dimanche 21 février 2021

ஆனந்தக் களிப்பு

 


வாராயோ வெண்ணிலாவே!

[ஆனந்தக் களிப்பு]

 

எடுப்பு

 

வெண்மதி வந்தது விண்ணில் - பொங்கித்

தண்ணதி பாயுது தண்டமிழ்ப் பண்ணில்!

                                             [வெண்மதி]

 

முடிப்பு

 

பொன்முகப் பேரெழில் காட்டி - முன்னே

   போகிறாள் கொஞ்சிடும் ஆசையைக் கூட்டி!

என்னகக் காதலை மூட்டி - நாளும்

   ஏங்கிடச் செய்கிறாள் இன்னிசை மீட்டி!

                                             [வெண்மதி]

 

அன்னத்தின் நன்னடை கொண்டாள் - என்றன்

   அங்கத்தைப் பார்வையால் அள்ளியே உண்டாள்!

கன்னத்தின் மென்மலர்ச் செண்டாள் - கவி

   கம்பனின் சொற்களில் காதலைக் கண்டாள்!

                                             [வெண்மதி]

 

பஞ்செனும் நெஞ்சினை உற்றாள் - இன்றேன்

   பாகெனும் பேச்சினை யாரிடம் கற்றாள்!

பிஞ்செனும் மென்விரல் பெற்றாள் - காதல்

   பித்தேற வாட்டிடும் பெண்கொண்ட நற்றாள்!

                                             [வெண்மதி]

 

எத்தனை எத்தனை எண்ணம் - வானில்

   ஏறியே நீந்திடும் பற்பல வண்ணம்!

தித்திக்கும் இன்மதுக் கிண்ணம் - அவள்

   தீண்டிடத் தீண்டிடத் தேன்சுவை நண்ணும்!

                                             [வெண்மதி]

 

 

மூடி மறைப்பதும் ஏனோ? - மனம்

   வாடிக் கிடப்பதும் வாஞ்சையால் தானோ?

ஓடிக் குதிப்பதும் மானோ? - இங்குப்

   பாடிப் படைப்பதும் பைந்தமிழ்த் தேனோ?

                                             [வெண்மதி]

 

கண்களில் வண்டுகள் மேயும் - தினம்

           கண்டதும் கற்பனை வெள்ளமாய்ப் பாயும்!

பெண்களின் உள்ளங்கள் சாயும் - அவள்

           பேரெழில் தேனுடன் ஒன்றாகித் தோயும்!

                                             [வெண்மதி]

 

சிந்தனை ஓடுமே தேடி - அவள்

           செவ்விதழ்ப் புன்னகைச் சீரெழில் பாடி!

கந்தனை வேண்டுமே ஓடி - அவள்

           கைகளில் உள்ளன சொர்க்கமே கோடி!

                                             [வெண்மதி]

 

ஆசைகள் நெஞ்சத்தைத் துாண்டும் - இந்த

           அண்டத்தைத் துள்ளியே எண்ணங்கள் தாண்டும்!

ஓசைகள் பற்பல பூண்டும் - பாடி

           ஓங்காரி சிங்காரி நல்லருள் வேண்டும்!

                                             [வெண்மதி]

 

நல்லிருள் வந்துயிர் வேகும் - இன்ப

           நற்கனாக் கண்டுளம் புண்ணாக ஆகும்!

நில்லிருள் காதலை ஏகும் - முல்லை

           நேரிழை பல்லெழில் பார்த்துடன் சாகும்!

                                             [வெண்மதி]

 

பொங்கியே கூத்திடும் ஏக்கம் - புலமை

           தங்கியே பூத்திடும் தண்டமிழ் ஆக்கம்!

தங்கமே கொண்டகம் பூக்கும் - என்றன்

           அங்கமே துாளாக ஆசைகள் தாக்கும்!

                                             [வெண்மதி]

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
29.02.2020.

ஆனந்தக் களிப்பு

சிந்துப்பா மேடை - 15


 

நீர்மேல்கு மிழிஇக் காயம் - இது

நில்லாது போய்விடும் நீயறி மாயம்

பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்

பற்றாதி ருந்திடப் பண்ணும்உ பாயம்.

                                            

[கடுவெளிச்சித்தர்]

 

இஃது 'ஆனந்தக் களிப்பு' என்னும் சிந்துப்பா.  ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். 'நீர்மேல் ' என்பது முதல்  'மாயம்'  என்பது வரை ஓரடி. ஒவ்வொரு சீரும் மூன்று உயிர்களைக் கொண்டிருக்கும். மூன்றாம் சீரில் இரண்டு உயிரே இருந்தாலும் மற்றும் ஓர் உயிர் அளவு அது நீண்டு இசைக்கும். அதன்பின் தனிச்சொல்லைப் பிரித்துக்காட்டும் சிறுகோடு. அதன்பின் முன் சீரின் இறுதி உயிரே மேலும் ஓர் உயிர் அளவு நீண்டு இசைக்கிறது. அதன்பின் இரண்டு உயிர் உள்ள நான்காம் சீா்.  எட்டாம் சீரும்  இரண்டு உயிர். அதுவும் மேலும் ஓர் உயிர் அளவு  நீண்டு இசைக்கிறது.

 

இத்தகைய இரண்டு அடிகள் ஒரே எதுகையில் அமைந்து, ஒவ்வோர் அடியிலும் ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை பெறுவது ஒரு கண்ணி. அடிதோறும் மூன்று எட்டாம் சீர்களில் காயம், மாயம், நேயம், பாயம், என இயைபு அமைந்து வருதல் சிறப்பு.    

 

ஆனந்தக் களிப்பின் இலக்கணம்

 

கும்மி போல மும்மையில் வரினும்

அடியின் இறுதிசேர் அசைநீட் டத்தைத்

தனிச்சொல் முன்னர்த் தாங்கி வருவது

ஆனந்தக் களிப்பென் றறையப் படுமே

 

[முனைவர் இரா. திருமுருகனார், சிந்துப்பாவியல் - 43 ஆம் நுாற்பா]

 

கடுவெளிச் சித்தரின் 'பாபம் செய்யாதிரு மனமே', தாயுமானாரின் 'சங்கர சங்கர சம்பு', வடலுார் வடலுார் வள்ளலின் 'ஞான மருந்து', 'சிவசிவ சோதி', 'சோதியுள் சோதி', மகாகவி பாரதியாரின் 'வந்தே மாதரம் என்போம்', 'தீராத விளையாட்டுப் பிள்ளை',  'ஆதி சிவன் பெற்று விட்டான்' பாவேந்தரின் 'தலைவாரிப் பூச்சூடி உன்னை' குமுதம் திரைப்படத்தில் 'கல்லிலே கலைவண்ணம் கண்டான்' ஆகிய பாடல்கள் ஆனந்தக் களிப்புகளே. அவற்றைப் பலமுறை பாடி ஆனந்தக்களிப்பின் ஓசை அமைதியை உணரலாம்.

 

விரும்பிய பொருளில் ஆனந்தக் களிப்பு ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்,

கம்பன் கழகம், பிரான்சு,

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

21.02.2021.

jeudi 18 février 2021

நான்கடி நொண்டிச்சிந்து


இயற்கையைக் காப்போம்

(நான்கடி நொண்டிச்சிந்து)

 

நாற்றுவயல் கொண்டநில மேooo  oo-இன்று

நாறுநிலை மேவிவர மாறுநிலை யேன்ooo?

ஊற்றுநிலை கொண்டகுள மேooo  oo-உற்ற

உன்னழகை மூடிமனை கண்டநிலை யேன்ooo?

காற்றுநிலை கொண்டபொழி லேooo  oo-உன்றன்

கட்டழகு முற்றுநலம் கெட்டநிலை யேன்ooo?

ஆற்றுநிலை கெண்டதல மேooo o-மணலை

ஆட்சியரே கள்ளமிடும் காட்சிநிலை யேன்ooo?

 

பச்சைநிறம் உற்றவய லேooo  oo-உன்றன்

பட்டுடலில் வீடுகளைக் கட்டுநிலை யேன்ooo?

இச்சையுடன் கூவுகுயி லேooo  o-உன்னினம்

ஏற்புடனே வாழவொரு தோப்புமிலை யேooo?

மொச்சைவயல் தந்தஉழ வேooo  oo-மண்ணில்

மூச்சுவிட நல்லதொரு பேச்சுமிலை யேooo?

கச்சையுடன் நீந்துநிலை யேooo  oo-உன்னைக்

காக்கவழி வந்துலகில் பூக்கவிலை யேooo?

 

தென்னைமரம் ஓங்குபதி யேooo  oo-முன்னோர்

தேடுவளம் அத்தனையும் மூடுநிலை யேன்ooo?

அன்னையெனக் காத்தபுர மேooo  oo-உன்றன்

ஆக்கமெலாம் ஆட்சியர்கள் போக்குநிலை யேன்ooo?

தன்னையிடும் வீரமர பேooo  oo-மானம்

தாழுநிலை கண்டுதினம் வீழுநிலை யேன்ooo?

பொன்னைனிகர் கொண்டதமி ழேooo  oo-பொங்கிப்

பூத்தபுகழ் அத்தனையும் நீத்தநிலை யேன்ooo?

 

சாதிவெறி ஏறுநிலை யேன்ooo  o-மதமாம்

சண்டைவெறி கொண்டுபுவி நொண்டுநிலை யேன் ooo?

நீதிநெறி மாறுநிலை யேன்ooo  o-கொடுமை

நீண்டுதுயர் இவ்வுலகை ஆண்டுவர லேன்ooo?

சோதிநெறி மாயுநிலை யேன்ooo  oo-இங்குத்

துாயவர்கள் வாடுகிற மாயநிலை யேன்ooo?

மோதிவெறி மீறுநிலை யேன்ooo  oo-ஆசை

மோகவெறி முற்றிவருந் தாகநிலை யேன்ooo?

 

வெள்ளையர்கள் போனபிற கும்ooo  oo-நம்மைக்

கொள்ளையிட ஆளுகிற தொல்லைநிலை யேன்ooo?

பிள்ளையர்கள் கல்வியிட மேooo -பணத்தைப்

பேணுகிற துன்வழியைப் பூணுமிழி  வேன்ooo?

கிள்ளையுறும் ஆலமர மேooo  oo-உன்றன்

கீர்த்திகளைச் சொல்லவொரு வார்த்தையிலை யேooo!

வள்ளையிசை இல்லையினி யேooo  oo-மண்ணின்

வாசமலர் வீசுமணம் பேசவிலை யேooo!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

14.02.2021

ஓரடி நொண்டிச்சிந்து


 கண்ணழகு காரிகை

(ஓரடிநொண்டிச்சிந்து)

 

1.

என்றனுயிர் வாழுகவி யாள்ooo  oo-இன்பம்

ஏந்திவரும் தென்றலென  நீந்திவரு வாள்ooo

 

2.

முல்லைமலர்ப் பற்களுடை யாள்ooo  oo-என்றன்

மூளையினை மூடுகிற சேலையணி வாள்ooo

 

3.

அன்னநடை பின்னுமெழி லாள்ooo  oo-வந்தே

ஆசையுறச் சந்தமொழி ஓசைதரு வாள்ooo 

 

4.

தேனொழுகும் சொற்களுடை யாள் ooo  oo-தினம்

தேடிவர மூடிமுகம் ஓடிமறை வாள்ooo

 

5.

வண்ணவிழி கொண்டவழ காள்ooo  oo-வந்தே

மாட்சியுறச் செந்தமிழை ஆட்சிபுரி வாள்ooo

 

6.

முத்தொளிரும் மூoக்குடை யாள்ooo  o-கனவை

மூட்டுகிற வண்ணமுடன் ஆட்டமிடு வாள்ooo

 

7.

பஞ்சியுடல்  பிஞ்சிவிர லாள்ooo  oo-உயிரைப்

பற்றுகிற காதலிசை கற்றுமகிழ் வாள்ooo

 

8.

சண்டையிடும் கெண்டைவிழி யாள்ooo  oo-நாளும்

தங்கிமனம் இன்பமுறப் பொங்கிவழி வாள்ooo

 

9.

மேகமெனக் கூந்தலுடை யாள்ooo  oo-உயிருள்

மேவிநடம் ஆடுகிற தேவியெழி லாள்ooo

 

10.

தோகைவிழி கோலமுடை யாள்ooo  oo-மான்போல்

துள்ளிவரும் என்னுயிரைத் தள்ளிவிடு வாள்ooo

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

14.02.2021

வெண்பா மேடை - 203

  

வெண்பா மேடை - 203       

 

தலையாகு இயைபு வெண்பா!

 

மீனாடும் கண்ணழகு, விந்தைமொழி, தேனுாற்று!

மானாடும் துள்ளல், மலர்பார்வை, - தேனுாற்று!

மூத்தாடும் கற்பனை மோகத்தின் தேனுாற்று!

பூத்தாடும் புன்னகை..தே னுாற்று!

 

மொழிகாக்க வேண்டும் முதன்மை விழிப்பு!

வழிகாக்க வேண்டும் மதியின் - விழிப்பு!

தளைகாக்க வேண்டும் தமிழ்ப்பா விழிப்பு!

விளைகாக்க வேண்டும் விழிப்பு!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

 

நான்கு அடிகளில் ஈற்றுச்சீர் முற்றும் ஒன்றுவது தலையாகு வெண்பா.  மேலுள்ள  முதல் வெண்பாவில் 'தேனுாற்று' என நான்கு அடிகளிலும் தலையாகு இயைபு பெற்றுள்ளது. 'விழிப்பு'  என்ற இயைபை இரண்டாம் வெண்பா பெற்றுள்ளது.

 

இவ்வாறு அமையும் தலையாகு இயைபு நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். [இவ்வெண்பா இலக்கிய உலகிற்கு என்னுடைய புதிய உருவாக்கம்]

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

18.02.2021