தி மிக்க அழகூட்டும்!
வெள்ளை மனமோ வேண்டி வேண்டி
விந்தைத் தமிழின் அணிபூட்டும்!
முகநுால் வழியே முன்னைத் தமிழாம்
மொழியைப் பாடும் நிலவழகி!
அகநுால் கற்றும் புறநுால் கற்றும்
அகிலப் புகழைச் சூடுகவே!
மிகுநுால் புலவர் வியக்கும் வண்ணம்
மேன்மைப் பாக்கள் பாடுகவே!
புகுநுால் தன்னில் புத்தி பதித்துப்
புகழ்நுால் தீட்ட வாழ்த்துகிறேன்!
காலை மாலை கவிதைக் கலையைக்
காதல் செய்யும் நிலவழகி!
சோலைக் குள்ளே சுற்றும் வண்டாய்த்
துாய தமிழின் மதுவுண்டார்!
பாலை நிகர்த்த மனத்தின் அழகும்
பாகை நிகர்த்த குணத்தழகும்
சாலை யளித்த அறத்தின் அழகும்
தழைத்தே யோங்க வாழ்த்துகிறேன்!
அல்லும் பகலும் அருமைத் தமிழின்
அமுதைப் பருகும் நிலவழகி!
சொல்லும் செயலும் ஒன்றே யாகும்!
துணிவே வாழ்வின் துணையாகும்!
செல்லும் வழிகள் செழித்தே பூக்கும்!
சிந்தை தமிழர் சீர்காக்கும்!
வெல்லும் வன்மை! விஞ்சும் நன்மை!
விந்தைக் கண்ணன் அருளுகவே!
பொருத்த மாக விருத்தம் பாடிப்
புகழைப் புனைந்த நிலவழகி!
அருத்தம் மின்ன அணிகள் பின்ன
அடிமேல் அடிகள் பதித்திட்டார்!
கருத்த மேகக் கனத்த பொழிவாய்க்
கருத்தைப் பேசும் திறனுற்றார்!
நிருத்த ஈசன் பெருத்த புலமை
நிலைக்கச் செய்ய வேண்டுகிறேன்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாவலர் பயிரங்க முகநுால் குழுமம்
21.02.2023