dimanche 16 février 2020

வெண்பா மேடை - 158 - 159


வெண்பா மேடை - 158

காலோடி நடக்கும் வெண்பா!

வன்பாடல் செய்துறுக! வான்பாணி கண்டிடுக! 
நன்னாடல் நன்கறிக! நல்லுழைப்பு - என்றும்
உயர்வளிக்கும் சீர்வாழி உற்றிடுக! நன்றே
பயிரளிக்கும் கல்வி பயின்று!

இவ்வெண்பாவில் உள்ள கால்கள் [ா] நீங்கிய பின்னே வெண்பா இலக்கணம் சரியாக வரவேண்டும். வேறு பொருள் தரவேண்டும். கால்நீங்குவதால் 'காலோடி நடக்கும் வெண்பா' எனப் பெயர் வைத்தேன். 

பாணி - காலம்
நாடல் - ஆராய்தல்

நன்றே பயிர் விளையும் கல்வியைப் பயின்று வன்மைதரும் பாடல் படைத்திடுக. விளைக்கின்ற வானிலையை [பாணி- காலம்] அறிந்திடுக. மண்ணையும், விதைகளையும் ஆராய்ந்து[நாடல்] தெளிந்திடுக.  என்றும், நல்லுழைப்பால் உயர்வளிக்கும் சீர்கமழும் வாழ்த்துகளை  உற்றிடுக.

காலோடிய வெண்பா

வன்படல் செய்துறுக! வன்பணி கண்டிடுக! 
நன்னடல் நன்கறிக! நல்லுழைப்[பு] - என்றும்
உயர்வளிக்கும் சீர்வழி உற்றிடுக! நன்றே
பயிரளிக்கும் கல்வி பயின்று!

பாடல் - படல்
பாணி - பணி
நாடல் - நடல்
வாழி - வழி

நன்றே பயிர் விளையும் கல்வியைப் பயின்று பயிரைக் காக்கும் வன்மைப்படல் படைத்திடுக. வல்ல பணியை அறிந்திடுக. பயிர் நடலை நன்கறிக. என்றும், நல்லுழைப்பால் உயர்வளிக்கும் சீர்வழியை உற்றிடுவாய்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
16.02.2020

வெண்பா மேடை - 159

கால் முளைத்து நடக்கும் வெண்பா!

பண்டு கதையறிக! பட்டுக் கலையறிக!
தண்டு வினையறிக சந்தமுடன் - கண்டலுறும்
மண்ணறிக! நன்மன வன்னறிக! என்னுயிரே
பண்ணறிக நன்றே படித்து!

இவ்வெண்பாவில் காலுடைய சொற்கள் இல்லை. சில சொற்களில் கால்[ா] சேர்ந்தபின்னே  வெண்பா இலக்கணம் சரியாக வரவேண்டும். வேறு பொருள் தரவேண்டும். கால்சேர்வதால் 'கால் முளைத்து நடக்கும் வெண்பா' எனப் பெயர் கொடுத்தேன்.

பண்டு - நீதி
சந்தம் - அழகு
கண்டல் - தாழை
பண் - நிறை

என்னுயிரே நன்றே படித்து, நீதிநெறிக் கதையறிவாய். பட்டுடைக் கலையறிவாய். அழகடைய தண்டுணவின் செயலறிவாய்.  தாழை மணக்கும் மண்ணறிவாய். நன்மனத்தின் வன்மை யறிவாய்.  நிறையறிவாய்.

கால் முளைத்த வெண்பா

பாண்டு கதையறிக! பாட்டுக் கலையறிக!
தாண்டு வினையறிக! சாந்தமுடன் - காண்டலுறும்
மாண்ணறிக! நன்மான வான்னறிக! என்னுயிரே
பாண்ணறிக நன்றே படித்து!

பண்டு - பாண்டு
பட்டு - பாட்டு
தண்டு - தாண்டு
சந்தமுடன் - சாந்தமுடன்[அமைதி]
கண்டல்[தாழை] - காண்டல்[வணங்குதல்]
மனம் - மானம்
வன் - வான்
பண்[நிறை] - பாண்[இசைப்பாட்டு]

என்னுயிரே நன்றே படித்துப் பாண்ரங்கனின் கதையறிவாய். பாட்டுக் கலையறிவாய். தாண்டும் பயிற்சி அறிவாய். அமைதியுறத் தாழை மணக்கும் மண்ணறிவாய். நன்மானவான் அறிவாய்.  இசைப்பாட்டறிவாய்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
16.02.2020

1 commentaire:

  1. அமையான தொகுப்பு. கவிதை இலக்கணம் கற்பவர்களுக்கு நல்ல பாடம்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஐந்து வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று (16) ஐந்து வலைத்தளங்களில் வெளியான பதிவுகள் 16.02.2020 எனும் தலைப்பில் பரீட்சார்த்தமாக வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    RépondreSupprimer