வெண்பா மேடை - 210
ஒரு வெண்பா பொருள் ஐந்து
1.
பொங்கி வழிந்தோடும்! பூத்து மலர்ந்தாடும்!
தங்கித் தழைத்துத் தகைசூடும்! - சிங்கியே!
முன்னைத் தமிழர் முழங்கிய வன்வீரம்!
அன்னை அளித்த அருள்!
2.
பொங்கி வழிந்தோடும்! பூத்து மலர்ந்தாடும்!
தங்கித் தழைத்துத் தகைசூடும்! - சிங்கியே!
உன்னையே யெண்ணி உருப்பெறும் நற்காதல்!
என்னையே காப்பாய் இணைந்து!
3.
பொங்கி வழிந்தோடும்! பூத்து மலர்ந்தாடும்!
தங்கித் தழைத்துத் தகைசூடும்! - சிங்கியே!
வண்ணத் தமிழணங்கு வார்க்கும் கவிதைகள்!
உண்ண ஒளிரும் உயிர்!
4.
பொங்கி வழிந்தோடும்! பூத்து மலர்ந்தாடும்!
தங்கித் தழைத்துத் தகைசூடும்! - சிங்கியே!
செங்களம் ஆடிச் செழித்திட்ட நற்புகழே!
நங்குளம் காக்கும் நவில்
5.
பொங்கி வழிந்தோடும்! பூத்து மலர்ந்தாடும்!
தங்கித் தழைத்துத் தகைசூடும்! - சிங்கியே!
பிள்ளை மொழியமுதம்! பேற்றின் பெருவிரிப்பு!
கொள்ளை அழகின் குவிப்பு!
ஐந்து வெண்பாக்களிலும் முதல் இரண்டடிகள் ஒன்றாக வரவேண்டும்.
பின் இரண்டடிகள் மாறிப் பொருள் வேறாக அமையவேண்டும். மேலுள்ள வெண்பாக்கள், வீரம், காதல்,
கவிதை, புகழ், மழலைமொழி எனப் பொருள்பெற்று வந்துள்ளன.
'ஒரு வெண்பா ஐந்து பொருள்' வரும் வண்ணம் வெண்பா எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
16.08.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire