mercredi 25 août 2021

பாவலர் சுப. முருகானந்தம் வாழியவே!

 


பாவலர் சுப. முருகானந்தம் வாழியவே!

 

தந்தை மொழியைத் தலையேந்தித்

   தாயின் வழியை உளமேந்திக்

கந்தை யுலகைச் சரிசெய்யும்

   கழகத் தொண்டர்! தமிழ்மறவர்!

சிந்தை குள்ளே செந்தமிழின்

   சீரை யணிந்து வாழ்கின்றார்!

முந்தை மரபைக் காக்கின்ற

   முருகா னந்தர் வாழியவே!

 

கறுப்புச் சட்டை அணிந்தாலும்

   கருணை யுள்ளம் பனிவெண்மை!

நெருப்புப் பார்வை கொண்டாலும்

   நெஞ்சுக் குள்ளே குளிரூற்று!

இரும்புக் கொள்கை உற்றாலும்

   கரும்புக் கவிதை தரும்திருவாய்!

பருந்து போன்றே இலக்கெய்தும்

   முருகா னந்தர் வாழியவே!

 

வேகம் இருக்கும்! போர்க்களத்தில்

   வெற்றி இருக்கும்! கவிபாடும்

தாகம் இருக்கும்! வழிநடத்தும்

   தலைமை இருக்கும்! உண்மையொளிர்
ஆகம் இருக்கும்! அமுதாக

   அன்பு சுரக்கும்! தமிழ்மீது

மோகம் இருக்கும்! பேறுடைய

   முருகா னந்தர் வாழியவே!

 

புதுமை மின்னும் சீருடையார்!

   புரட்சி மின்னும் பேருடையார்!

பொதுமை மின்னும் காப்புடையார்!

   புலமை மின்னும் யாப்புடையார்!

மது..மை மின்னும் அடியுடையார்!

   மாட்சி மின்னும் குடியுடையார்!

முதுமை மின்னும் பெரியாரின்

   முருகா னந்தர் வாழியவே!

 

பயிற்சி யரங்கில் என்மனத்துள்

   படர்ந்து நின்றார்! எந்நொடியும்

அயர்ச்சி யரங்கில் சேராத

   ஆற்றல் கொண்டார்! தாவுகின்ற
பெயர்ச்சி யரங்கில் இணையாமல்

   பெருமை கண்டார்! இனம்வாழ

முயற்சி யரங்கில் முன்னிற்கும்
   முருகா னந்தர் வாழியவே!

 

சொத்தாய்ப் பாக்கள் ஐந்நுாறு

   சூட்டி மகிழ்ந்தார்! பூத்தாடும்

கொத்தாய் மணக்க நன்னெறியைக்

   கூட்டிப் புகழ்ந்தார்! வயல்செழிக்கச்

சத்தாய்க் கிடைத்த உரத்துயர்வைத்

   தாங்கித் திகழ்ந்தார்! எந்நாளும்

முத்தாய்ப் பாடும் பாவலராய்

   முருகா னந்தர் வாழியவே!

 

25.08.2021

lundi 23 août 2021

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

அருமை மிக்க பத்மினியார்

   அழகாய்ப் பிறந்த நன்னாளைப்

பெருமை மிக்க தமிழ்கொண்டு

   பேசிப் பாடி மகிழ்ந்திடுவோம்!

ஒருமை மிக்க கூர்மதியும்,

   உயர்வை நல்கும் கவிநதியும்,

கருமை மிக்க திருக்கண்ணன்

   கால மெல்லாம் அருளுகவே!

 

நெற்றி கமழும் திருமண்ணும்,

   நெஞ்சம் கமழும் நினைவுகளும்,

முற்றிக் கமழும் நற்பணியும்,

   முகமே கமழும் புன்னகையும்,

பற்றிக் கமழும் பண்புகளும்,

   பாக்கள் கமழும் தமிழிசையும்,

வெற்றி கமழும் பெரும்புகழும்

   விளைந்து வாழ்க பத்மினியார்!

 

சோலைப் பூக்கள் மனம்வீசும்!

   சுவைசேர் தேனைக் குரல்பீசும்!

காலைக் கதிர்கள் புகழ்பாடும்!

   கானக் குயில்கள் உறவாடும்!

மாலை மதியம் கவிசூடும்!

   மக்கள் செல்வம் மகிழ்ந்தாடும்!

பாலை நிகர்த்த பத்மினியார்

   பல்லாண்[டு] உலகில் வாழியவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

23.08.2021

lundi 16 août 2021

வெண்பா மேடை - 210



வெண்பா மேடை - 210

 

 ஒரு வெண்பா பொருள் ஐந்து

1.

பொங்கி வழிந்தோடும்! பூத்து மலர்ந்தாடும்!

தங்கித்  தழைத்துத் தகைசூடும்! - சிங்கியே!

முன்னைத் தமிழர் முழங்கிய வன்வீரம்!

அன்னை அளித்த அருள்!

 

2.

பொங்கி வழிந்தோடும்! பூத்து மலர்ந்தாடும்!

தங்கித்  தழைத்துத் தகைசூடும்! - சிங்கியே!

உன்னையே யெண்ணி உருப்பெறும் நற்காதல்!

என்னையே காப்பாய் இணைந்து!

 

3.

பொங்கி வழிந்தோடும்! பூத்து மலர்ந்தாடும்!

தங்கித்  தழைத்துத் தகைசூடும்! - சிங்கியே!

வண்ணத் தமிழணங்கு வார்க்கும் கவிதைகள்!

உண்ண ஒளிரும் உயிர்!

 

4.

பொங்கி வழிந்தோடும்! பூத்து மலர்ந்தாடும்!

தங்கித்  தழைத்துத் தகைசூடும்! - சிங்கியே!

செங்களம் ஆடிச் செழித்திட்ட நற்புகழே!

நங்குளம் காக்கும் நவில்

 

5.

பொங்கி வழிந்தோடும்! பூத்து மலர்ந்தாடும்!

தங்கித்  தழைத்துத் தகைசூடும்! - சிங்கியே!

பிள்ளை மொழியமுதம்! பேற்றின் பெருவிரிப்பு!

கொள்ளை அழகின் குவிப்பு!

 

ஐந்து வெண்பாக்களிலும் முதல் இரண்டடிகள் ஒன்றாக வரவேண்டும். பின் இரண்டடிகள் மாறிப் பொருள் வேறாக அமையவேண்டும். மேலுள்ள வெண்பாக்கள், வீரம், காதல், கவிதை, புகழ், மழலைமொழி எனப் பொருள்பெற்று வந்துள்ளன.

'ஒரு வெண்பா ஐந்து பொருள்' வரும் வண்ணம்  வெண்பா எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

16.08.2021

jeudi 12 août 2021

வெண்பா மேடை - 209


 

வெண்பா மேடை  - 209

 

ஒரு வெண்பா ஐந்து தனிச்சொல்

 

1.

வாடிமனம் நிற்காமல் வண்ண மலர்க்காவில்

ஓடிமனம் சுற்றும்! உயர்தமிழே! - பாடிமனம்

கண்டு களிக்கக் கமழும் கவியமுதை

மொண்டு குடிக்க முழங்கு!

 

2.

வாடிமனம் நிற்காமல் வண்ண மலர்க்காவில்

ஓடிமனம் சுற்றும்! உயர்தமிழே! - ஆடிமனம்

கண்டு களிக்கக் கமழும் கவியமுதை

மொண்டு குடிக்க முழங்கு!

 

3.

வாடிமனம் நிற்காமல் வண்ண மலர்க்காவில்

ஓடிமனம் சுற்றும்! உயர்தமிழே! - கூடிமனம்

கண்டு களிக்கக் கமழும் கவியமுதை

மொண்டு குடிக்க முழங்கு!

 

4.

வாடிமனம் நிற்காமல் வண்ண மலர்க்காவில்

ஓடிமனம் சுற்றும்! உயர்தமிழே! - கோடிமனம்

கண்டு களிக்கக் கமழும் கவியமுதை

மொண்டு குடிக்க முழங்கு!

 

5.

வாடிமனம் நிற்காமல் வண்ண மலர்க்காவில்

ஓடிமனம் சுற்றும்! உயர்தமிழே! - நாடிமனம்

கண்டு களிக்கக் கமழும் கவியமுதை

மொண்டு குடிக்க முழங்கு!

 

ஒரு வெண்பாவில் தனிச்சொல் மட்டும் மாறி ஐந்து வெண்பாக்கள் அமையவேண்டும். மேலுள்ள வெண்பாக்களில் பாடிமனம், ஆடிமனம், கூடிமனம், கோடிமனம், நாடிமனம் எனத் தனிச்சொற்கள் வந்துள்ளன.


பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

12.08.2021

mercredi 4 août 2021

செருப்பு

 


செருப்பு

 

1.

இணையாய் வாழும் உயர்திணையில்

   இறந்தால் ஒருவர் வாழ்ந்திடுவார்!

துணையாய் வாழும் மிதியடிகள்
   துணையைப் பிரிந்தால் வாழ்ந்திடுமோ?

பிணையாய் வாழும் பொழுதினிலும்

   பிணியாய் வாழும் பொழுதினிலும்

அணையாய் இருந்து காத்திடுவாய்!

   அடியாய் இருந்து தாங்கிடுவாய்!

 

2.

உழைத்து நாளும் உருக்குன்றி

   உயிரை மாய்க்கும் உழவர்போல்

இழைத்து நாளும் உருக்குன்றி

   இறக்கும் நிலையை அடைகின்றாய்!

அழைத்துச் சென்ற இடங்களிலே

   அரணாய் வாசல் இருப்பாயே!

தழைத்து வளர்ந்த முட்பாதை

   தாக்கா வண்ணம் காப்பாயே!

 

3.

மேடை காணும் செருப்புண்டு!

   மேனி காணும் செருப்புண்டு!

ஆடைக் கேற்ற செருப்புண்டு!

   ஆகா.. தங்கச் செருப்புண்டு!

கோடைக் கேற்ற செருப்புண்டு!

   கோல வைரச் செருப்புண்டு!

தாடை ஒட்டித் தவம்புரிவோர்

   தரிக்க மரத்தில் செருப்புண்டு! - 3

 

4.

வாயே இன்றிக் கடிக்கின்றாய்!

   வன்மை யாக அடிக்கின்றாய்!

காயே என்று காய்ந்தாலும்

   கைகள் இன்றி உழைக்கின்றாய்!

நாயே என்று விட்டாலும்

   நன்றி யோடே நடக்கின்றாய்!

தாயே என்றுன் அடிதொழுது

   தலைமேல் தரிக்கும் நிலைகண்டாய்!

 

5.

ஓடி ஓடி உழைத்ததனால்

   உடலே குன்றிக் கிடக்கின்றாய்!

கூடிக் கூடி உழைக்கின்ற

   கொள்கை கொண்டு வாழ்கின்றாய்!

ஆடி ஆடி நடந்தாலும்

   அழகை ஏந்தி இருக்கின்றாய்!

தாடி யுற்ற முனிவர்களைத்

   தாங்கி உயர்வை அடைகின்றாய்!

 

6.

செருப்பால் அடிப்பேன் எனுமொழியைச்

   செப்பா துள்ள நபர்யாரோ?

விருப்பால் அழகி சீர்நடையில்,

   வீரர் கொண்ட நேர்நடையில்,

இரும்பால் தட்டும் நல்லொலியை

   இசையாய் இனிக்க அளிக்கின்றாய்!

அரும்பால் மணக்கும் காதலியின்

   அடியைத் தழுவிக் களிக்கின்றாய்!

 

7.

அடியைத் தழுவி வாழ்கின்ற

   அற்பச் செயலை மனிதவினம்

குடியைக் காக்கும் கொலைவெறியில்

   கூடிக் கற்ற[து] உன்னிடமோ?

முடியை இழந்த திருராமன்

   முன்னே பணிந்த அரும்பரதன்

விடிவை வேண்டித் திருவடியை

   மேவச் செய்தான் அரியணையில்!

 

8.

ஓடிப் பிரியும் உலகத்தில்

   உறவை வெறுக்கும் காலத்தில்

கூடி வாழும் செருப்பே..நீ

   கொண்டாய் கொள்கைக் கூட்டுறவே!

மாடி வீட்டு மிதியடியும்

   மட்டை வீட்டு மிதியடியும்

தேடிச் செல்லும் நிகழ்வுகளில்

   திரளாய்க் ஒன்றி இருப்பனவாம்!

 

9.     

நாயும் செருப்பும் ஒன்றாக

   நம்மைக் காக்கும் நன்றாக!

மேயும் எங்கும்! கழிவுகளை

   மேவித் திரியும்! இல்லத்தின்

வாயில் காக்கும்! கட்டேற்கும்!

   வசமாய்க் கடிக்கும்! எந்நாளும்

கோயில் வெளியே காப்பேற்கும்!

   கூட வந்து நலஞ்சேர்க்கும்!

 

10.

ஒற்றைச் செருப்புப் படமுண்டாம்!

   உலகை ஆண்ட கதையுண்டாம்!

அற்றை நாளில் முடிவேந்தர்

   அழகாய் அணிந்த கலையுண்டாம்!

பற்றை விட்ட முனிவர்களும்

   பற்றும் பாதச் செருப்புண்டாம்

இற்றை நாளில் மிதியடிகள்

   இல்லா திருக்கும் நபர்உண்டாம்!

 

11.

தலைவன் தலைவி கால்களிலே

   தரித்த செருப்பை வணங்குவதும்,

அலையும் வல்பேய், காட்டேரி,

   அடிக்கா வண்ணம் கட்டுவதும்,

குலையும் மனத்தால், செருப்பணியக்

   கூடித் தடையை இட்டதுவும்,

தலையுள் ஒன்றும் இல்லாதார்

   தந்த மடமை உணருகவே!

 

12.

அன்னை கொண்ட சுமையுண்டாம்!

   ஆதி கொண்ட சுமையுண்டாம்!

முன்னை கொண்ட சுமையுண்டாம்!

   மோகம் கொண்ட சுமையுண்டாம்!

மின்னைக் கொண்ட மழைமேகம்

   மேவிக் கொண்ட சுமையுண்டாம்!

என்னைச் சுமக்க உன்னைப்போல்

   இங்கே ஒருவர் இனியுண்டோ?

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

04.08.2021