mardi 15 janvier 2019

உழவனுக்கு முதல் வணக்கம்!


உழவனுக்கு முதல் வணக்கம்!
  
உழவுக்கு முதன்மாலை!
உவந்தாடும் இந்நாளை!
அழகுக்கே அழகென்று போற்று! - உழவன்
அடிதொட்டுப் புவிசுற்றும் சாற்று!
  
தோள்மீது படையேந்தி,
தொண்டாற்றும் நடையேந்தி,
தாள்மீது சேறேந்தி உழுவான்! - உழவன்
தாயென்று வயல்தன்னைத் தொழுவான்!
  
கதிர்பூத்து வருமுன்னே
காகங்கள் எழுமுன்னே
கதிர்காக்க வயல்நோக்கி விரைவான்! - உழவன்
கரங்கொண்டே உலகத்தை வரைவான்!
  
தமிழூட்டும் கண்டாக,
தாயாற்றும் தொண்டாக,
அமிழ்துாட்டும் மண்போற்றி வாழ்வான்! - உழவன்
அவனிக்குத் தலையாகி ஆள்வான்!
  
வன்காளை துணைகொண்டு,
வற்றாத அணைகொண்டு,
இன்காளை பண்பாடிச் செல்வான்! - உழவன்
இருள்வாழ்வைப் போராடி வெல்வான்!
  
காய்கின்ற ஊழ்..கண்டு,
கால்பங்கு கூழ்..உண்டு,
பாய்கின்ற நீர்கட்டி விதைப்பான்! - உழவன்
படர்கின்ற சீர்கட்டி படைப்பான்!
  
உயிர்சிந்தும் செந்நீரில்,
உடல்சிந்தும் முந்நீரில்,
பயிர்முந்தும் உழைப்பேந்தி நிற்பான்! - உழவன்
பண்பாட்டை விழிப்பேந்திக் கற்பான்!
  
நடுவானில் ஒளிவிஞ்சும்!
நரம்பேறி வலிவிஞ்சும்!
இடுமேரில் உழுகாளை போகும்! - உழவன்
இனங்கொண்ட நிரைகாத்து வாழும்!
  
காளைக்குப் பேரிட்டு,
கழனிக்குச் சீரிட்டு,
நாளைக்குப் புகழிட்டு நடப்பான்! - உழவன்
நற்றோளில் உலகத்தைச் சுமப்பான்!
  
ஓராழி சாய்தோடும்!
உழுமாடு பாய்ந்தோடும்!
வேராடிச் சூழ்துன்பம் ஓடும்! - உழவன்
வீட்டுக்குள் நற்காதல் பாடும்!
  
வயல்தேடிக் கால்போகும்!
மனைதேடித் தோள்போகும்!
இயல்தேடி இசைதேடிப் பேசும்! - உழவன்
இடந்தேடிக் குளிர்காற்று வீசும்!
  
என்னினிய ஏரோட்டி!
இவ்வுலகின் தேரோட்டி!
தன்னுடலில் ஓரடை கொண்டு - உழவன்
தரணிக்குச் புரிகின்றான் தொண்டு!
  
நீரில்லை! நிழலில்லை!
நீதிக்கும் இடமில்லை!
சீரில்லை! சிறப்பில்லை வீட்டில்! - உழவன்
செழித்தோங்க வழியில்லை நாட்டில்!
  
நீருக்கும் தடையிட்டு,
நெஞ்சுக்கும் அடையிட்டு,
பேருக்குச் செயலிட்ட போக்கு! - தமிழா!
பிணிநீங்கப் போரிட்டுத் தாக்கு!
  
புலிபோல நின்றோமே!
புயல்போலச் சென்றோமே!
எலிபோல இன்றுன்னை எண்ணல் - தமிழா!
இருள்கொண்டு தாழ்கின்ற இன்னல்!
  
மண்காய்து போனாலும்,
கண்காய்ந்து போனாலும்,
புண்பாய்ந்து செய்கின்ற ஆட்சி! - சுடும்
புகைபாய்ந்து சூழ்கின்ற காட்சி!
  
எங்கெங்கும் கையூட்டு!
எந்நாளும் பொய்யூட்டு!
இங்கங்கும் அவர்போடும் வேடம்! - தீயர்
இழிவோட நீயேற்று சூடம்!
  
நரியாளும் காடாகி,
நரகாளும் நாடாகி,
கரியாளும் அயலாட்சி ஓட்டு! - தமிழா!
கவியாளும் தமிழாட்சி நாட்டு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
15.01.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire