கண்ணாடிக் காரி
1.
கண்ணாடி போட்டொளிரும் கட்டழகு கன்னி!
கவிமனத்தைப் பின்னுகிறாள் கணக்காக எண்ணி!
தண்ணாழி ஆழத்தில் கண்டெடுத்த அமுதோ?
தளிர்மேனி மதுவூறி மணக்கின்ற குமுதோ?
பெண்ணாகி வந்தவுருப் படைத்தவனின் விந்தை!
பிஞ்சிவிரல் எனைத்தழுவத் தினமேங்குஞ் சிந்தை!
புண்ணாகி வாடுமனம் அவளழகைக் கண்டு!
பொன்முகத்தைப் பூவென்று நம்புதடா வண்டு!
2.
கார்நிலையில் பூத்தகுழல் கனவுகளைச் சூட்டும்!
காலழகும் கையழகும் கவியமுதை யூட்டும்!
நீர்நிலையில் குடமேந்தி வருகின்ற காட்சி!
நெஞ்சத்துள் எந்நொடியும் காமனவன் ஆட்சி!
தேர்நிலையில் அலங்காரம் திருமகளின் தோற்றம்!
தேவியவள் சிரிப்பழகே என்..துயரை மாற்றும்!
ஏர்வயலில் உழுவதுபோல் காதலினை யுழுதாள்!
எப்பொழுதும் எனைவேண்டி ஈசனையே தொழுதாள்!
3.
பொன்மாலை அணிமணிகள் அவள்மார்ப்பைத் தழுவும்!
புலவனுளம் பெச்செரிப்பில் தினம்பொங்கி யழுவும்!
மின்னாலைத் தறியாக எண்ணங்கள் ஓடும்!
மின்னலிடை செந்தமிழின் வண்ணங்கள் சூடும்!
இன்மாலை வெண்ணிலவு மேகத்துள் மறையும்!
என்னவளின் முன்னாலே அதனழகு குறையும்!
நன்னாளை எதிர்பார்த்துக் காதலுயிர் ஏங்கும்!
நங்கைதரும் தரிசனத்தால் எவ்வாறு துாங்கும்!
4.
வளையோசை காதுக்குள் சங்கீத மீட்டும்!
மணியோசை தந்ததன தாளங்கள் சூட்டும்!
கலையோசை யத்தனையும் கையசைவு காட்டும்!
கவியோசைச் சந்தங்கள் காலசைவு தீட்டும்!
அலையோசை யழகாகக் கற்பனைகள் மூட்டும்!
அகத்தாசை தான்பெருகி ஆரமுதை யூட்டும்!
தலையோசை கொலுசோசை ஆகியெனை வாட்டும்!
தனியோசை முத்தங்கள் தாகத்தைக் கூட்டும்!
5.
பொட்டழகு தந்திடுமே புதுமைபல கோடி!
புடவையெழில் தந்திடுமே தேன்சுளையை வாரி!
மொட்டழகு தந்திடுமே மதுக்குடத்தைப் பொங்கி!
மூக்கழகு தந்திடுமே புதுக்கருத்தைச் சுங்கி!
கட்டழகு தந்திடுமே நினைவுகளை மின்னிக்
கண்ணழகு தந்திடுமே கனவுகளைப் பின்னி!
பட்டழகு தந்திடுமே இளையவளின் மேனி
பகலிரவாய்த் தந்திடுமே இன்பத்தைப் பேணி!
6.
காதோரம் அணிந்துள்ள கல்லொளிரும் கம்மல்!
கண்டதனைப் பாடுவதில் நானன்றோ செம்மல்!
மாதோரம் சேருகின்ற பொருள்வாசம் வீசும்!
மார்போரம் சேருகின்ற மணி..கவிதை பேசும்!
ஆதாரம் ஆவதுபோல் பதிலொன்று சொல்லும்!
ஆகாரம் போலென்னை யுண்டுசுவை கொள்ளும்!
சேதாரம் ஆகாமல் வேண்டுகிறேன் காப்பு!
தேவியவள் பேரழகு செழித்தமிழாம் தோப்பு!
7.
ஒட்டாமல் இருக்கின்ற ஒட்டியாணம் ஏனோ?
ஓரவிழிப் பார்வையிலே உள்ளதொரு மானோ?
கொட்டாமல் பூத்தாடும் வண்ணமலர்ச் சோலை!
கோதையுடல் தனைத்தழுவி மணக்குதடி சேலை!
கட்டாமல் சுற்றிவரும் என்னுடைய நெஞ்சம்!
கன்னிமுகம் கண்டவுடன் கம்மென்று கொஞ்சும்!
தட்டாமல் வந்திடுமோ கைகளிடும் ஓசை!
தழுவாமல் அடங்கிடுமோ காதலிடும் ஆசை!
8.
மெட்டெடுத்துப் பாடுகிறேன் மெட்டியொலி சந்தம்!
மேனகையும் ஊர்வசியும் அவளுடைய சொந்தம்?
பட்டெடுத்து வருகின்றேன் அன்பலைகள் தொடரும்!
பார்வையெழில் பதிவாகிப் பலகவிகள் படரும்!
தட்டெடுத்து நிற்கின்றேன் உணவுதர வேண்டும்!
தங்கமெனக் கொண்டவுடல் இன்பத்தைத் துாண்டும்!
எட்டெழுத்து மந்திரமாய் மங்கைபெயர் ஆகும்!
இரவெல்லாம் விழிப்புற்றுக் காதலுயிர் வேகும்!
9.
மூக்குத்தி நல்லழகில் மோகநிலை கூடும்!
முன்னழகும் பின்னழகும் முத்தமிழைச் சூடும்!
நாக்கத்தி மொழிகொண்டு வெட்டுகிறாள் என்னை!
நான்..போதை ஏறிடவே காட்டுகிறாள் கண்ணை!
பூச்சட்டி ஏந்திவரும் காட்சியினைக் கண்டு
புல்லரித்துப் புடைக்குமுடல் புதுமைநிலை கொண்டு!
தீச்சட்டி முன்னாலே தருகின்றேன் வாக்கு!
சீா்கட்டி மணந்திடுவேன் சேர்துயரைப் போக்கு!
10.
தோற்றழுவும் உடைகண்டு சுதிமீட்டும் உள்ளம்!
தோட்டழுவும் பைகண்டு மதிகூட்டும் வெல்லம்!
காற்றழுவும் அடிகண்டு மெய்ம்மயங்கி நிற்கும்!
கார்தழுவும் முடிகண்டு கலைபலவுங் கற்கும்!
சேற்றழுவும் விழிகண்டு சிக்கிமனம் வாடும்!
சீர்தழுவும் மொழிகண்டு சொக்கிமனம் ஆடும்!
மேற்றழுவும் பொருள்கண்டு சாற்றியுள்ள பாடல்
வேற்றழுவும் தமிழ்மறவன் வாழுகின்ற கூடல்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச்சிறகம்.
23.12.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire