கேட்டலும் கிளத்தலும்
இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்பது காரிகையிலுள்ளதா? வேறு இலக்கண நூல்களில் விளக்கப்பட்டுள்ளதா? தயவுசெய்து விளக்கவும்.
காளியப்பன் எசேக்கியல்
சென்னை
------------------------------------------------------------------------
தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக்
கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனக்
கொச்சகக் கலிப்பா ஐந்து வகையாம்.
தரவே தரவிணை தாழிசை தாமும்
சிலவும் பலவும் சிறந்து மயங்கியும்
மற்றும் விகற்பம் பலவாய் வருநவும்
கொச்சகம் என்னும் குறியின ஆகும்.
யாப்பருங்கல விருத்தி - 86
தரவே தரவிணை தாழிசை சிலபல
மரபான் இயன்றவும் மயங்கி வந்தனவும்
அவ்வவ் பெயரான் அமைந்த கொச்சகமும்
ஆகும் என்ப அறிந்தி னோரே.
இலக்கண விளக்கம் - 738
தரவே ஆகியும் இரட்டியும் தாழிசை
சிலவும் பலவும் மயங்கியும் பாவேறு
ஒத்தா ழிசைக்கலிக்கு ஒவ்வா உறுப்பின
கொச்சகக் கலிப்பா ஆகும் என்ப.
அவிநயம்
தரவே தரவிணை தாழிசை சிலபல
வரன்முறை பிறழ அயற்பா மயங்கியும்
தனிச்சொல் பலவாய் இடைஇடை நடந்தும்
ஒத்தா ழிசைக்கலி உறுப்பினில் பிறழ்ந்தவும்
வைத்தவழி முறையால் வண்ணகம் இறுவாய்
மயங்கி வந்தவும் இயங்குநெறி முறையின்
கொச்சகக் கலியெனக் கூறினர் புலவர்.
மயேச்சுரம்
தரவே தரவிணை தாழிசை தாமும் சிலபலவாய்
மரபே இயன்றும் மயங்கியும் வந்தன கொச்சகமே.
யாப்பருங்கலக் காரிகை - 33
மேலும், வீரசோழியம் 118 ஆம் நுாற்பாவும், தொன்னுால் விளக்கம் 234 ஆம்
நுாற்பாவும், முத்துவீரியம் செய்யுளியல் 39 ஆம் நுாற்பாவும், கொச்சகக்
கலிப்பாவின் இலக்கணத்தை உரைக்கின்றன.
தரவு ஒன்றே வந்தால் 'தரவு
கொச்சகக் கலிப்பா' என்றும், தரவு இரண்டாய் வந்தால் 'தரவிணைக் கொச்சகக்
கலிப்பா' என்றும், சில தாழிசையால் வந்தால் 'சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா'
என்றும், பல தாழிசையால் வந்தால் 'பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா' என்றும்,
தரவு முதலாகிய ஆறு உறுப்பும் தம்முள் மயங்கியும் பிற பாவினோடு மயங்கியும்
வந்தால் அதனை 'மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா' என்றும் வழங்கக் காண்கிறோம்.
தரவு ஒன்றாய்ச் சுரிதகம் பெற்றதனைச் 'சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா'
என்றும், சுரிதகம் இல்லாததனை 'இயல் தரவு கொச்சகக் கலிப்பா' என்றும் தரவு
கொச்சகம் இருவகையாகும். இருவகையை உணர்த்தவேண்டிச் சுரிதகம், இயல் என்னும்
சொற்கள் முன்னே வந்தன.
தரவு இரட்டித்துச் சுரிதகம் பெற்று
வந்ததனைச் 'சுரிதகத் தரவிணைக் கொச்சகக் கலிப்பா' என்றும், சுரிதகம்
இல்லாததனை 'இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா' என்றும், தரவு கொச்சகக்
கலிப்பா போன்று தரவிணைக் கொச்சகக் கலிப்பாவும் இருவகையாகும். இங்கும்
இருவகையைப் பிரித்துணரச் சுரிதகம், இயல் என்னும் சொற்கள் முன்னே வந்தன.
தரவு கலிப்பாவின் முதல் உறுப்பு. செய்யுளின் கருத்தைத் தொடங்கி அல்லது
தொகுத்து உரைப்பது. ஒருவனை அல்லது ஒன்றைக் கூறப்படுவது போன்ற அமைப்பைக்
கொண்டிருக்கும்.
அளவடியில் அமையும். மோனை மூன்றாம் சீரில்
அமையும். இரண்டடிகள் ஓரெதுகை பெற்று அமையும். [நான்கடிகளில் தரவு அமைந்தால்
நான்கடியும் ஓரெதுகை பெற்று வருவது சிறப்பு]
சிற்றெல்லலை
நான்கடி, பேரெல்லை பன்னிரண்டடி. ஒரோவழி பன்னீரடியின் இகந்தும் வரும்.
இவ்வாறு தொல்காப்பியம் உரைக்கும். தரவுவின் சிற்றெல்லை முன்றடியானும்
உள்ளன.
தரவில் பெரும்பாலும் புளிமாங்காய், கருவிளங்காய்ச் சீர்களே வரும்.
எல்லா உறுப்பின் பொருளையும் தொகுத்துக்கொண்டு தந்து முன் நிற்றலின் தரவு என்பதுாஉம் காரணக்குறி.
நான்கடி ஓரெதுகை பெற்று வரும் கொச்ககக் கலிப்பா இரட்டித்து எட்டடி ஓரெதுகை
பெற்றுவரும் பாடல் இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்று பிற்காலத்தில்
பெயர்கொண்டது.
தனிச்சொல் பெற்றுவரும் இயல் தரவிணைக் கொச்சகமும், ஆண்டாள் பாடிய இயல் தரவிணைக் கொச்சகமும் வேறுபாடுடையன.
தனிச்சொல் பெற்று வரும் இயல்தரவிணைக் கொச்சகம், தரவின் சிற்றெல்லை
மூன்றடியாய் வருவதுண்டு. தரவு ஓரெதுகையிலும் பல எதுகையிலும் அமைவதுண்டு.
இரண்டு தரவும் வேறு வேறு எதுகையைப் பெறுவதுண்டு. ஆண்டாள் பாடிய இயல்
தரவிணைக் கொச்சகம் ஓரெதுகையில் மட்டுமே வரும்.
நான்கடி ஓரெதுகை பெற்று வரும் கொச்சகமும், கலிவிருத்தமும் வேறுபாடுடையன.
தரவு கொச்சகம் கலித்தளையும் வெண்டளையும் மட்டும் பெற்று வருகின்றது. இது
பெரும்பான்மை. அருகிச் சிலவிடங்களில் ஒன்றா வஞ்சித்தளை வரலாம் எனப்
பாடல்களைப் பார்க்கும்போது தெரிகிறது. கலிவிருத்தத்தில் தளை பார்க்கப்
படுவதில்லை.
தரவு கொச்சகம் ஓரெதுகையில் நான்கு, ஆறு, அல்லது எட்டடிகள் பெற்று வருகின்றன. கலிவிருத்தம் நான்கடியே பெற்று வரும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
02.02.2020