lundi 25 décembre 2023

கலித்துறை - 3

 


கலித்துறை மேடை - 3

 

கலிநிலைத்துறை

குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + காய்

 

கலித்துறை மேடை இரண்டில் ஈற்றுச்சீர் மாவாகும். இதில் காயாகும்.

 

இரதி யின்னணம் வருந்திடத் தொன்மைபோல் எங்கோமான்

விரத மோனமோ டிருந்தலு முன்னரே விறற்காமன்

கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார்

சுருதி நன்றுணர் திசைமுகன் முதலிய சுரரெல்லாம்

 

[கந்தபுராணம்]

 

இறையின் பொன்மகன் இந்நிலம் பிறந்துள இன்னாளை

நிறையின் நெஞ்சுடன் நித்தில வன்புடன் நினைந்துருகி

மறையின் நீதியை மகிழ்வுடன் பாடியே மாண்புகளைப்

பறையின் மண்ணலம் படர்ந்திடும்! பன்னலம் பழுத்திடுமே!

 

[பாட்டரசர்]

 

அறிமறியாகாமல், எழுத்து வரையறையப்படாமல் வருவது கலிநிலைத்துறையாம். பலவகையாகக் கலிநிலைத்துறை அமையும். ஒவ்வொன்றிலும் இன்ன இடத்தில் இன்ன சீர் வரவேண்டும்  என்ற விதிகள் உண்டு.

 

ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.5 ஆம் சீர்களில் மோனை யமையும்.

 

கலித்துறைகளில் 1, 5 ஆம் சீர்களில் மோனை யமைவது பெரும்பான்மையாகும். இவற்றோடு 3 ஆம் சீரிலும் மோனை யமையின் ஓசைநயம் சிறக்கும். 5 ஆம் சீரில் மோனை யமையாத போது 3 அல்லது 4 ஆம் சீர்களில் மோனை யிருக்கும்.

 

குறிலீற்றுமா என்றால் மாச்சீரின் ஈற்றெழுத்துக் குறிலாகவோ அல்லது குறிலொற்றாகவே வரவேண்டும். [அன்பு, அன்பர்] நெடில் ஈற்று மாச்சீர் வரக்கூடாது [ அன்பே, அன்பார்]

 

அடிமடி என்றால், யாதோரடியை எடுத்து முதல் நடு இறுதியாக உச்சரிப்பினும் பொருளும் ஓசையும் மாறாமல் அமைவது. அறிமறியாகாமல் இப்பாடல் அமையும்.

 

எழுத்து வரையறையப்படாமல் என்றால், நான்கு அடிகளிலும் எழுத்து எண்ணிக்கை வேறுபட்டு வருவது.

 

கூவிளம் வருமிடங்களில் தேமாங்காயும், கருவிளம் வருமிடங்களில் புளிமாங்காயும் அருகி வரும்.

 

மேற்கண்ட கலிநிலைத்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

25.12.2023

samedi 23 décembre 2023

கண்ணாடிக் காரி

 


கண்ணாடிக் காரி

 

1.

கண்ணாடி போட்டொளிரும் கட்டழகு கன்னி!

         கவிமனத்தைப் பின்னுகிறாள் கணக்காக எண்ணி!

தண்ணாழி ஆழத்தில் கண்டெடுத்த அமுதோ?

         தளிர்மேனி மதுவூறி மணக்கின்ற குமுதோ?

பெண்ணாகி வந்தவுருப் படைத்தவனின் விந்தை!

         பிஞ்சிவிரல் எனைத்தழுவத் தினமேங்குஞ் சிந்தை!

புண்ணாகி வாடுமனம் அவளழகைக் கண்டு!

         பொன்முகத்தைப் பூவென்று நம்புதடா வண்டு!

 

2.

கார்நிலையில் பூத்தகுழல் கனவுகளைச் சூட்டும்!

         காலழகும் கையழகும் கவியமுதை யூட்டும்!

நீர்நிலையில் குடமேந்தி வருகின்ற காட்சி!

         நெஞ்சத்துள் எந்நொடியும் காமனவன் ஆட்சி!

தேர்நிலையில் அலங்காரம் திருமகளின் தோற்றம்!

         தேவியவள் சிரிப்பழகே என்..துயரை மாற்றும்!

ஏர்வயலில் உழுவதுபோல் காதலினை யுழுதாள்!

         எப்பொழுதும் எனைவேண்டி ஈசனையே தொழுதாள்!

 

3.

பொன்மாலை அணிமணிகள் அவள்மார்ப்பைத் தழுவும்!

         புலவனுளம் பெச்செரிப்பில் தினம்பொங்கி யழுவும்!

மின்னாலைத் தறியாக எண்ணங்கள் ஓடும்!

         மின்னலிடை செந்தமிழின் வண்ணங்கள் சூடும்!

இன்மாலை வெண்ணிலவு மேகத்துள் மறையும்!

         என்னவளின் முன்னாலே அதனழகு குறையும்!

நன்னாளை எதிர்பார்த்துக் காதலுயிர் ஏங்கும்!

         நங்கைதரும் தரிசனத்தால் எவ்வாறு துாங்கும்!

 

4.

வளையோசை காதுக்குள் சங்கீத மீட்டும்!

         மணியோசை தந்ததன தாளங்கள் சூட்டும்!

கலையோசை யத்தனையும் கையசைவு காட்டும்!

         கவியோசைச் சந்தங்கள் காலசைவு தீட்டும்!

அலையோசை யழகாகக் கற்பனைகள் மூட்டும்!   

         அகத்தாசை தான்பெருகி ஆரமுதை யூட்டும்!  

தலையோசை கொலுசோசை ஆகியெனை வாட்டும்!

         தனியோசை முத்தங்கள் தாகத்தைக் கூட்டும்!

 

5.

பொட்டழகு தந்திடுமே புதுமைபல கோடி!

         புடவையெழில் தந்திடுமே தேன்சுளையை வாரி!

மொட்டழகு தந்திடுமே மதுக்குடத்தைப் பொங்கி!

         மூக்கழகு தந்திடுமே புதுக்கருத்தைச் சுங்கி!

கட்டழகு தந்திடுமே நினைவுகளை மின்னிக்

         கண்ணழகு தந்திடுமே கனவுகளைப் பின்னி!

பட்டழகு தந்திடுமே இளையவளின் மேனி

         பகலிரவாய்த் தந்திடுமே இன்பத்தைப் பேணி!

 

6.

காதோரம் அணிந்துள்ள கல்லொளிரும் கம்மல்!

         கண்டதனைப் பாடுவதில் நானன்றோ செம்மல்!

மாதோரம் சேருகின்ற பொருள்வாசம் வீசும்!

         மார்போரம் சேருகின்ற மணி..கவிதை பேசும்!

ஆதாரம் ஆவதுபோல் பதிலொன்று சொல்லும்!

         ஆகாரம் போலென்னை யுண்டுசுவை கொள்ளும்!

சேதாரம் ஆகாமல் வேண்டுகிறேன் காப்பு!

         தேவியவள் பேரழகு செழித்தமிழாம் தோப்பு!

 

7.

ஒட்டாமல் இருக்கின்ற ஒட்டியாணம் ஏனோ?

         ஓரவிழிப் பார்வையிலே உள்ளதொரு மானோ?

கொட்டாமல் பூத்தாடும் வண்ணமலர்ச் சோலை!

         கோதையுடல் தனைத்தழுவி மணக்குதடி சேலை!

கட்டாமல் சுற்றிவரும் என்னுடைய நெஞ்சம்!

         கன்னிமுகம் கண்டவுடன் கம்மென்று கொஞ்சும்!

தட்டாமல் வந்திடுமோ கைகளிடும் ஓசை!

         தழுவாமல் அடங்கிடுமோ காதலிடும் ஆசை!

 

8.

மெட்டெடுத்துப் பாடுகிறேன் மெட்டியொலி சந்தம்!

         மேனகையும் ஊர்வசியும் அவளுடைய சொந்தம்?

பட்டெடுத்து வருகின்றேன் அன்பலைகள் தொடரும்!

         பார்வையெழில் பதிவாகிப் பலகவிகள் படரும்!

தட்டெடுத்து நிற்கின்றேன் உணவுதர வேண்டும்!

         தங்கமெனக் கொண்டவுடல் இன்பத்தைத் துாண்டும்!

எட்டெழுத்து மந்திரமாய் மங்கைபெயர் ஆகும்!

         இரவெல்லாம் விழிப்புற்றுக் காதலுயிர் வேகும்!

 

9.

மூக்குத்தி நல்லழகில் மோகநிலை கூடும்!

         முன்னழகும் பின்னழகும் முத்தமிழைச் சூடும்!

நாக்கத்தி மொழிகொண்டு வெட்டுகிறாள் என்னை!

         நான்..போதை ஏறிடவே காட்டுகிறாள் கண்ணை!

பூச்சட்டி ஏந்திவரும் காட்சியினைக் கண்டு

         புல்லரித்துப் புடைக்குமுடல் புதுமைநிலை கொண்டு!

தீச்சட்டி முன்னாலே தருகின்றேன் வாக்கு!

         சீா்கட்டி மணந்திடுவேன் சேர்துயரைப் போக்கு!

 

10.

தோற்றழுவும் உடைகண்டு சுதிமீட்டும் உள்ளம்!

         தோட்டழுவும் பைகண்டு மதிகூட்டும் வெல்லம்!

காற்றழுவும் அடிகண்டு மெய்ம்மயங்கி நிற்கும்!

         கார்தழுவும் முடிகண்டு கலைபலவுங் கற்கும்!

சேற்றழுவும் விழிகண்டு சிக்கிமனம் வாடும்!

         சீர்தழுவும் மொழிகண்டு சொக்கிமனம் ஆடும்!

மேற்றழுவும் பொருள்கண்டு சாற்றியுள்ள பாடல்

         வேற்றழுவும் தமிழ்மறவன் வாழுகின்ற கூடல்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச்சிறகம்.

23.12.2023

samedi 2 décembre 2023

கலித்துறை - 1


 கலித்துறை

 

ஐஞ்சீர் அடிகள் நான்கு அளவு ஒத்து ஓர் எதுகையில் வருவது கலித்துறையாம். அது கட்டளைக் கலித்துறை என்றும் கலிநிலைத் துறை என்றும் இருவகையாம். [கலிநிலைத்துறை, காப்பியக் கலித்துறை என்றும் அழைக்கப்படும்.]

 1.

கட்டளைக் கலித்துறை நேரசையில் தொடங்கினால் ஓரடிக்கு எழுத்துப் பதினாறும், நிரையசையில் தொடங்கினால் ஓரடிக்கு எழுத்துப் பதினேழும் பெற்றுவரும்.

 2.

அறிமறியாகாமல், எழுத்து வரையறையப்படாமல் வருவது கலிநிலைத்துறையாம்.

பலவகையாகக் கலிநிலைத்துறை அமையும். ஒவ்வொன்றிலும் இன்ன இடத்தில் இன்ன சீர் வரவேண்டும்  என்ற விதிமுறைகள் உண்டு.

 கட்டளைக் கலித்துறை, கோவைக் கலித்துறை யெனவும், திலதக் கலித்துறை யெனவும் இருவகைத்து என்பர்.

3.

கோவைக் கலித்துறை, ஈற்றடி மூன்றாம் சீர்ச்சொல்  பக்குவிட்டு முதற்சீரோடு ஒன்றி ஒழுகிய ஓசையுடன் வரும். இரண்டாம் நான்காம் சீர்களும் அவ்வாறு ஓசை பிரிந்தொழுகின் மிக்க சிறப்புடையதாம்.

4.

ஈற்றடி ஐந்து சீரும் வகையுளி இன்றி நிகழ்வது திலதக் கலித்துறையாம்

 5.

அடிமறியாய் ஐஞ்சீர் நான்கடியாய் வருவது அறிமறி மண்டிலக் கலித்துறையாம். இப்பாடலில் யாதோர் அடியை எடுத்து முதல் நடு கடையாக உச்சரிப்பினும் ஓசையும் பொருளும் மாறுபடாது அமையும்.

இலக்கணக் குறிப்பு

நெடிலடி நான்காய் நெறிப்பட நிகழ்வது

கலித்துறை

[இலக்கண விளக்கம் - 739]

ஐஞ்சீர் முடிவின் அடித்தொகை நான்மையொடு

எஞ்சா மொழிந்தன எல்லாம் கலித்துறை

[காக்கை]

ஐஞ்சீர் நான்கடி கலித்துறை யாகும்

[அவிநயம்]

கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது

[யாப்பருங்கலக் காரிகை - 34]

நெடிலென் றுரைத்த

பேரடிநான்கு கலித்துறை யாமென்பர்

[வீர சோழியம்- 123]

கலித்துறை நெடிலடி நான்கொத்து அவற்றுள்

இடைநேர் வெண்சீர் இயற்சீர் முதல்நான்கு

இடைநிரை வெண்சீர் இறுதிச்சீர் மோனையாய்க்

கடையே கொண்டுஇறும் கட்டளைக் கலித்துறை

[தொன்னுால் - 241]

ஐஞ்சீ ரடிநான் காய்அள வொத்து

வருவது கலித்துறை யாம்

[முத்து வீரியம் - 50]

 

----------------------------------------------------------------------------------------------------------

 

கலித்துறை மேடை - 1

 

கட்டளைக் கலித்துறை

 

ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.5 ஆம் சீர்களில் மோனை.

 

முதல் நான்கு சீர்களில் வெண்டளை அமைந்திருக்கும். அடியின் ஈற்றிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டாளை அமைய வேண்டியதில்லை

 

ஐந்தாம் சீர் விளங்காயாக அமைய வேண்டும்.

 

முதல் நான்கு சீர்களில் ஈரசை சீர்களும், மாங்காய்ச் சீர்களும் வரும். முதல் நான்கு சீர்களில் விளங்காய்ச் சீர் வராது.

 

பாடல் ஏகாரத்தில் முடிய வேண்டும்.

 

நேரசையில் தொடங்கினால் ஓரடியில் 16 எழுத்துகளும் நிரையசையில் தொடங்கினால் 17 எழுத்துகளும் பெறும்.

 

எடுத்துக்காட்டுப் பாடல்

 

அள்ளிக் கொடுக்கின்ற செம்பொனும் ஆடையும் ஆதரவாக்

கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்ததல்லால்

துள்ளித் திரிகின்ற காலத்தி லேயென் துடுக்கடக்கிப்

பள்ளிக்கு வைத்தில னேதந்தை யாகிய பாதகனே!

[தனிப்பாடல்]

 

விழிக்குத் துணைதிரு மெய்ம்மலர் பாதங்கள்! மெய்ம்மைகுன்றா

மொழிக்குத் துணைமுரு காவெனும் நாமங்கள்! முன்புசெய்த

பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும்! பயந்ததனி

வழிக்குத் துணைவடி வேலும்செங் கோடன் மயூரமுமே!

 [கந்தரலங்காரம்]

 

தனந்தரும் கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா

மனந்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா

இனந்தரும் நல்லன எல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே

கனந்தரும் பூங்குழ லாளபி ராமி கடைக்கண்களே!

[அபிராமியந்தாதி]

 

முன்னமுன் அன்னை முலையூட்டி மையிட்டு மூக்குச்சிந்திக்

கன்னமும் கிள்ளிய நாளல்ல வேயென்னைக் காப்பதற்கே

அன்னமும் மஞ்ஞையும் போல்இரு பெண்கொண்ட ஆண்பிள்ளைநீ

இன்னமும் சின்னவன் தானோசெந் துாரில் இருப்பவனே!

[பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான்]

 

கட்டளைக் கலித்துறையில் ஐந்தாம் சீராக வரும் விளங்காய் வரும் இடங்களில்  மாங்கனிச் சீரும்,  இறுதியில் மூன்று நேரசைகளை உடைய மாந்தண்பூச் சீரும் அருகி வருவதுண்டு. மேலுள்ள அபிராமி அந்தாதியில் 'கடைக்கண்களே' என்று மாங்கனியும், படிக்காசுத் தம்பிரான் பாடலில் 'மூக்குச்சிந்தி' நாலசைச் சீரும் வந்தன. விளங்காயாக வருவதே சிறப்பாகும்.

 

அன்னைத் தமிழே! அமிழ்தின் சுவையே! அருள்வடிவே!

முன்னை முகிழ்த்த முனிவன் வளர்த்த முதுமொழியே!

என்னை மயக்கும் எழிலாய் மிளிரும் இளையவளே!

உன்னை எனதார் உயிரெனக் காப்பேன் உவந்தினியே!

[பாட்டரசர்]

 

இந்தக் கட்டளைக் கலித்துறை, நேரசையில் தொடங்கியதால் அடிக்கு ஒற்றுகள் நீக்கி 16 எழுத்துக்கள் பெற்றது.

 

அறமே விளையும்! அருளே பொழியும்! அறிவொளிரும்!

மறமே முழங்கும்! மதுவே வழங்கும்! மனமினிக்கும்!

திறமே யளிக்கும்! செயலே சிறக்கும்! திருக்கொடுக்கும்!

புறமே அகமே புவியே வியக்கும் புகழ்த்தமிழே!

[பாட்டரசர்]

 

இந்தக் கட்டளைக் கலித்துறை நிரையசையில் தொடங்கியதால் அடிக்கு ஒற்றுகள் நீக்கி 17 எழுத்துக்கள் பெற்றது.

 

மேற்கண்ட கட்டளைக் கலித்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

02.12.2023