செருப்பு
1.
இணையாய் வாழும் உயர்திணையில்
இறந்தால் ஒருவர் வாழ்ந்திடுவார்!
துணையாய்
வாழும் மிதியடிகள்
துணையைப் பிரிந்தால் வாழ்ந்திடுமோ?
பிணையாய் வாழும் பொழுதினிலும்
பிணியாய் வாழும் பொழுதினிலும்
அணையாய் இருந்து காத்திடுவாய்!
அடியாய் இருந்து தாங்கிடுவாய்!
2.
உழைத்து நாளும் உருக்குன்றி
உயிரை மாய்க்கும் உழவர்போல்
இழைத்து நாளும் உருக்குன்றி
இறக்கும் நிலையை அடைகின்றாய்!
அழைத்துச் சென்ற இடங்களிலே
அரணாய் வாசல் இருப்பாயே!
தழைத்து வளர்ந்த முட்பாதை
தாக்கா வண்ணம் காப்பாயே!
3.
மேடை காணும் செருப்புண்டு!
மேனி காணும் செருப்புண்டு!
ஆடைக் கேற்ற செருப்புண்டு!
ஆகா.. தங்கச் செருப்புண்டு!
கோடைக் கேற்ற செருப்புண்டு!
கோல வைரச் செருப்புண்டு!
தாடை ஒட்டித் தவம்புரிவோர்
தரிக்க மரத்தில் செருப்புண்டு! - 3
4.
வாயே இன்றிக் கடிக்கின்றாய்!
வன்மை யாக அடிக்கின்றாய்!
காயே என்று காய்ந்தாலும்
கைகள் இன்றி உழைக்கின்றாய்!
நாயே என்று விட்டாலும்
நன்றி யோடே நடக்கின்றாய்!
தாயே என்றுன் அடிதொழுது
தலைமேல் தரிக்கும் நிலைகண்டாய்!
5.
ஓடி ஓடி உழைத்ததனால்
உடலே குன்றிக் கிடக்கின்றாய்!
கூடிக் கூடி உழைக்கின்ற
கொள்கை கொண்டு வாழ்கின்றாய்!
ஆடி ஆடி நடந்தாலும்
அழகை ஏந்தி இருக்கின்றாய்!
தாடி யுற்ற முனிவர்களைத்
தாங்கி உயர்வை அடைகின்றாய்!
6.
செருப்பால் அடிப்பேன் எனுமொழியைச்
செப்பா துள்ள நபர்யாரோ?
விருப்பால் அழகி சீர்நடையில்,
வீரர் கொண்ட நேர்நடையில்,
இரும்பால் தட்டும் நல்லொலியை
இசையாய் இனிக்க அளிக்கின்றாய்!
அரும்பால் மணக்கும் காதலியின்
அடியைத் தழுவிக் களிக்கின்றாய்!
7.
அடியைத் தழுவி வாழ்கின்ற
அற்பச் செயலை மனிதவினம்
குடியைக் காக்கும் கொலைவெறியில்
கூடிக் கற்ற[து] உன்னிடமோ?
முடியை இழந்த திருராமன்
முன்னே பணிந்த அரும்பரதன்
விடிவை வேண்டித் திருவடியை
மேவச் செய்தான் அரியணையில்!
8.
ஓடிப் பிரியும் உலகத்தில்
உறவை வெறுக்கும் காலத்தில்
கூடி வாழும் செருப்பே..நீ
கொண்டாய் கொள்கைக் கூட்டுறவே!
மாடி வீட்டு மிதியடியும்
மட்டை வீட்டு மிதியடியும்
தேடிச் செல்லும் நிகழ்வுகளில்
திரளாய்க் ஒன்றி இருப்பனவாம்!
9.
நாயும் செருப்பும் ஒன்றாக
நம்மைக் காக்கும் நன்றாக!
மேயும் எங்கும்! கழிவுகளை
மேவித் திரியும்! இல்லத்தின்
வாயில் காக்கும்! கட்டேற்கும்!
வசமாய்க் கடிக்கும்! எந்நாளும்
கோயில் வெளியே காப்பேற்கும்!
கூட வந்து நலஞ்சேர்க்கும்!
10.
ஒற்றைச் செருப்புப் படமுண்டாம்!
உலகை ஆண்ட கதையுண்டாம்!
அற்றை நாளில் முடிவேந்தர்
அழகாய் அணிந்த கலையுண்டாம்!
பற்றை விட்ட முனிவர்களும்
பற்றும் பாதச் செருப்புண்டாம்
இற்றை நாளில் மிதியடிகள்
இல்லா திருக்கும் நபர்உண்டாம்!
11.
தலைவன் தலைவி கால்களிலே
தரித்த செருப்பை வணங்குவதும்,
அலையும் வல்பேய், காட்டேரி,
அடிக்கா வண்ணம் கட்டுவதும்,
குலையும் மனத்தால், செருப்பணியக்
கூடித் தடையை இட்டதுவும்,
தலையுள் ஒன்றும் இல்லாதார்
தந்த மடமை உணருகவே!
12.
அன்னை கொண்ட சுமையுண்டாம்!
ஆதி கொண்ட சுமையுண்டாம்!
முன்னை கொண்ட சுமையுண்டாம்!
மோகம் கொண்ட சுமையுண்டாம்!
மின்னைக் கொண்ட மழைமேகம்
மேவிக் கொண்ட சுமையுண்டாம்!
என்னைச் சுமக்க உன்னைப்போல்
இங்கே ஒருவர் இனியுண்டோ?
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
04.08.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire