samedi 29 février 2020

சிந்துப்பா மேடை - 4


சிந்துப்பா மேடை - 4
  
ஆனந்தக் களிப்பு
  
எடுப்பு
வெண்மதி வந்தது விண்ணில் - பொங்கித்
தண்ணதி பாயுது தண்டமிழ்ப் பண்ணில்!
            [வெண்மதி]
  
முடிப்பு
1.
பொன்முகப் பேரெழில் காட்டி - முன்னே
   போகிறாள் கொஞ்சிடும் ஆசையைக் கூட்டி!
என்னகக் காதலை மூட்டி - நாளும்
   ஏங்கிடச் செய்கிறாள் இன்னிசை மீட்டி!
            [வெண்மதி]
  
2.
அன்னத்தின் நன்னடை கொண்டாள் - என்றன்
   அங்கத்தைப் பார்வையால் அள்ளியே உண்டாள்!
கன்னத்தின் மென்மலர்ச் செண்டாள் - கவி
   கம்பனின் சொற்களில் போதையைக் கண்டாள்!
            [வெண்மதி]
  
3.
பஞ்செனும் நெஞ்சினை உற்றாள் - இன்றேன்
   பாகெனும் பேச்சினை யாரிடம் கற்றாள்!
பிஞ்செனும் மென்விரல் பெற்றாள் - காதல்
   பித்தேற்றி வாட்டிடும் பெண்கொண்ட நற்றாள்!
            [வெண்மதி]
  
4.
எத்தனை எத்தனை எண்ணம் - வானில்
   ஏறியே நீந்திடும் பற்பல வண்ணம்!
தித்திக்கும் இன்மதுக் கிண்ணம் - அவள்
   தீண்டிடத் தீண்டிடத் தேன்சுவை நண்ணும்!
            [வெண்மதி]
  
5.
மூடி மறைப்பதும் ஏனோ? - மனம்
   வாடிக் கிடப்பதும் நன்னெறி தானோ?
ஓடிக் குதிப்பதும் மானோ? - இங்குப்
   பாடிப் படைப்பதும் பைந்தமிழ்த் தேனோ?
            [வெண்மதி]
  
இது 'ஆனந்தக் களிப்பு' என்னும் சிந்துப்பா. ஒவ்வொரு அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். 'பொன்முக' என்பது முதல் 'கூட்டி' என்பது வரை ஓரடி. ஒவ்வொரு சீரும் மூன்று உயிர்களைக் கொண்டிருக்கும். மூன்றாம் சீரில் இரண்டு உயிரே இருந்தாலும் மற்றும் ஓர் உயிர் அளவு அது நீண்டு இசைக்கும். அதன்பின் தனிச்சொல்லைப் பிரித்துக்காட்டும் சிறுகோடு. அதன்பின் முன்சீரின் இறுதி உயிரே மேலும் ஓர் உயிர் அளவு நீண்டு இசைக்கிறது. அதன்பின் இரண்டு உயிர் உள்ள நான்காம் சீா். எட்டாம் சீரும் இரண்டு உயிர். அதுவும் மேலும் ஓர் உயிர் அளவு நீண்டு இசைக்கிறது.
  
இத்தகைய இரண்டு அடிகள் ஒரே எதுகையில் அமைந்து ஒவ்வொரு அடியிலும் ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை பெறுவது ஒரு கண்ணி. அடிதோறும் மூன்று எட்டாம் சீர்களில் காட்டி, கூட்டி, மூட்டி, மீட்டி என இயைபு அமைய வேண்டும்.
  
இப்படிப்பட்ட ஓர் அடி மட்டும் ஐந்தாம் சீரில் எதுகையோ மோனையோ பெற்று எடுப்பு அமையும். இரண்டடிக் கண்ணிகளே முடிப்புகளாக வரும். எத்தனை முடிப்புகளும் எழுதலாம்.
  
தாயுமானவர், வடலுார் வள்ளலார், பாரதியார், பாவேந்தர் முதலியோர் ஆனந்தக் களிப்புப் பாடி இருக்கிறார்கள். கடுவெளிச் சித்தரின் ஆனந்தக் களிப்பில் சிறப்பான இயைபுத் தொடையைக் காணலாம்.
  
விரும்பிய பொருளில் ஆனந்தக் களிப்பு ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
29.02.2020.

Aucun commentaire:

Enregistrer un commentaire