jeudi 10 janvier 2019

சிலேடை வெண்பா


சிலேடை வெண்பா
  
கலைமகளும் காதலியும்
  
யாழிசைப்பாள்! இன்றமிழ் யாப்பளிப்பாள்! வாயுறையும்
கூழளிப்பாள்! என்னுள் குடியிருப்பாள்! - ஏழிசையும்,
மின்மரையும், அன்னமும், வீணையும் கொண்டிடுவாள்!
இன்மறை ஈந்திடுவாள்! நுாலிடையில் - நின்றிடுவாள்!
பேரழகு வாணியும் சீரழகு காதலியும்
ஓரழகு என்பேன் உவந்து!
  
வாயுறை - திருக்குறள், வாய் உறையும் இனிப்பு.
மரை - தாமரை, மான்.
நுாலிடை - நுாலின் இடையில், மெல்லிய இடை.
இன்மறை - இனிய மறைமொழி, இன்பத்தை மறைத்து.
  
கலைமகள்
  
யாழினை உடையவள். தமிழ் யாப்பினை அளித்தவள். வள்ளுவரின் வாயுறை நுாலமுதை ஊட்டியவள். நெஞ்சுள் வாழ்பவள். ஏழிசையைக் கொடுத்தவள். மின்னும் தாமரையில் அமர்ந்தவள். அன்னத்தை உடையவள். மெல்லிசை வீணையும் பெற்றவள். வேதத்தை உரைத்தவள். எழுதும் நுாலில் நடுநிலையாய் நின்று காப்பவள்.
  
காதலி
  
யாழிசைத்து மகிழ்வளிப்பாள். கவிபாடிக் களிப்பாள். வாயினிக்கக் கன்னல் கூழளிப்பாள். இதயத்துள் இருந்திடுவாள். இசைக்கலையில் வல்லவள். மான்போல் விழியுடையாள். அன்னம்போல் நடையுடையாள். வீணைபோல் வடிவுடையாள். மறைவாக இன்பக் கதைகளை மொழிந்திடுவாள். நுாலிடையாள்.
  
எனவே, பேரழகுடைய கலைமகளும், சீரழகுடைய காதலியும் ஒன்றெனச் சொல்வேன் உள்ளம் உவந்து.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.01.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire