samedi 2 décembre 2023

கலித்துறை - 1


 கலித்துறை

 

ஐஞ்சீர் அடிகள் நான்கு அளவு ஒத்து ஓர் எதுகையில் வருவது கலித்துறையாம். அது கட்டளைக் கலித்துறை என்றும் கலிநிலைத் துறை என்றும் இருவகையாம். [கலிநிலைத்துறை, காப்பியக் கலித்துறை என்றும் அழைக்கப்படும்.]

 1.

கட்டளைக் கலித்துறை நேரசையில் தொடங்கினால் ஓரடிக்கு எழுத்துப் பதினாறும், நிரையசையில் தொடங்கினால் ஓரடிக்கு எழுத்துப் பதினேழும் பெற்றுவரும்.

 2.

அறிமறியாகாமல், எழுத்து வரையறையப்படாமல் வருவது கலிநிலைத்துறையாம்.

பலவகையாகக் கலிநிலைத்துறை அமையும். ஒவ்வொன்றிலும் இன்ன இடத்தில் இன்ன சீர் வரவேண்டும்  என்ற விதிமுறைகள் உண்டு.

 கட்டளைக் கலித்துறை, கோவைக் கலித்துறை யெனவும், திலதக் கலித்துறை யெனவும் இருவகைத்து என்பர்.

3.

கோவைக் கலித்துறை, ஈற்றடி மூன்றாம் சீர்ச்சொல்  பக்குவிட்டு முதற்சீரோடு ஒன்றி ஒழுகிய ஓசையுடன் வரும். இரண்டாம் நான்காம் சீர்களும் அவ்வாறு ஓசை பிரிந்தொழுகின் மிக்க சிறப்புடையதாம்.

4.

ஈற்றடி ஐந்து சீரும் வகையுளி இன்றி நிகழ்வது திலதக் கலித்துறையாம்

 5.

அடிமறியாய் ஐஞ்சீர் நான்கடியாய் வருவது அறிமறி மண்டிலக் கலித்துறையாம். இப்பாடலில் யாதோர் அடியை எடுத்து முதல் நடு கடையாக உச்சரிப்பினும் ஓசையும் பொருளும் மாறுபடாது அமையும்.

இலக்கணக் குறிப்பு

நெடிலடி நான்காய் நெறிப்பட நிகழ்வது

கலித்துறை

[இலக்கண விளக்கம் - 739]

ஐஞ்சீர் முடிவின் அடித்தொகை நான்மையொடு

எஞ்சா மொழிந்தன எல்லாம் கலித்துறை

[காக்கை]

ஐஞ்சீர் நான்கடி கலித்துறை யாகும்

[அவிநயம்]

கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது

[யாப்பருங்கலக் காரிகை - 34]

நெடிலென் றுரைத்த

பேரடிநான்கு கலித்துறை யாமென்பர்

[வீர சோழியம்- 123]

கலித்துறை நெடிலடி நான்கொத்து அவற்றுள்

இடைநேர் வெண்சீர் இயற்சீர் முதல்நான்கு

இடைநிரை வெண்சீர் இறுதிச்சீர் மோனையாய்க்

கடையே கொண்டுஇறும் கட்டளைக் கலித்துறை

[தொன்னுால் - 241]

ஐஞ்சீ ரடிநான் காய்அள வொத்து

வருவது கலித்துறை யாம்

[முத்து வீரியம் - 50]

 

----------------------------------------------------------------------------------------------------------

 

கலித்துறை மேடை - 1

 

கட்டளைக் கலித்துறை

 

ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.5 ஆம் சீர்களில் மோனை.

 

முதல் நான்கு சீர்களில் வெண்டளை அமைந்திருக்கும். அடியின் ஈற்றிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டாளை அமைய வேண்டியதில்லை

 

ஐந்தாம் சீர் விளங்காயாக அமைய வேண்டும்.

 

முதல் நான்கு சீர்களில் ஈரசை சீர்களும், மாங்காய்ச் சீர்களும் வரும். முதல் நான்கு சீர்களில் விளங்காய்ச் சீர் வராது.

 

பாடல் ஏகாரத்தில் முடிய வேண்டும்.

 

நேரசையில் தொடங்கினால் ஓரடியில் 16 எழுத்துகளும் நிரையசையில் தொடங்கினால் 17 எழுத்துகளும் பெறும்.

 

எடுத்துக்காட்டுப் பாடல்

 

அள்ளிக் கொடுக்கின்ற செம்பொனும் ஆடையும் ஆதரவாக்

கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்ததல்லால்

துள்ளித் திரிகின்ற காலத்தி லேயென் துடுக்கடக்கிப்

பள்ளிக்கு வைத்தில னேதந்தை யாகிய பாதகனே!

[தனிப்பாடல்]

 

விழிக்குத் துணைதிரு மெய்ம்மலர் பாதங்கள்! மெய்ம்மைகுன்றா

மொழிக்குத் துணைமுரு காவெனும் நாமங்கள்! முன்புசெய்த

பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும்! பயந்ததனி

வழிக்குத் துணைவடி வேலும்செங் கோடன் மயூரமுமே!

 [கந்தரலங்காரம்]

 

தனந்தரும் கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா

மனந்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா

இனந்தரும் நல்லன எல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே

கனந்தரும் பூங்குழ லாளபி ராமி கடைக்கண்களே!

[அபிராமியந்தாதி]

 

முன்னமுன் அன்னை முலையூட்டி மையிட்டு மூக்குச்சிந்திக்

கன்னமும் கிள்ளிய நாளல்ல வேயென்னைக் காப்பதற்கே

அன்னமும் மஞ்ஞையும் போல்இரு பெண்கொண்ட ஆண்பிள்ளைநீ

இன்னமும் சின்னவன் தானோசெந் துாரில் இருப்பவனே!

[பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான்]

 

கட்டளைக் கலித்துறையில் ஐந்தாம் சீராக வரும் விளங்காய் வரும் இடங்களில்  மாங்கனிச் சீரும்,  இறுதியில் மூன்று நேரசைகளை உடைய மாந்தண்பூச் சீரும் அருகி வருவதுண்டு. மேலுள்ள அபிராமி அந்தாதியில் 'கடைக்கண்களே' என்று மாங்கனியும், படிக்காசுத் தம்பிரான் பாடலில் 'மூக்குச்சிந்தி' நாலசைச் சீரும் வந்தன. விளங்காயாக வருவதே சிறப்பாகும்.

 

அன்னைத் தமிழே! அமிழ்தின் சுவையே! அருள்வடிவே!

முன்னை முகிழ்த்த முனிவன் வளர்த்த முதுமொழியே!

என்னை மயக்கும் எழிலாய் மிளிரும் இளையவளே!

உன்னை எனதார் உயிரெனக் காப்பேன் உவந்தினியே!

[பாட்டரசர்]

 

இந்தக் கட்டளைக் கலித்துறை, நேரசையில் தொடங்கியதால் அடிக்கு ஒற்றுகள் நீக்கி 16 எழுத்துக்கள் பெற்றது.

 

அறமே விளையும்! அருளே பொழியும்! அறிவொளிரும்!

மறமே முழங்கும்! மதுவே வழங்கும்! மனமினிக்கும்!

திறமே யளிக்கும்! செயலே சிறக்கும்! திருக்கொடுக்கும்!

புறமே அகமே புவியே வியக்கும் புகழ்த்தமிழே!

[பாட்டரசர்]

 

இந்தக் கட்டளைக் கலித்துறை நிரையசையில் தொடங்கியதால் அடிக்கு ஒற்றுகள் நீக்கி 17 எழுத்துக்கள் பெற்றது.

 

மேற்கண்ட கட்டளைக் கலித்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

02.12.2023

Aucun commentaire:

Enregistrer un commentaire